80nagapattinam_poster01 80nagapattinam_poster02

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீரழிந்த நிலையில் சட்டம்-ஒழுங்கு!

தனிமனிதனுக்குப் பாதுகாப்பற்ற நிலை

  நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறையின் போதிய நடவடிக்கையின்மையால் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் தனிமனிதனுக்குப் பாதுகாப்பாற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வேதாரண்யத்தில் பணிபுரிந்த பெண்நீதிபதி நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்திற்குக் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இதனால் வாரத்தில் இரண்டு நாள் நாகப்பட்டினத்திற்கும், மற்ற நாட்களில் வேதாரண்யத்திலும் பணியாற்றினார். வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் வரும்போது   வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் சார்பில் வெடிகுண்டை பெண்நீதிபதி மீது ஒரு மருமக்கும்பல் வீசியெறிந்தது. வெடிகுண்டு மகிழுந்தில்பட்டு நீதிபதி தப்பித்தார். இதற்குப் பல்வேறு நீதிபதிகள் கண்டம் தெரிவித்து நீதிபதிகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என வேண்டினர். பிறராலும் தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுப்பபட்டன.

  அதன்பின்னர் ஒரு சில வாரங்கள் கழித்து நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் பணிபுரிந்த வழக்கறிஞர் ஒருவரை மருமக்கும்பல் தாக்கியது. இதனைக் கண்டித்து நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்தனர்.

  அதன்பின்னர் ஒரு நாள் கழித்து மணல்வண்டி கடத்தலைத் தடுத்துநிறுத்திய காவல்துறையினரை ஒரு கும்பல் உழுவை(டிராக்டர்)யை ஏற்றிக் கொலை செய்ய முயன்றது.

  கடந்த வாரம் செய்தியாளர் ஒருவர் வீட்டினுள் தி.மு.க.வைச்சேர்ந்த பேரூராட்சித்தலைவர் இரவிச்சந்திரன் 40க்கும் மேற்பட்ட அடியாட்கள் கும்பலுடன், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து கத்தி, வீட்டை அடித்து நொறுக்கியது.

 ஆனால் இதுவரை நீதிபதி, வழக்கறிஞர், செய்தியாளர் ஆகியோர் மனுமீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.

  ‘நாமர்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்’ என்று நெஞ்சு நிமிர்ந்து துணிவுடன் அரசனைக் கேள்வி கேட்ட ஆன்றோர் வாழ்ந்த மண் இம்மண். அப்படிப்பட்ட மண்ணில் கருத்துரிமையின் குரலை நெறிக்க அரசியல்வாதிகளும், ஆதிக்க சக்திகளும், மதவாதிகளும் கூட்டணி அமைத்துக்கொண்டு எழுத்தாளர்களைப் பழிவாங்கும் தொடர் படலம் இன்றுவரை நடைபெற்று வருகிறது. சார்லி எப்டோ கேலிப்படம் வரைந்ததற்காக அந்த இதழின் அலுவலகத்தில் நுழைந்து 12 இதழாளர்களைச் சுட்டுக்கொன்றார்கள். ‘மாதொரு பாகன்’ என்ற புதினத்தை எழுதியதற்காகப் பெருமாள் முருகன் என்பவரை ஊர்விலக்கம் செய்தனர். இதே போலக் கடந்த காலங்களில் முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்களும் பகுத்தறிவுப் படைப்பாளர்களும் கடுமையான சமூக விமர்சனத்திற்கு ஆளானார்கள். அதன்பின்னர் வார இதழ், வாரமிருமுறை இதழ் என அனைத்தும் அரசியல்வாதிகளால் அடித்து நொறுக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

