vaiko05

 எரிநெய், கன்னெய். எரிவளி விலை ஏற்றத்துக்குக் காரணமானவர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கேட்டுக் கொண்டார்.

திருபெரும்புதூர் தொகுதி மதிமுக வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து அம்பத்தூர்  பேருந்து நிலையம் அருகே வைகோ ஞாயிற்றுக்கிழமை  தேர்தல் உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:

anbumaniattacked01

“இரண்டு நாட்களுக்கு முன்பு தருமபுரியில் அன்புமணி இராமதாசைக் குறிவைத்துத் தாக்குதல் நடந்துள்ளது. இரண்டே கால் கிலோ எடை கொண்ட கல்லைக் கொண்டு அவரைக் கொலை செய்ய முயன்றுள்ளனர்.

நல்லவேளையாக அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். அவருக்கு ஏதாவது நடந்திருந்தால் வட தமிழகம் இரத்த பூமியாகியிருக்கும். பாமகவினர் அமைதி காத்தனர். இந்தச் செயலை செய்தவர்கள், தூண்டிவிட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

நாடெங்கும் மோடி அலை வீசுகிறது. அதனால்,  திரைக் கொட்டகையில் துண்டு போடுவதுபோல செயலலிதா ஒரு  துண்டு போட்டு பாசகவில் இடம் பிடிக்க முயலுவார்.

கருணாநிதியிடம் நான்கைந்து  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  உடனே  தில்லிக்குப் போய், ‘மோடி என் நண்பர். நான் தில்லிக்குப் போகும்போதெல்லாம் மோடிதான்  தேநீர்  வாங்கித் தருவார்’ என்று கதைவிடுவார். அதை இதைச் சொல்லி ஒரு மந்திரி பதவி கேட்பார்.

 எரிநெய், கன்னெய், எரிவளி விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதிக்கப்பட்ட தாய்மார்கள், அதற்குக் காரணமானவர்களுக்கு இந்தத் தேர்தலில் தண்டனை கொடுக்க வேண்டும்.

பாசக அமோக வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராவது உறுதி. முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி  சிக்கல்களைத் தீர்க்க, தமிழகத்தின் வாழ்வாதாரத்தைக் காக்க, ஈழத்தில் விடியல் பிறக்க தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் தேசிய சனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும்.”

இவ்வாறு வைகோ பேசினார்.

vaikowithmasilamani01