karunanidhi-meeting04

 ”ஆட்சிக்கு, கொள்கைகளுக்கு, வஞ்சனைகளுக்கு, சூழ்ச்சிக்கு, சொத்துக்குவிப்புக்கு எதிராக மாபெரும் புரட்சியை நடத்த வேண்டிய கட்டாயம் வந்துள்ளது,” என, திருச்சியில் நடந்த தேர்தல் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

 தி.மு.க., வேட்பாளர்கள் அன்பழகன் (திருச்சி), சின்னசாமி (கரூர்), சீமானூர் பிரபு (பெரம்பலூர்) ஆகியோரை ஆதரித்து, அவர் பேசியதாவது: “அ.தி.மு.க., ஆட்சியில், மக்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர். நீங்கள் கனவு கண்ட ஆட்சி வந்தது. அந்த ஆட்சி, சாதாரண மக்கள் வாங்கிப் புசிக்கின்ற விலைவாசியில் தான் கை வைத்தது. எது உயர்ந்தாலும், உயராவிட்டாலும் விலைவாசி உயர்ந்துள்ளது. இதைப் பற்றிக் கவலைப்படாமல்  செயலலிதா சொத்துக்களைக் குவிப்பதில் குறியாக உள்ளார். ‘நான் முதல்வரானால், ஒரு உரூபாய் சம்பளம் வாங்குவேன்’ என்று தம்பட்டம் போட்டார். தமிழகப் பத்திரிகைகள், ‘சம்பளம் வாங்காமல் ஆட்சி நடத்துகிறார்’ என்று பாராட்டின. ஒரு உரூபாய் சம்பளத்துக்கு மந்திரி வேலை பார்க்கப்போவதாக சொன்ன மாதா, சாதாரண மக்கள் வயிறு, வாயில் அடிக்கிறார். ஏழை மக்களை ஏமாற்றி, பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளார். யாருடைய பணம்? யாருடைய நிலம்? யார் செலுத்திய வரி? யாருக்குப் போய் சேர வேண்டிய செல்வம்? இதை, ஒரு சீமாட்டி தனக்கு உரியதாக ஆக்கிக்கொண்டு, பெரிய கோடீசுவரியாக வாழ்கிறார். மக்களுக்காகக் கவலைப்படும் முதல்வராக இல்லை.தனக்கு என்ன வேண்டும். தன் குடும்பத்திலே உள்ள உறுப்பினர்கள், சினேகிதிகள், உற்றார், உறவினர்களை மாத்திரம் காப்பாற்றினால் போதும்; தமிழகத்தில் உள்ள மக்கள் அலட்சியப்படுத்தப்பட வேண்டியவர்கள். கவலைப்படமாட்டேன், என்று செயலலிதா உள்ளார். ‘எது செய்தாலும் சரி’ என, எடுத்துக்கூற ஏராளமான பத்திரிகைகள் உள்ளன. இதனால், யார் என்ன செய்ய முடியும் என்ற ஆணவம், அகம்பாவம் ஏற்பட்டுள்ளது.

 இன்னும், பல மோசடிகளை, சொத்துக் குவிப்புகளை செய்து கொண்டு தான் இருப்பார். ஆகையால் தான், தி.மு.க., சார்பில், தமிழகத்தில் உள்ள மற்ற எல்லா கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.ஆட்சிக்கு, கொள்கைகளுக்கு, வஞ்சனைகளுக்கு, சூழ்ச்சிக்கு, சொத்துக்குவிப்புக்கு எதிராக மாபெரும் புரட்சியை நடத்த வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. ஏழை மக்கள், தொழிலாளர்  பிரிவினர், வீதியில் செல்லும் மக்களை ஒன்று திரட்டி புரட்சிக்கு  ஆயத்தப்படுத்தும் ஆட்கள் நிச்சயம் வருவர். அப்படி வந்தால், சட்டம் தேவையில்லை; மக்கள் கையில் அதிகாரம் கிடைத்தால், ஒரு கை பார்ப்பார்கள். புரட்சி வராமல் இருக்க அமைதியாக ஆட்சி நடத்த வேண்டும். மக்களைக் கொடுமைப் படுத்துவோம், என்று தாறுமாறாக நடந்து கொண்டால் தாங்காது, இந்த நாடு பொறுக்காது, என்பதை நடக்கும் இந்த ஆட்சிக்கு எச்சரிக்கையாக தந்து, உங்களிடம் ஆதரவு கேட்கிறேன்.” இவ்வாறு கருணாநிதி பேசினார்.