பெருஞ்சிக்கல் உருவெடுக்கும் புத்தர் சிலை
பெருஞ்சிக்கல் உருவெடுக்கும் புத்தர் சிலை
வடக்கு, கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்தை நிறுவும் வகையில் படைத்தரப்பினரது செயற்பாடுகள் அமைந்து வருவதாகவும் இதற்கு மாறி மாறி வரும் அரசாங்கங்கள் உறுதுணை புரிந்து வருவதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
வடக்கு, கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றசெய்தியானது பல்வேறு வகைகளில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து வருகின்றது.
(இனப்படுகொலைப்) போர் நிகழ்ந்த காலத்தை விடவும் தற்போது பல பகுதிகளிலும் திடீர் திடீரென புத்தர் சிலைகள் முளைத்து வருகின்றன.
வவுனியாவிலிருந்து ‘ஏ–9’ வழியாக யாழ்ப்பாணத்தை நோக்கிச் செல்லும் போது பல இடங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது.
தற்போது கிளிநொச்சி, இரணைமடு குளத்திற்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை ஆலய வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு வருகின்றது.
(இனப்படுகொலைப்)போர் முடிவடைந்து 7 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான பகுதிகளில் படையினர் நிலைகொண்டுள்ளனர்.
முன்னர் விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள், முகாம்கள் இருந்த பகுதிகளைப் படையினர் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டின் கீழேயே வைத்திருக்கின்றனர்.
இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் காணிகள் மீளவும் ஒப்படைக்கப்படவில்லை. இப்பகுதியில் வீடுகள், காணிகளை உடைய மக்கள் தமது சொத்துக்களை மீள வழங்குமாறு அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ள போதிலும் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்குமாறு மறுவாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சு பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதங்களை அனுப்புகின்ற போதிலும் அவற்றை மீளக் கையளிக்க படைத்தரப்பினர் இணங்குவதாக இல்லை.
வெவ்வேறு வகையான சாக்குப்போக்குக்களை கூறிப் பொதுமக்களின் கோரிக்கைகளை படைத்தரப்பினர் தட்டிக்கழித்து வருவதாகவே தெரிவிகின்றது.
இவ்வாறு பொதுமக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படாத நிலையில் அப்பகுதிகளில் புத்தர் சிலைகளைப் .படைத்தரப்பினர் அமைத்து வருகின்ற செயற்பாடானது பௌத்த மேலாதிக்கத்தை மேலோங்கச் செய்யும் நடவடிக்கையாகவே பொதுமக்களால் பார்க்கப்படுகின்றது.
தற்போது கிளிநொச்சி கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியில் இராணுவத்தினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதுடன் அதனைச் சூழ மதில் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்தக் கட்டுமான வேலைகளில் பெருமளவான படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த விவகாரமானது கிளிநொச்சி வாழ் மக்களிடையே பெரும் மனநிறைவின்மையை ஏற்படுத்தியிருக்கிறது.
நாட்டில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கமானது நடவடிக்கை எடுத்துவருவதாகக் கூறப்படும் நிலையில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றமையானது நல்லிணக்க முயற்சியிலேயே ஐயத்தை ஏற்படுத்துகின்றது.
2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் இரணைமடுக் குளமும் கனகாம்பிகை அம்மன் ஆலயமும் இராணுவ முகாம்களாலும் காவலரண்களாலும் முற்றுகையிடப்பட்டிருந்தன.
தற்போதும் ஆலயத்தின் காணியில் ஐந்து காணி(ஏக்கர்) நிலப்பகுதி இராணுவத்தின் முகாமாக உள்ளது. அப்பகுதியில் வசித்த மக்களின் பலகாணியளவு காணி நிலங்களில் இராணுவத்தினர் வலுவான படைமுகாமை அமைத்துள்ளனர். இவ்வாறான நிலையிலேயே கனகாம்பிகை ஆலய வளாகத்தில் புத்தர் சிலை நிறுவப்பட்டிருக்கின்றது.
அதனைச் சூழத் தற்போது மதில் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான பௌத்த மேலாதிக்க நடவடிக்கையினைத் தமிழ் அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளதுடன், போராட்டத்திற்கு ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து, கசேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
இராணுவத்தினரின் இந்த நடவடிக்கையானது கிளிநொச்சி மாவட்டத்தை முற்றுமுழுதாகச் சிங்கள மயப்படுத்தும் செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவே முன்னெடுக்கப்படுகின்றது.
