மதுவின் தாக்கத்தை ஆராய நாங்களே குழு அமைக்க வேண்டி வரும்! – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
மதுவின் தாக்கத்தை ஆராய நாங்களே குழு அமைக்க வேண்டி வரும்!
– தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
“உலக நலவாழ்வு அமைப்பு பரிந்துரைத்துள்ள அறிக்கைப்படி மாநில அரசு சாராயத் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு குழுவை அமைக்காவிட்டால், நீதிமன்றமே ஒரு குழுவை ஏற்படுத்தும்” எனத் தமிழக அரசை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
குமுக(சமூக) நீதிக்கான அமைப்பின் தலைவர் வழக்குரைஞர் கே.பாலு. அவர், சாராயம் தொடர்பான உடல்நலக் கோளாறுகளை எதிர்கொள்ள, உலக நலவாழ்வு அமைப்பு (WHO) செய்துள்ள பரிந்துரைகளை ஆய்ந்து நடைமுறைப்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரித் தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார்.
அவர் தன் உரையில், “மாநிலத்தில், மது குறித்தும் உயர்ந்து வரும் மது விற்பனை குறித்தும் அரசு முறையாகத் திட்டமிட்டுக் கொள்கைகள் எதுவும் வகுக்கவில்லை. 2008-09-இல் 10,601 கோடி உரூபாயாக இருந்த மது விற்பனை 2012-13-இல் 21,680 கோடி உரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதனால் மாநிலத்தில் மதுவின் தாக்கமும் அதனோடு தொடர்புடைய சிக்கல்களும் கூடியிருக்கின்றன” என்று குறிப்பிட்டார்.
இவ்வழக்கை உசாவிய(விசாரித்த) முதல் அமர்வின் தலைமை நீதியரசரான எசு.கே.கெளலும், நீதியரசர் சுந்தரேசும், “அரசுக்கு நாங்கள் கடைசியாக ஒரு வாய்ப்புத் தருகிறோம். இல்லையெனில், நாங்களே ஒரு குழுவை ஏற்படுத்த நேரும். வரும் சூன் 15-க்குள் அரசு மதுவின் தாக்கம் பற்றி ஆராய ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கைச் சூன் 17-க்கு ஒத்தி வைத்தனர்.
Leave a Reply