10.10.2026 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆசியவியல் நிறுவனத்தின் 45ஆம் ஆண்டு விழாவும், தரம் மிக்க நல்ல பல நூல்களின் வெளியீட்டு விழாவும் செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்திலுள்ள தனிநாயகம் அடிகளார் கலையரங்கில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது .

ஆசியவியல் நிறுவனத்தின் நிறுவனர், இயக்குநர் பேராசிரியர் முனைவர் சான் சாமுவேல் அவர்கள் இந்நிறுவனத்தின் தோற்றப் பணிகளையும் அருவினைகளையும் விளக்கிப் பேசினார். தமிழ் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் இந்நிறுவன முயற்சிகளைப் பாராட்டி ஐ.நா.க.அ.ப.அமைப்பின்(யுனெசுகோவின்) திட்டப்பணிகளின் வல்லுநர் குழு உறுப்பினராக இவர் இணைக்கப்பட்டதையும் இந்நிறுவனத்திலுள்ள சித்த மருத்துவம் தொடர்பான தமிழ் ஓலைச்சுவடிகளை உலகின் அரிய ஆவணங்களாக ஐநாகஅபண்பாட்டு அமைப்பு அறிவித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். இத்தகைய ஐ.நா.கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின்  தகுதிப்பாட்டைப் பெற்ற முதல் இந்திய நிறுவனம் ஆசியவியல் நிறுவனமே என்பதையும் அவர் விளக்கமாக எடுத்துரைத்தார்.

ஏராளமான தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கலந்து கொண்ட இந்த அரிய விழாவில் தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பாடு கிடைப்பதற்குரிய அனைத்து அடிப்படை ஆவணங்களைத் தமிழக அரசுக்கு உருவாக்கிக் கொடுத்தத்தையும் கி,பி, 2004இல் இத்தகுதிப்பாடு ஒன்றிய அரசால் வழங்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

கடந்த எட்டு ஆண்டுகளில் மொரிசியசு, இந்தியா, இங்கிலாந்து, ஆசுத்திரேலியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் திருக்குறளை ஐநா கல்வி நிறுவனம் உலகப் பொதுமறையாக அறிவிப்பதற்குத்  தரவுகள் திரட்டும் நோக்கில் உலகளாவிய நிலையில் திருக்குறள் மாநாடுகள் நடத்தியதையும் அவர் விளக்கினார்.

200க்கும் மேற்பட்ட தமிழியல் தொடர்பான உலகளாவிய நூல்களை வெளியிட்டதோடு சப்பானிய நிதியுதவியோடு தமிழக சப்பானிய உறவின் சின்னமாக ஆசியவியல் நிறுவனத்தின் மிகப்பெரும் கட்டடங்கள் கட்டப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

திரு சா.கி.தே.பிரபாகர் அவர்கள் இந்நிறுவனத்தின் தமிழ்ப் பணிகளை மிகச்சிறப்பாக வியந்து பாராட்டினார். தமிழக அரசின் துணையோடு பல தமிழ்ப் பணிகளை மேற்கொள்வதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பதை அவர் வற்புறுத்தினார். அமெரிக்காவில் வாழும் முனைவர் திரு பிரான்சிசு முத்து அவர்கள் 20 ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து திருக்குறள் தொடர்பாக எழுதிய அரிய The place of Thirukkural in World Ethics என்ற ஆங்கில நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்தசாகரம் என்ற நூல் குறித்த The theory of Tamil Music என்று முனைவர் அமுதா பாண்டியன் எழுதிய நூலையும் அவர் வெளியிட்டார்.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் பாசுகரன் அவர்கள் அயலகத் தமிழர்களின் வாழ்வியல் பற்றிய Tamil Diaspora- A Vibrant Global Community என்ற அரிய நூலை வெளியிட்டார்.

தாய்லாந்து நாட்டின் அசம்சன் பல்கலைக்கழகத்தோடு இணைந்து ஆசியவியல் நிறுவனம் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டுக் கட்டுரைகளின் தொகுதிகள் முனைவர்  வீ.ஞா. சந்தோசம் அவர்களால் வெளியிடப்பட்டன.

ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பட்ட ‘உரோமமுனி வைத்தியம்’ என்ற நூலும் ‘தமிழிலக்கியத்தில் சில தேடல்கள்’ என்ற நூலும் சித்த மருத்துவ வித்தகர் மருத்துவர் செயப்பிரகாசு நாராயணன் அவர்களால் வெளியிடப்பட்டது.

உலகத்தமிழ் பொருளாதார மன்றத் தலைவர்

, இங்கிலாந்து நாட்டின் (இ)லிவர்பூல் பல்கலைக் கழகப் பேராசிரியர் தேனியல் செயராசு, யாம் அறக்கட்டளைத் தலைவர், பொறியாளர் திரு. சதாசிவம், தமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவர், ‘அகரமுதல’ தனித்தமிழ் மின்னிதழின் ஆசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன், சென்னைத் கிறித்தவக் கல்லூரி பேராசிரியர் முனைவர் சதாசிவம், புகழ் பெற்ற இதய நல மருத்துவர் மரு.சொக்கலிங்கம், சி.சு.நி.(SSM) கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் மதிவாணன், மியன்மார் நாட்டு இந்தியத் தூதர் பேராசிரியர் இரங்கநாதன், இலங்கை-இந்திய வணிக அவைத் துணைத்தலைவர் திரு சம்புநாதன் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு இப்பெரும் தமிழ் விழாவைச் சிறப்பித்தனர்.

விழா நிகழ்ச்சிகளை முனைவர் முகிலை இராச பாண்டியன் தொகுத்து வழங்கினார்.