eezham-genocide45Ramadoss01

ஐ.நா தீர்மானம் திருடன் கையில்

திறவுகோலை ஒப்படைப்பதற்கு

இணையானது:  மரு.இராமதாசு

  “இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து அந்நாட்டு நீதிமன்றத்தின் மூலமாகவே உசாவல் நடத்த வகை செய்யும் அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இந்தியா முதலான நாடுகளின் ஒத்துழைப்புடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. போர்க்குற்றங்களையும், இனப் படுகொலையையும் நடத்திய கொடுமதியானவர்கள் தண்டனையின்றித் தப்பிக்கவும், சொந்தங்களைப் பறி கொடுத்தவர்கள் இறுதி வரை நீதி கிடைக்காமல் வாடவும்தான் இந்தத் தீர்மானம் வகை செய்யும்.

  இலங்கையில் ௨௦௦௯ (2009) ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஒன்றரை நூறாயிரம் (இலட்சம்) தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு அப்போதைய இலங்கை ஆட்சியாளர்கள்தாம் காரணம் என்பது உலகம் அறிந்த உண்மையாகும். இதைச் சான்றுகளுடன் மெய்ப்பித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே உலகத் தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் விருப்பமாக இருந்தது.

 ஈழத் தமிழர்களின் நலன்களையும், மனித உரிமையைப் பாதுகாப்பதிலும் அக்கறை கொண்டவர்களாகக் காட்டிக்கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து முதலான நாடுகள் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்துப் பன்னாட்டு உசாவல் நடத்தப்பட வேண்டுமெனக் கடந்த ஆண்டுவரை வலியுறுத்தி வந்தன. அதன்படி ஐ.நா மனித உரிமை ஆணையர் அலுவலகம் சார்பில் உசாவல் நடத்தி, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இவ்வுசாவலில் தெரிய வந்த தகவல்களின் அடிப்படையில் பன்னாட்டு நீதிமன்ற உசாவல் நடத்திக் குற்றவாளிகளைத் தண்டிப்பதுதான் இயற்கையான நீதியாக இருக்கும். ஆனால், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி, அங்குள்ள நிலைமை முற்றிலுமாக மாறி விட்டதைப் போன்ற ஒரு பொய்யான சித்திரத்தை உருவாக்கி, இலங்கை மீதான போர்க்குற்றத்தை அந்நாட்டு நீதிமன்றத்திலேயே உசாவல் (விசாரிக்க) விடுவது ‘திருடன் கையில் திறவுகோலை ஒப்படைப்பதற்கு’ ஒப்பாகும்.

   ஈழத் தமிழர்களின் நலனில் அமெரிக்காவுக்கு அக்கறை இல்லை என்பதும், இலங்கையைத் தனது ஆளுகையின் கீழ்க் கொண்டு வருவது மட்டும்தான் அதன் நோக்கம் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. இலங்கையை வழிக்குக் கொண்டு வர இனப்படுகொலையைப் பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, அதன் நோக்கம் நிறைவேறியதும் இலங்கையைக் காப்பாற்றத் துடிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இலங்கை மீதான தீர்மானத்தைக் கொண்டு வந்த இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, மாசிடோனியா, மாண்டிநெக்ரோ ஆகிய நாடுகளும், அதற்குத் துணை நின்ற அல்பேனியா, செருமனி, ஆத்திரேலியா, கிரீசு, இலாத்வியா, போலந்து போன்ற நாடுகளும் அமெரிக்காவின் விரல் அசைவுக்குக் கட்டுப்பட்டவை என்பதால் அவையும் இலங்கைக்கு ஏதுவாகச் செயல்பட்டதில் எந்த வியப்புமில்லை.

  ஆனால், ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட இந்தியா இந்தச் சிக்கலில் நடந்து கொண்ட விதம்தான் திகைப்பும் ஏமாற்றமும் அளிக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அதிகாரம் கிடைப்பதற்கும், கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்போவதாக இந்தத் தீர்மானத்தின் மீதான கலந்துரையாடலில் பேசிய இந்தியத் தூதர் அசித்குமார் கூறியுள்ளார். உண்மையில், ஈழத் தமிழர்களுக்கு இவற்றைப் பெற்றுத் தர வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருந்தால், அதற்கு முன் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்! ஈழத் தமிழர்களுக்கு அதிகாரமும், கண்ணியமான வாழ்க்கையும் கிடைக்க அதுதான் அடிப்படையாக அமையும். போர்க்குற்ற உசாவலை இலங்கை நீதிமன்றங்களே நடத்திக் கொள்ள விட்டுவிட்டு, தமிழர்களுக்கு உரிமை பெற்றுத் தருவதாகக் கூறுவது ஏமாற்று வேலை ஆகும்.

  இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக் குறித்துப் பன்னாட்டு நீதிமன்ற உசாவலுக்கு ஆணையிடக் கோரும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்று தமிழகச் சட்டப்பேரவையில் கடந்த ௧௬-௦௯-௨௦௧௫ (16.09.2015) அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் மீதான   நிலைப்பாட்டை நடுவண் அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியபொழுதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, கடைசி நேரத்தில் இலங்கைக்குச் சார்பான தீர்மானத்தை நிறைவேற்ற ஒத்துழைத்திருப்பது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த இரண்டகமும் அநீதியும் ஆகும். இலங்கைச் சிக்கலில் முந்தைய காங்கிரசுக் கூட்டணி அரசுக்கும், இப்போதைய தேசிய சனநாயகக் கூட்டணி அரசுக்கும் வேறுபாடு இல்லை என்பதையே இச்சிக்கலில் இந்தியா மேற்கொண்ட நிலைப்பாடு காட்டுகிறது.”

– மரு.இராமதாசு

– செய்தியாளர் இ.பு.ஞானப்பிரகாசன்

[தகவல்கள்: நன்றி மாலைமலர், ஒன்இந்தியா – தமிழ், தினமணி]

eezham02