இந்திய அரசு இலங்கைக்குக் கூலிப்படையா? – வைகோ கண்டனம்
இந்திய அரசு இலங்கைக்குக் கூலிப்படையா?
வராகா கப்பலை இலங்கைக்கு வழங்கிய
இந்தியாவின் இரண்டகம்
வைகோ கண்டனம்
இந்த ஆவணி 10 /ஆகத்து 27 ஆம் நாளன்று அன்று இலங்கையின் தலைநகரமாம் கொழும்பு நகர் துறைமுகத்தில் ‘வராஃகா’ கப்பலை இலங்கைக்குத் தாரை வார்த்த இந்திய அரசின் செயல் ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இந்தியா செய்த மன்னிக்கவே முடியாத பச்சை இரண்டகம் (துரோகம்) ஆகும்.
ஈழத்தமிழர்களைக் காத்து விடுதலைத் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க மகத்தான ஈகத்தாலும், தீரத்தாலும் களமாடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை அழிக்கவும், ஈழத் தமிழர்களை சிங்களவனுக்குக் கொத்தடிமைகள் ஆக்கவும் திட்டமிட்ட இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முப்படை ஆயுதங்களையும், பார்வல்கணை(இராடார்)களையும் வழங்கியதோடு இந்தியா இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை 2006 ஆம் ஆண்டு செய்ததை, அன்று முதல் நான் குற்றம் சாட்டி வந்துள்ளேன். விடுதலைப் புலிகளுக்கு வந்த 14 கப்பல்களை இலங்கைக் கடற்படை கடலில் மூழ்கடிக்க இந்தியக் கப்பல் படை உதவியது என்பதையும் சொல்லி வந்தேன். எனது குற்றச்சாட்டு உண்மை என்பதை ‘வராஃகா’ கப்பலை இந்திய அரசு இலங்கைக்குத் தாரை வார்த்ததன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி என மெய்ப்பித்து விட்டது.
1992 ஆம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ‘வராஃகா’ கப்பல், தொடக்கத்தில் கடலோரக் காவல் படை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 2006 ஆம் ஆண்டில் தமிழ் இனக் கொலைகாரன் இராசபக்சே வேண்டுகோளின் பேரில் சிங்களக் கடற்படையின் சேவைக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் கப்பலுக்கு இலங்கை சிங்களக் கடற்படை ‘சாகரா’ என பெயர் சூட்டியது. பொருத்தமான பெயர். தமிழர்களைச் சாகடிக்கத்தானே பயன்பட்டது. விடுதலைப் புலிகளின் கடற்படையாம் சூசை தலைமை தாங்கிய கடல் புலிகளைச் சிங்களக் கடற்படை அழிப்பதற்கு இந்தியக் கப்பல் படை முழுமையாகக் பயன்படுத்தப்பட்டதற்கு இந்தச் ‘சாகரா’ சரியான சான்று ஆகும்.
விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இந்திய அரசுதான் முழுக்க உதவியது என்று இராசபக்சே பகிரங்கமாகச் சொன்னதைத் தமிழர்கள் ஒருநாளும் மறந்துவிடக் கூடாது. காங்கிரசுக் கட்சியும், தி.மு.க.வும், பாட்டாளி மக்கள் கட்சியும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கவும், ஈழத் தமிழ் இனப்படுகொலையைச் சிங்கள அரசு நடத்துவதற்கும் முழுக்க முழுக்கக் காரணம் ஆகும் என்பதையும் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்த அதே இரண்டகத்தைப், பாரதிய சனதா கட்சி தலைமை தாங்கும் தேசிய சனநாயகக் கூட்டணி அரசும் இன்றைக்குச் செய்கிறது.
இந்திய அரசு தற்போது செய்துள்ள பச்சை வஞ்சகத்தைத் தமிழ் இனம் ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. தமிழ்க் குலத்துக்கு எதிராக இந்திய அரசு தொடர்ந்து வினை விதைக்கிறது. இந்த வினைக்குரிய அறுவடையை வருங்காலம் நிச்சயமாக மெய்ப்பிக்கும் என எச்சரிக்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’, சென்னை – 8
Leave a Reply