kanimozhi-meetting01

நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தேவதாச சுந்தரத்தை ஆதரித்து களக்காடு, வள்ளியூர், நெல்லை நகரம், மேலப்பாளையம் ஆகிய இடங்களில்  மாநிலங்களவை உறுப்பினர்  கனிமொழி  பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:–

அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் மக்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. நெல்லை மாவட்டத்திற்கு, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை அளித்துள்ளது. தாமிரபரணி, கருமேனி, நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து 1, 2– ஆம் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

அ.தி.மு.க. அரசு நிதி ஒதுக்கியதாக கூறிக்கொண்டு பணிகளை விரைவு படுத்தாமல் உள்ளது. நெல்லை மாநகராட்சி அலுவலக கட்டடம் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், செல்லப்பாண்டியன் மேம்பாலம் ஆகியவை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவை.

இந்த மாநகராட்சி மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய பாபநாசத்தில் இருந்து நேரடியாக,  குடிநீர் கொண்டு வரும் திட்டத்தைச் செயல்படுத்த தி.மு.க. அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்தத் திட்டத்தை அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

குலசேகரன்பட்டினத்தில் 3–ஆவது  ஏவுகணை ஏவுதளத்தை அமைக்கவும், மகேந்திரகிரியில் திரவ இயக்கத் திட்ட உயர் கல்வி மையம் அமைக்கவும் மத்திய அரசுக்கும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். தமிழகச் சிக்கல்களில் மாநிலக் கட்சிகளால் தான் கூடுதல் அக்கறை காட்டமுடியும். அதில் தேசியக் கட்சிகள் அக்கறை காட்டாது.

தற்போது நம்முடைய நாட்டில் மத நல்லிணக்கம் ஏற்படவும், மதச்சார்பற்ற ஆட்சி அமையவும் போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பா.சனதா கட்சிக்கும், அ.தி.மு.க.வுக்கும் ஒரே முகம்தான். வெவ்வேறு வேடங்களில் மக்களைச் சந்திக்கின்றனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தியவர் செயலலிதா. அவர் தேர்தலுக்காக மதச்சார்பற்ற வேடம் அணிந்து மக்களைச் சந்திக்கிறார். மதச் சார்பின்மை குறித்துப் பேசும் செயலலிதா இடதுசாரி கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற்றியது ஏன்? பா.சனதாவின் கொள்கையில் உடன்பாடு இல்லாத கட்சிகள் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுகிறார்கள்.

 சேது சமுத்திர திட்டத்தை ஆதரித்து குரல் கொடுத்தவர்கள் அத்திட்டத்தை எதிர்க்கும் பா.சனதாவுடன் கூட்டணி அமைத்திருப்பது  வாய்ப்புவாதம் இல்லையா? மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும்.

எனவே, தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்