காவிரி வழக்கு: நீதி வழங்கவில்லை என்றால் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! – பெ. மணியரசன்
காவிரி வழக்கு:
உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால்
தமிழ்நாட்டுப் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்!
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
உச்ச நீதிமன்றத்தில் ஐப்பசி 02,2047 / 18.10.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஆணையிடக் கூடாது என்றும், நாடாளுமன்றம்தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது என்றும் இந்திய அரசு வாதிட்டுள்ளது. இந்த வாதங்கள், தமிழ்நாட்டுக்குக் காவிரி வழக்கில் நீதி கிடைக்கக்கூடாது என்று கருநாடக அரசைவிட இந்திய அரசு தீவிரமாக இருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
2007இல் காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கும் கருநாடகத்திற்கும் ஒதுக்கீடு செய்த தண்ணீர் அளவு போதாது என்று மறு ஆய்வு செய்ய ஆணையிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வேறு; இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கிடைத்திட காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு பின்னர்த் தொடுத்த வழக்கு வேறு. இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்றாகக் கலந்து ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்றம் உசாவுவதென்பது சட்டப்படி முறையானதல்ல!
இரண்டு வழக்குகளின் தன்மைகளும் வெவ்வேறானவை. ஒன்றோடு ஒன்றைப் போட்டுக் குழப்புவது கருநாடகத்தின் தந்திரம். அந்தத் தந்திரத்தை நடுவண் அரசு தானும் கையாள்கிறது. அதே தந்திரத்தின்படி உச்ச நீதிமன்றம் இரண்டு வழக்குகளையும் ஒன்றாக உசாவுவது நீதி முறையியல் ஆகாது!
காவிரித் தீர்ப்பாய வழக்கு உச்ச நீதிமன்றத்தால் உசாவ உரிமை உடையதுதானா என்று இப்பொழுது உச்ச நீதிமன்றம் ஆய்கிறது. அப்படியென்றால், 2007இல் உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை ஏன் ஏற்றுக் கொண்டது? ஏற்றுக் கொண்டதுடன் இறுதி முடிவு வரும் வரை, தற்போதுள்ள காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு இந்திய அரசு செயல்படுத்த வேண்டுமென்று கட்டளையிட்டது சட்ட எதிர்ச் செயலா? மூன்று நீதிபதிகள் அமர்வு உச்ச நீதிமன்றத்தின் மாண்புக்கு மாசுகள் ஏற்படும் வகையில் விசாரணை நடத்தக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகளையே மூன்று நீதிபதிகள் அமர்வு கேள்வி கேட்பது என்ன ஞாயம்?
உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தால்தான், 2007-லிருந்து கடந்த புரட்டாசி 18,,2047/04.10.2016 வரை காங்கிரசு நடுவண் அரசும், பா.ச.க. நடுவண் அரசும் காவிரி வழக்கை உச்ச நீதிமன்றம் உசாவுவதை ஏற்றுக் கொண்டு விடை மனுக்கள் அளித்தன; வழக்குரைஞர் மூலம் வாதாடின.
இப்பொழுது முரட்டுத்தனமாக, உச்ச நீதிமன்றத்திற்குக் காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குறித்த வழக்கை உசாவ அதிகாரம் இல்லை எனச் சொல்வது, இந்திய அரசு நடுநிலை தவறி தமிழர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதையே உணர்த்துகிறது.
இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 262இன் முதல் பகுதி, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராற்றைத் தீர்த்து வைக்க நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டுமெனக் கூறுகிறது. இந்த உறுப்பின் இரண்டாவது பகுதி, நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின்படி அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பை நீக்குவதற்கு உச்ச நீதிமன்றம் முதலான எந்த நீதிமன்றத்திற்கும் அதிகாரமில்லை எனக் கூறுகிறது.
இந்த இரண்டாவது பகுதியின் கீழ் உருவாக்கப்பட்டதுதான் “காவிரித் தீர்ப்பாயம்”. அது கூறியிருக்கும் பொறியமைவுதான் “காவிரி மேலாண்மை வாரியம்”. நாடாளுமன்றத்தின் வழியாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்டம்தான் “காவிரி மேலாண்மை வாரியம்”. மறுபடியும் இதற்கு நாடாளுமன்றம் செல்ல தேவையில்லை.
மற்ற சிக்கல்களில், நாடாளுமன்றச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை மறுபடியும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென இந்திய அரசு கூறுமா?
மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம்–1956இல், நடைமுறை பட்டறிவுகளையொட்டிப் பல்வேறு திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முகாமையானவை, 6ஏ மற்றும் 6 (2) ஆகும். 6 (2) என்ற திருத்தம், 2002இல் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இந்தத் திருத்தம்தான், தண்ணீர்த் தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குச் சமமான ஆற்றல் கொண்டது எனக் கூறுகிறது.
