(காலத்தின் குறள் பெரியார் :2 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி)

காலத்தின் குறள் பெரியார் 

அதிகாரம் 3. வள்ளுவர் வாழ்த்து.

 

  1. அறம்பொருள் காமம் பகுத்துத் தொகுத்த

திறமதைப் போற்றும்இப் பார்.

  1. அரும்பாவாய் அஃதும் அறப்பாவாய் ஈந்து

பெரும்பேறாய் வாய்த்தாரைப்  பேண்.

  1. குறும்பா குறள்வெண்பா கொண்டுநாம் உய்யப்

பெரும்பா உரைத்தாரைப் பேண்.

  1. வள்ளுவப் பேராசான் வாய்மொழி வையகம்

உள்ளவரை வாழும் நிலைத்து.

  1. மானுடம் தான்சுவைக்கத் தேன்குடம் கொண்டுவந்த

மானுடன் வள்ளுவனை வாழ்த்து.

6. ஒன்றேமுக் காலடியில் வாழ்வளந்தான் வெற்றியை

இன்றுவரை வென்றதுயார் இல்.

  1. ஆருரைத்தார் வள்ளுவன்போல் கேட்டே வழிமொழிந்து

பாருரைக்க நாம்பரப்பு வோம்.

8. மன்னர் அவையில் அரங்கேற்றம் செய்யாமல்

மக்களவை ஏற்றிவைத் தான்.

  1. வலியுறுத்தல் நல்லறமே வாழ்வில் அதனை

நிலைநிறுத்த நிற்கும் புகழ்.

10.தனக்குவமை இல்லாதான் யாரெனக் கேட்பார்க்குத்

தன்னையே தந்துநின் றான்.

 

(தொடரும்)

ச.ச.வேலரசு (எ) தமிழரசன்:

காலத்தின் குறள் பெரியார்