(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5  தொடர்ச்சி)

தலைப்பு-நட்பிற்குள் அடங்கிற்று, கருமலைத்தமிழாழன் ; thaliappu_methini_natpu_karumalaithamizhazhan

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 5/5

 

இந்தியாவில்   மட்டுமன்றி  பிரான்சு  நாட்டில்

இயங்குகின்ற   பேரவைதான்   அசாம்  தன்னில்

சந்தமிகு   துவக்கவிழா   காணு   கின்றோம்

சார்ந்திருக்கும்   மேகாலய   மாநி  லத்தில்

நந்தமுடன்   நாளையங்கே   துவக்கு  கின்றோம்

நன்றாகப்   பேரவைதான்   வளர்வ   தாலே

சிந்தனைகள்   ஒன்றாகி   உலக  மெல்லாம்

சிறப்பாக   நட்புறவோ   ஓங்கும்  நன்றாய் !

 

வெற்றுரைகள்   அமர்ந்துபேசி   கலைவ  தன்று

வேதனைகள்  தீர்க்கின்ற   செயல்கள்  செய்து

நற்றொண்டாய்   கல்விகற்க   இயலா   ஏழை

நலிந்தோர்க்குக்   கற்கபணம்   அள்ளித்   தந்தும்

உற்றநோயைத்   தீர்க்கதொகை   அள்ளித்   தந்தும்

உயர்வான  தொண்டுதனை   நாளும்   செய்து

மற்றபல   சங்கங்கள்   போல   வன்றி

மனிதநேயச்   சங்கமிந்த   பேனா   சங்கம் !

 

 

காழ்ப்பில்லா   நட்பிந்த   பேனா  நட்பு

கருணையுள்ள  நட்பிந்த   பேனா   நட்பு

வீழ்ந்திட்ட   மனிதத்தை   நெஞ்சிற்   குள்ளே

விளைவிக்கும்   நட்பிந்த   பேனா  நட்பு

வாழ்த்துகளை   மறக்காமல்  பிறந்த  நாளில்

வழங்குகின்ற   நட்பிந்த  பேனா  நட்பு

சூழ்ந்திட்ட   அன்பாலே   இன்ப  துன்பில்

சுற்றமாகும்   நட்பிந்த   பேனா  நட்பு !

 

ஆண்களொடு   பெண்களினை   நட்பாய்  ஆக்கும்

அறிஞரொடு   பாமரரை  நட்பாய்  ஆக்கும்

காண்கின்ற   இளைஞரினை   முதியோ   ரோடு

கருத்துகளைப்   பகிர்ந்துகொளும்  நட்பாய்  ஆக்கும்

கூன்மனத்தை  நிமிரவைத்து   விசால   மாக்கி

கூடிவாழும்   எண்ணத்தை  நமக்க  ளிக்க

வான்வழியில்   வந்துநமின்  வீட்டிற்   குள்ளே

வளர்க்கின்ற  நட்புதமை   வாழ்த்து  வோமே !

  • பாவலர் கருமலைத்தமிழாழன்
  • இந்தியப்  பேனா  நண்பர்  பேரவை

    கவியரங்கம்

    இடம் தமிழ்ச் சங்கக் கட்டடம், கௌகாத்தி (அசாம்) 

    ஆவணி 05, 2047 / 21 -08 – 2016