thamizhmozhi_thulanguka

இனிமைத் தமிழ்மொழி எமது — எமக்

கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!

கனியைப் பிழிந்திட்ட சாறு — எங்கள்

கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!

தனிமைச் சுவையுள்ள சொல்லை — எங்கள்

தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை!

நனி்யுண்டு நனியுண்டு காதல் — தமிழ்

நாட்டினர் யாவர்க்குமே தமிழ்மீதில்         (இனிமைத்)

தமிழ் எங்கள் உயிர் என்பதாலே — வெல்லுந்

தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே

தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத்

தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்

தமிழுண்டு தமிழ் மக்களுண்டு — இன்பத்

தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு

தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல

தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு!       (இனிமைத்)

– பாவேந்தர் பாரதிதாசன்