தொல்காப்பியம் தமிழ் இலக்க நூலின் இந்தி மொழி பெயர்ப்பு நூலையும் கன்னட மொழியில் தொல்காப்பியத்தின் தமிழ் நூல் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை மொழிபெயர்த்து இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது. என்ன காரணம்?

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (அ) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (சிஐசிடி), தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஓர் ஆய்வு நிறுவனமாகும்.

இந்த மையம் மூலமாகத் தமிழ்ப் பழங்கால இலக்கணத்தைப் பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி தற்போது செம்மொழித் தமிழ் நிறுவனம் தயாரித்துள்ள தொல்காப்பியம் நூலின் இந்தி மொழிபெயர்ப்பு,  கன்னடத்தில் தொல்காப்பியம், பதினெண் கீழ்க் கணக்கு நூல்களின் மொழிபெயர்ப்பு நூல்கள் தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் இந்தியக் கல்வித்துறை இணை அமைச்சர் முனைவர் சுபாசு சருக்கார், இந்தி, கன்னட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தொல்காப்பியத்தின் இந்தி, கன்னட நூல்களையும் தமிழ் இலக்கியம்-பண்பாட்டின் செழுமையான பாரம்பரியத்தைப் போற்றும் பதினெண் கீழ்க்கணக்கின் கன்னட மொழி நூல்களையும் வெளியிட்டார்.

தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன?

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சருக்கார், இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் தமிழ் மொழி குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ் இலக்கியம்-பண்பாட்டின் செழுமையான பாரம்பரியம் காலத்தின் மாறுபாடுகளைத் தாங்கி பல நூற்றாண்டுகளாகச் செழித்து வளர்ந்துள்ளது என்று கூறினார்.

 

சங்க இலக்கியங்களும், தொல்காப்பியமும் இந்தச் செழுமையும் பெருமையும் வாய்ந்த பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்றும், இந்த பாரம்பரியத்தை நாடு மிகவும் பெருமைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நூல்களில் உள்ளார்ந்த இலக்கியச் செழுமையையும் ஞானத்தையும் மக்கள் விரும்புவார்கள் என்று கூறிய அவர், இந்த மொழிபெயர்ப்புகளை வெளிக்கொணரவும், இந்தி, கன்னட வாசகர்களுக்கு இந்த இலக்கியம் கிடைக்கச் செய்யவும் சிறந்த பங்களிப்பை வழங்கிய செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம், அதன் மொழிபெயர்ப்பாளர்கள் குழுவுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, செம்மொழித் தமிழ் நிறுவனப் பேராசிரியர் இரா. சந்திரசேகரன், கல்வி அமைச்கத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொல்காப்பியம் நூல் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது குறித்துப் பேராசிரியர் சந்திரேகரனிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, “தமிழ்ப் பழங்கால இலக்கிய, இலக்கண நூல்களைப் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வது தமிழாய்வு நிறுவனத்தின் நோக்கம்,” என்று கூறினார்.

சங்கக் காலத்தில் நீடித்த படைப்புகள்

 

 

தமிழ் எழுத்து முறைகள் கிமு 250க்கு* முந்தையவை. தமிழ்ச் சங்கக் காலப் பாடல்கள் என்பது 473 புலவர்களால் இயற்றப்பட்ட 2,381 பாடல்களைக் குறிக்கின்றன. 102 பாடல்கள், இயற்றியவரின் அடையாளம் அறியப்படாதவை.