இதனைத் தடுப்பதற்கு வேறுபாடுகளை மறந்து ஓரணியில் ஒற்றுமையாகத் திரளவேண்டும். கட்டமைப்பு சார் இன அழிப்பை மேற்கொள்வதன் மூலம் தமிழ்த் தேசியத்தின் இருப்பை இல்லாது அழிக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசு கடந்த ஏழுபதினாண்டுகளாகவே வடக்கு, கிழக்கில் மேற்கொண்டு வந்துள்ளது.
இதன் ஓர் அங்கமாகவே இந்தப் புத்தர் சிலை அமைக்கப்படுகின்றது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைவிடத் தற்போது தமிழர் தாயகத்தில் வடக்குமண்டிலத்தின் இதயப்பகுதியாகவும் முழுமையாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியாகவும் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு பகுதியில் தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை அழித்து பௌத்த மேலாதிக்கத்தை ஏற்படுத்திப் படிப்படியாகச் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் இராணுவ குடியேற்றங்களை ஏற்படுத்தித் தமிழர்களது மக்கள்தொகைப் பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் இந்தப் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இரணைமடு கனகாம்பிகை ஆலய வளவில் புத்தர் சிலை அமைக்கப்படுவதற்கு அகில இலங்கை இந்து மாமன்றமும் தமது கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பரம்பரைப் பகுதிகளில் இராணுவத்தினரால் விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதை நாம் ஏற்கனவே குடியரசுத்தலைவர், தலைமையாளர்(தலைமை யமைச்சர்), அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளோம்.
ஆனாலும், இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படாமல் தொடர்வது கவலையளிக்கும் நிகழ்வாகும். கனகாம்பிகை ஆலய வளவில் விகாரை அமைப்பதை உடன் தடுத்து நிறுத்தவும் அங்கிருந்து இராணுவத்தினரை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று இந்த மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் வலியுறுத்தியிருக்கிறார்.
இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று பேலியகொடை, கங்காராம பௌத்த விகாரையின் மதகுரு விமல ஃகன தேரர் புத்தர் சிலை நிறுவுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றார்.
கனகாம்பிகைக் கோயிலுக்கு அருகில் எந்தவிதமான இசைவுமின்றிப் பௌத்த விகாரை அமைக்கப்படுமாயின் அது பௌத்த மதத்திற்கு முரணானதாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி பொன்னநகர் பகுதியில் இடம்பெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் இதும் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இதற்கான எதிர்ப்பினை வெளியிட்டிருக்கின்றார்.
தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியில் முன்இசைவின்றி அவர்களின் விருப்பமின்றிப் புத்தர் சிலை வைக்கப்படுவதனை பௌத்த தேரரே எதிர்க்கும் நிலையில் அதற்கான நடவடிக்கைகளைப் படைத்தரப்பினர் எடுப்பதானது எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாத செயற்பாடேயாகும்.
சில வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை – சாம்பல்தீவு சந்தியிலும் பலவந்தமாகப் புத்தர்சிலை வைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
2006 ஆம் ஆண்டு திருமலை நகரப்பகுதியில் புத்தர் சிலை நிறுவப்பட்டதையடுத்து பெரும் முரண்பாடு எழுந்திருந்தது. இதேபோல் யாழ்ப்பாணம், நயினாதீவுப் பகுதியில் 80 அடி உயர, புத்தர் சிலையினை அமைப்பதற்காகன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அரசாங்கம் இசைவு அளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
ஆனால் இது தொடர்பில் அரசாங்கமானது தனது உறுதியான நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்காத போதிலும் நடவடிக்கைகள் தொடர்வதாகவே தெரிகின்றது.
இவ்வாறு வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பரம்பரைப் பூமிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றமை எந்தவகையிலும் இன நல்லுறவை ஏற்படுத்துவதற்கு உதவப்போவதில்லை.
பௌத்த மேலாதிக்கத்தை வடக்கு, கிழக்கில் திணிக்கும் வகையிலான இத்தகைய செயற்பாடுகள் இனியாவது நிறுத்தப்படவேண்டும்.
நல்லிணக்க முயற்சிகள் இடம்பெற்று வரும் இந்த வேளையில் புத்தர்சிலை விவகாரம் குறித்து அரசாங்கமும் மிகுந்த கவனம் செலுத்தவேண்டியது இன்றியமையாதது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
– தங்க ஆதவன்
– வாகைத்தமிழ்(தமிழ்வின்)
Leave a Reply