நூற்று ஐந்து அகவை கடந்த ..வைத்தியலிங்கம் இயற்கை எய்தினார்!

பட்டுக்கோட்டை செங்கப்படுத்தான்காடு ஊரில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நண்பரும் பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் ஊரில் வசித்து வரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளருமான நூற்று ஐந்து வயது கடந்த பெரியவர் வைத்தியலிங்கம் அவர்கள் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

 சிறுவயது முதலே பெரியார் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட இவர் கடைசிவரை பெரியார் கொள்கைகளில் முழு ஈடுபாடும் சமூகத் தொண்டும் செய்து வாழ்ந்து வந்தார்.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் குடும்பத்தோடு மிகுந்த நட்போடு இருந்த ஐயா வைத்திலிங்கம் அவர்களின் குடும்பம் பின்னர் பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் ஊரில் குடியேறியது.

சிங்கப்பூர் நாட்டில் பணியாற்றித் தனது கடும் உழைப்பால் பெற்ற பெரும் செல்வத்தைக் கொண்டு அழகியநாயகிபுரம் அரசு மருத்துவமனைக்கு நிலம் வாங்கிக் கொடுத்தார் ஐயா வைத்திலிங்கம்.

நிறைந்த உழைப்பும், கடன் வாங்காமல் வாழும் பண்பும், பசித்தபின் அளவோடு உண்ணும் பழக்கமும் ஐயாவின் நிறை வாழ்வுக்கு காரணமாக அமைந்தன என அவரே அடிக்கடிப் பல்வேறு கூட்டங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

சிறந்த கவிபுனையும் ஆற்றல் கொண்ட ஐயா அவர்கள் பதிப்பிக்கப் படாமல் பல்வேறு கவிதைகளைக் கையெழுத்துப் படிகளாகவே வைத்திருக்கிறார்.

சமூகத்திற்குச் சான்றாக வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த ஐயாவின் நூற்றாண்டு விழாவில் மெய்ச்சுடர், புரட்சிப் பெரியார் முழக்கம் ஏடுகள் சிறப்பு மலர் வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பேராவூரணி திருக்குறள் பேரவை ஐயா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

இரமேசு