பெரும்பாலான அறிஞர்கள் வரலாற்றில் சங்க இலக்கிய ஊழியை கிமு 300 முதல் கிமு 600 வரையிலான காலக்கட்டத்தை உலகின் மிகச் சிறந்த இலங்கியங்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

தொல்காப்பியம் எனும் செய்யுளில் இலக்கண நூலான தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் மட்டுமே பண்டைத் தமிழுக்கு உண்டு என்று நம்புவது நியாயமானதாக இருந்தாலும், எட்டுத்தொகைகளும் பத்துப் பாடல்களும் காலத்தைக் கடந்து நிற்கின்றன. எட்டுத்தொகை என்பது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பனவற்றைக் கொண்டது.இந்த நூல்களின் சிறப்பைக் கருத்தில் கொண்டு, பட்டறிவு வாய்ந்த தமிழ்-கன்னட அறிஞர்கள் குழு, பெங்களூர் தமிழ் சங்கம் மூலம் சங்க இலக்கியங்களைக் கன்னடத்தில் மொழிபெயர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

மொழிபெயர்ப்பாளர்கள் இரு மொழிகளிலும் நன்கு அறிந்தவர்கள் மற்றும் மொழிபெயர்ப்புப் பணியை முடிப்பதில் சிறந்த பட்டறிவைப் பெற்றவர்கள் என செம்மொழித் தமிழ் நிறுவன நிருவாகம் கூறியுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட செம்மொழித் தமிழ் உரையின் கன்னட மொழிபெயர்ப்பை 8,000 பக்கங்களுக்கு மேல் ஒன்பது தொகுதிகளாக வெளியிட செம்மொழித் தமிழ் நிறுவனம்  முயற்சி எடுத்திருக்கிறது.

 

தொல்காப்பியம் இந்தி மொழிபெயர்ப்பில் வசனம் (உரை, ஒலிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்புகள்) முனைவர் எசு.பாலசுப்ரமணியம், பேராசிரியர் கே.நாச்சிமுத்து போன்றோரால் மொழிபெயர்க்கப்பட்டு 1,214 பக்கங்களுடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு மார்ச்சு மாதத்துக்குள் மேலும் சில மொழிகளில் தமிழ் இலக்கிய நூல்கள் வெளியிட செம்மொழித் தமிழ் நிறுவனம்  நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு, பதினெண்கீழ் கணக்கு நூல்கள் என மொத்தம் 36 நூல்கள் வெளிவரும் என்றும், தெலுங்கில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களை அடுத்த ஆண்டு மார்ச்சு மாதத்துக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேராசிரியர் இரா. சந்திரசேகரன்கூறினார்.

மலையாள மொழியிலும் ஐந்து நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றின் சரிபார்ப்புப் பணிகள் முடிந்த பிறகு அவை வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொல்காப்பியம் என்பது என்ன?

தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

 

தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், கைந்நிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என அவை வகைப்படும்.

தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பேராசிரியர் இலக்குவனார் 1963இல் செய்தார். அந்த நூலுக்கு திமுகவின் அப்போதைய தலைவராக இருந்தவரும் தமிழக முன்னாள் முதல்வருமான அண்ணாதுரை முன்னுரை எழுதியிருந்தார்.

அவருக்கு முன்பாக, தொல்காப்பியத்தை ஆங்கில மொழியில் பேராசிரியர் பி. சுப்பிரமணிய சாத்திரி எழுதியிருந்தார். திருவையாற்றை சேர்ந்த அவர் அடிப்படையில் சமற்கிருதப் பேராசிரியர். அவரது மொழிபெயர்ப்பு குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்ததால் அது பல்வேறு தமிழறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

https://www.bbc.com/tamil/arts-and-culture-59758537

தரவு: பொறி.இ.திருவேலன்

 

+++++++

தொல்காப்பியம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தொல்காப்பியம் நூற்றுக்கணக்கிலான இலக்கண நூல்களைக் குறிப்பிடுகிறது. எனவே, தொல்காப்பியத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கண நூல்களும் அவற்றிற்கு முன்னரே தமிழ் இலக்கியங்களும் இருந்துள்ளன என்பதை உணரலாம்.  ஆதலின் தமிழ் எழுத்துத் தோற்றம் வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்டது. இச்செய்தியை விரிவாக எழுதியுள்ள செய்தியாளரும் பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனமும்(தமிழ்) பாராட்டிற்குரியவர்கள். எனினும் இச்செய்தியைக் குறிக்காவிட்டால் தவறான செய்தி பரவும்.