கொடைக்கானல் சாலையில் பழனிச்சாமி இ.ஆ.ப.பணி

கொடைக்கானல் சாலையில் பழனிச்சாமி இ.ஆ.ப.பணி

திருச்சியில் பழனிச்சாமி இ.ஆ.ப. தேர்தல் பணி

திருச்சியில் பழனிச்சாமி இ.ஆ.ப. தேர்தல் பணி

 தேனி மாவட்டத்தில் மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள முருகமலை, வருசநாடு, கம்பம் பள்ளத்தாக்குகளில் தீவிரவாதிகள் ஆயுதப்பயிற்சியை மேற்கொண்டனர். அதனைத் தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியர் இரவு, பகல் பாராமல் காடு, மலை என அலைந்து தீவிரவாதிகளை ஒழித்தனர். அவ்வாறு ஒழித்த மாவட்ட ஆட்சியர்களில் ஒருவர் பழனிச்சாமி. பழனிச்சாமி தேனி மாவட்ட ஆட்சியராகப் பதவியேற்ற பின்பு தீவிரவாதிகள்,சமூக விரோதக் கும்பல், கந்துவட்டிக்கும்பல் என அனைத்தையும் ஒழித்துக்கட்டினார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 128 ஆவது முறையாகக் கொடைக்கானல் மலைச்சரிவு ஏற்பட்டது. இதனால் கொடைக்கானல் செல்லும் பாதை முற்றிலும் சீர்குலைந்தது. அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, தற்பொழுது தேனி மாவட்ட ஆட்சியராக உள்ள வெங்கடாசலம் ஆகியோர், உயிரைப் பணயம் வைத்து நிகழ்விடத்திற்கு விரைந்து போர்க்கால அடிப்படையில் சாலைகளை உடனடியாகச் செப்பனிட்டனர். அதன்பின்னர் பழனிச்சாமி திருச்சி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார். திருச்சியில் நடைபெற்ற திருவரங்கம் சட்டமன்றத் தேர்தலை எந்த விதக் கெடுநிகழ்வும் நடைபெறாமல் தேர்தலை நடத்தி முடித்தார். அதன்பின்னர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற பின்பு நாகப்பட்டினம் பகுதியில் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்வு செய்து வருகிறார்.

  ஆனால் காவல்துறை, சட்டம்-ஒழுங்கு போன்ற பொதுமக்கள், தனியர் பாதுகாப்பைப் பற்றிப் போதிய கவனம் செலுத்தாததால் தனிமனிதனுக்கு உயிர்வாழ பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறாகக் குற்றம் செய்யும் கொலைகாரக் கும்பல் குற்றத்தைச் செய்துவிட்டு அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்திற்கும் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் வெளிநாடுகளுக்கும் தப்பிச்சென்றுவிடுகின்றனர். வெளிநாட்டிலிருந்து புகார் கொடுத்தவரை அச்சுறுத்தும் விதமாகத் தொலைபேசியில் மிரட்டுவதும் ஏதாவது ஒரு போலி இணையத்தளத்தை உருவாக்கி அச்சுறுத்தும்   குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறாக மிரட்டும் அச்சுறுத்தும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் கணிப்பிரிவு (சைபர்-கிரைம்) செயல்படுத்தப்படவில்லை. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை நடந்திராத நிகழ்வுகள், அரசியல்வாதிகள். கயமைக் கும்பல் கணிணி மூலம் நிகழ்ந்து வருகின்றன. இதனால், ஆற்றல் பெற்ற பயங்கரவாதிகள் உருவாகின்றனர்.

 மேலும் இந்து, முசுலிம், கிறித்துவர் வரக்கூடிய நாகூர், வேளாங்கண்ணி, திருநாள்ளாறு, சிக்கல் போன்ற வழிபாட்டுத் தலங்களும், கோடியக்கரை, தரங்கம்பாடி முதலான சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் பகுதிகளும் மிகுதியாக உள்ளன. இதனால் சுற்றுலாத் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் கூடுதல் கவனம் செலுத்தித் தேனி மாவட்டம், திருச்சி மாவட்டம் போல நாகப்பட்டினம் மாவட்டத்தையும் உயர்நுட்ப மாவட்டமாக மாற்ற முனைப்போடு செயல்படவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

 மூடர்களால் வரலாறு உருவாக்கப்படுவதில்லை. மீறிச் செல்லும் சிந்தனையாளர்களால், எழுத்தாளர்களால் உருவாக்கப்படுகிறது. இந்த வேறுபாட்டை உணராத சமூகம் அழியும் என்பதை மனத்தில் கொண்டு அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளின் பின்புலத்தை வைத்து அடாவடி செய்யும் கயமைக்கும்பல் தங்கள் தவற்றை உணர்ந்து திருத்த முயலவேண்டும். இல்லாவிடில் அமைதிப்பூங்காவான நாகப்பட்டினம் மாவட்டம் விரைவில் இரத்த பூமியாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை. மாவட்டக் காவல்துறை சிறப்போடு பணியாற்றவேண்டும் இல்லையெனில்   மாண்புமிகு முதல்வர் இரும்புக்கரங்கள் கொண்டு அடக்கினால் அரசியல்வாதிகள், கயவர்கள் ஆகியோருக்குச் செம்புதூக்கும் காவல்துறையினர் கைகளில் விலங்குகள் மாட்டவேண்டிய காலம் வருவதும் வெகுதொலைவில் இல்லை.

80vaigaianeesu