ஊன்விற்று வாழ்வதும்தான் வாழ்வோ?

பிணந்தின்னிக் கூட்டமடா இந்தக் கூட்டம்
பிழைப்பிற்கு மானமின்றி விழுவர் காலில்!
பணத்தையெண்ணிச் சுரண்டித்தான் மானம் கெட்டார்
பாமரரின் உயிர்குடித்தும் லாபம் காண்டார்!
குணமிழந்தே நாய்களைப்போல் அலைந்து சுற்றி
குலம்செழிக்க குடிகெடுக்க தலைவர் ஆனார்
மணந்துகொண்ட இல்லாளோ இணங்கா விட்டால்
மக்களுக்கு நல்லவை செய்து வாழ்வார்!

பிச்சைக்கே வாக்குவாங்கி கோட்டை போக
பாட்டாளி வயிற்றுக்கோ செய்த தென்ன?
இச்சைக்காம் நாற்காலி சண்டை, போட்டி
இடுப்பிலுள்ள வேட்டிக்கோ கறைகள் உண்டு!
எச்சையிலை நாய்களிடம் பட்ட பாடாய்
எங்களுக்குத் திண்டாட்டம் விடிய லில்லை!
சச்சுவுக்கு வாய்த்தவர்காள் ஆட்சி எங்கே
தட்டுக்குச் சோறுவரும் நாளும் எங்கே!

கூன்வளைந்தே கும்பிடத்தான் கற்ற தெங்கே
குரங்கு கை மாலையானோம் உங்கள் கையில்!
ஊன்விற்று வாழ்வதும்தான் வாழ்வோ சொல்வீர்
உண்மையிலே பெண்ணுக்கோ அடிமை நீவீர்!
வான்பொய்க்கும் வறண்டுவிடும் நிலங்கள் காயும்
மாய்ந்துபோகும் பயிர்களுமே உயிர்கள் போலே!
தான்வாழப் பிறர்வாழும் எண்ணம் வேண்டும்
தரணியாளும் சரித்திரமோ உன்னைப் பேசும்!

-கவியருவி. கு. நா. கவின்முருகு,
துபாய்.

[ Dr. Murugavel.KN
IT Specialist
Julphar
Dubai ]