தமிழை மறவாதிருக்க உறுதி ஏற்பிர்! விவரம் அனுப்புவீர்! – தமிழ்க்காப்புக்கழகம்
நாம் தமிழரெனில் உறுதி ஏற்போம்!
பெயர் விவரம் வெளியிடப்பெறும்.
உலகத் தமிழன்பர்களே!
தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம்.
- தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து எழுதவோ மாட்டேன்.
- தமிழ் அறிந்தவர்களுடன் தமிழிலேயே பேசுவேன். தமிழ் அறியாதவர்களைத் தமிழ் அறியச் செய்வேன்.
- வணக்கத்தையும் வாழ்த்தையும் தமிழிலேயே சொல்வேன்.
- தமிழ் வழிக் கல்விக்கு என்னால் இயன்ற கருத்துப் பரப்பலையும் உதவியையும் ஆற்றுவேன்.
- எல்லாத் துறைகளிலும் தமிழ் தலைமையிடம் பெறவும் தமிழர் முதன்மையிடம் பெறவும் இயன்றவரை உதவுவேன்.
- பெயரின் தலைப்பெழுத்தையும் தமிழிலேயே குறிப்பிடுவேன்.
- தமிழிலேயே கையொப்பமும் சுருக்கொப்பமும் இடுவேன்.
- தமிழ்அறிஞர்களையும் தமிழ்க்கலைஞர்களையும் போற்றுவேன்.
- தமிழ்மொழி பிற மொழிகளுக்கு இணையான சம வாய்ப்பைப் பெற உதவுவேன்.
- தமிழர் பிற இனத்தவர்க்கு இணையான சம உரிமை பெற உழைப்பேன்.
உறுதி ஏற்குநர் பெயர்
இவ்வாறு உறுதி ஏற்போர்
பெயர்:
பணி:
தமிழுக்கு ஆற்றிவரும் தொண்டு:
தமிழுக்கு ஆற்ற எண்ணியுள்ள செயல்கள்:
தமிழமைப்புகளில் ஏற்றுள்ள பொறுப்புகள்:
முகவரி :
மின்னஞ்சல் :
முதலான விவரங்களை ஒளிப்படத்துடன் madal@akaramuthala.in மின்வரிக்கு அனுப்பி வைத்தால் ‘அகரமுதல’ இதழில் வெளியிடப் பெறும்.
உறுதி ஏற்பிர்! விவரம் அனுப்புவீர்!
தலைவர்
தமிழ்க்காப்புக் கழகம்
9884481652
பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய ஐயா அவர்களுக்கு நேச வணக்கம்!
ஐயா! தமிழ்க் காப்புக் கழகம் சார்பாக ‘தமிழை மறவாதிருக்க உறுதி ஏற்பீர்! விவரம் அனுப்புவீர்!’ என்ற தலைப்பில் தாங்கள் வெளியிட்ட அறிக்கையைத் தற்பொழுதுதான் படித்து முடித்தேன். தமிழ் மீது பற்றும் தமிழர் மீது அக்கறையும் இருந்தாலும் தனி ஒரு மனிதரான தன்னால் என்ன செய்து விட முடியும் என எண்ணியிருக்கும் பல கோடி மக்களுக்கும் விழிப்புணர்வூட்டும் வகையில் தனி மனிதர்கள் குறைந்தது இவற்றையாவது செய்யலாமே எனப் புரிய வைக்கும் விதமாய்த் தாங்கள் எழுதியுள்ள இந்தக் கட்டுரை சாலச் சிறந்த முயற்சி! அதற்கு முதலில் என் சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஆனால் ஐயா, உறுதிமொழி என ஒன்று கொடுத்தால் அதை மீறக்கூடாது! எனில், மிகப் பெரும்பாலான கலைச்சொற்களுக்கான தமிழ்ப்பதங்களை இன்னும் சிறியேன் முழுதாக அறியாத நிலையில், எவ்வளவுதான் முயன்றாலும் புனைவு என வரும்பொழுது சில இடங்களில் அயல் எழுத்துக்களைத் தவிர்க்க இயலாத சூழலில் முதல் உறுதிமொழியை எப்படி மனமுவந்து வழங்குவது எனத் திகைக்கிறேன். மற்ற அனைத்தும் என்னால் இயலக்கூடியவையே! அவற்றுள் பெரும்பாலானவற்றைச் சிறியேன் ஏற்கெனவே கடைப்பிடித்தே வருகிறேன்.
எனவே, முதல் உறுதிமொழியைப் பொறுத்த வரை, அதை நான் இயன்றளவு கடைப்பிடிக்க முயல்கிறேன் எனும் அளவில் உறுதியளித்து இந்தத் தமிழ்ப் பற்று மிகு உறுதிமொழியை உளமார ஏற்றுக் கொள்கிறேன் ஐயா!
-இ.பு.ஞானப்பிரகாசன்.
திரு. ஞானப்பிரகாசன் அவர்களின் கருத்தையே நானும் கொண்டுள்ளேன். தனித்தமிழ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பு எனக்குண்டு. ஆனாலும் பல சமயங்களில் நான் தோல்வியடைகிறேன். தவிர தமிழ் எது? வேற்றுமொழிச்சொல் எத? என்பதில் தமிழறிஞர்களுக்குக்கூட குழப்பம் உள்ளது.வேற்றுமொழி எழுத்துகளைப் பயனபடுத்தக்கூடாது என்பது தற்காலத்தில் நடைமுறைக்கு ஒவ்வாது என்றே கருதுகிறேன். தமிழர்களின் பெயர்களைப் பாருங்கள். மக்கள் விருப்பத்துக்கு எதிர்திசையில் அவர்களை இழுத்துச்செல்ல முடியாது. நாம் சற்று நெகிழ்வுடன் இருக்க வேண்டும். தவிர, தமிழின் எழுத்துகள் முப்பது என்ற தொல்காப்பியரின் கொள்கையே எனக்கு உவப்பானது. நன்னூலாரின் 247 எனும் கொள்கை தமிழ் எழுத்துக்கல்வி பெற விரும்புவோரை அச்சுறுத்துவதாக உள்ளது. உள்ளபடி 247 ஒலிகளை எழுதிட வெறும் 24 (இருபத்து நான்கு எழுத்துகளே போதுமானவை. இன்னும் ஓரைந்து எழுத்துகளைச் சேர்த்துக்கொண்டால் வேற்றுமொழி ஒலிகளை அடையாளம் காட்ட பிறமொழி எழுத்துகளின் உதவியை நாட வேண்டியதில்லை. இங்கெல்லாம் நாம் சற்று நெகிழ்வு காட்டத்தான் வேண்டும்.
மறைந்த அய்யா தமிழண்ணல் அவர்கள் தலைமையில் உருவான ‘ தமிழ்க்காப்புக் கழகம் ‘ தற்போது
முனைவர் சேதுமணி அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கி வருகிறது. ஒரே பெயரில் இரண்டு அமைப்பா? அய்யா பரிசீலிக்கவும்.