இந்த 6 (2) உருவாவதற்கு முன், 6ஏ பிரிவில் உள்ள உட்பிரிவு 7, தீர்ப்பாயத் தீர்ப்பைச் செயல்படுத்த நாடாளுமன்றம் கூடி விவாதித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறுகிறது. அதற்குப் பின், 2002இல் சேர்க்கப்பட்ட 6 (2) பிரிவு – தீர்ப்பாயத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது என்று கூறியதுடன், 2002க்கு முன் இச்சட்டத்தில் உள்ள 6ஏ, 7 ஆகியவை 2002க்குப் பிறகு பொருந்தாது எனக் கூறியுள்ளது.
இவற்றையெல்லாம் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, தெளிவாக விவாதித்துத்தான் “காவிரி மேலாண்மை வாரியம் கட்டாயம் அமைக்க வேண்டும் (Shall constitute)” என்று கூறியுள்ளது. இவ்வளவு தெளிவாக இந்திய அரசமைப்புச் சட்டததிலும், மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956 சட்டத்திலும் கூறப்பட்ட பின்னும், நாடாளுமன்றத்தில் இதை விவாதிக்க வேண்டுமென்று இந்திய அரசு வாதிடுவது, கருநாடகத்தையும் விஞ்சிய அளவில் சட்ட எதிராக நரேந்திரமோடி அரசு நடந்து கொள்வதையே காட்டுகிறது.
இவ்வளவு தெளிவாகச் சட்டங்கள் வரையறுத்த பின்னும், உச்ச நீதிமன்றம் இதை மீண்டும் மீண்டும் விவாதித்துக் கொண்டிருப்பது, உச்ச நீதிமன்ற உசாவுதல் செல்லும் திசை பற்றி பல்வேறு ஐயங்களையும், அச்சங்களையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டாக்கியிருக்கிறது.
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி, பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவைத், தற்போது செயலில் உள்ள காவிரித் தீர்ப்பாயம் மாற்றி முடிவு செய்தால், அந்த முடிவின்படி தண்ணீரைத் திறந்துவிடும் வேலைதான் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இருக்கிறது. மற்றபடி, காவிரி மேலாண்மை வாரியம் தானாகத் தண்ணீரின் அளவை முடிவு செய்து திறந்துவிட முடியாது. இப்பொழுது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், இப்பொழுதுள்ள இறுதித் தீர்ப்பின்படி அது தண்ணீர் திறந்துவிடும்.
அடுத்து, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு அனுப்ப வேண்டுமெனக் கர்நாடக அரசு கூறுகிறது. இதை ஏற்றுக் கொள்வது போல் இந்திய அரசின் வாதங்கள் பொருள் தருகின்றன. இவ்வாறு, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு மாற்ற வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், காவிரித் தண்ணீர் நிலையாகத் தமிழ்நாட்டுக்கு இல்லை என்றாகிவிடும்!
எனவே, மேற்கண்ட இந்திய அரசமைப்புச் சட்டம், மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம்–1956 ஆகியவற்றின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைத்திட, குறுகிய காலவரம்பிட்டுக் கட்டளை இடுவதொன்றே உச்ச நீதிமன்றத்தின் சட்டக் கடமையாகும் என்பதைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு மாறாக, வேறு வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்தால் கருநாடகத்தின் சட்ட எதிர்ச் செயல்களுக்கு இந்திய அரசு மட்டுமின்றி உச்ச நீதிமன்றமும் துணை போகின்றது என்று தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
மேட்டூர் அணை நீர் திறக்கப்பட்டுச் சம்பாப் பயிரிடல் தொடங்கியுள்ள நிலையில், இதுபோல் உச்ச நீதிமன்றம் இழுத்தடிப்பது நீதி வழங்குவதாகாது! பட்டினியால் அழும் குழந்தைக்குக் குச்சி மிட்டாய் காட்டி ஏமாற்றுவது போல் “2,000 கன அடி திறந்து விடு“ என உச்ச நீதிமன்றம் சொல்வது இருக்கிறது. அதைக்கூட கருநாடகம் மறுத்த நிலையிலும், கருநாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க உச்ச நீதிமன்றம் மறுப்பது ஏன்?
காவிரிச் சிக்கலில் இப்பொழுது, ஒட்டுமொத்தமாகத் தமிழ் மக்களும் கட்சி வேறுபாடின்றி ஒருங்கிணைந்து, எழுச்சிபெற்றுப் போராடி வருகிறார்கள். உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால், அந்தப் போராட்டங்கள் புதிய போக்கில் வடிவெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
–பெ. மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்
//கருநாடகத்தின் சட்ட எதிர்ச் செயல்களுக்கு இந்திய அரசு மட்டுமின்றி உச்ச நீதிமன்றமும் துணை போகின்றது என்று தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள்// – இப்பொழுதே அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. கருநாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வளைந்து கொடுப்பது நன்றாகவே தெரிகிறது.