பாராளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு 23
பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஒவ்வோர் ஆண்டும் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்படும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினருடனான சந்திப்பு 23 ஆம் நாள் பங்குனி மாதம் அன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரித்தானியத் தலைமையாளர் தாவீது கெமரொன் (David Cameron) வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்றது. இந் நிகழ்விற்குத் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவர் சேம்சு பெர்ரி (James Berry MP) தலைமை வகித்தார். தலைமை விருந்தினராகத் தெற்காசிய நாடுகளுக்கான வெளி நாட்டுத்துறை அமைச்சர் இயூகோ சுவைர் (Rt Hon Hugo Swire MP) கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் பிரித்தானியத் தலைமையாளர் தாவீது கெமரொன் (David Cameron) தமது வாழ்த்துச் செய்தியில் இந்நிகழ்விற்கு தனது மனப்பூர்வ வாழ்த்தினைத் தெரிவித்ததுடன் இலங்கையின் குடியரசுத்தலைவரும், தலைமையாளரும்(பிரதமரும்)பன்னாட்டு வல்லுநர்கள், அவர்களின் பட்டறிவுகளின் பங்களிப்புடன் பொறுப்புக் கூறல் தொடர்பான நடவடிக்கைகள், மீள் புனரமைப்பு என்பனவற்றை நிறைவேற்ற வேண்டும் எனப் பிரித்தானியாவின் பன்னாட்டு உசாவல் தொடர்பான நிலைப்பாட்டினை மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்தியிருந்தார்.
இலங்கையில் தமிழர்களின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாகவும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக இலங்கை அரசின் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தும் முகமாகவும் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழர்களின் கோரிக்கையினை முன்வைக்கும் முகமாகவும் ஒழுங்கு செயப்பட்ட இந்நிகழ்வில் பிரித்தானிய அரசின் கொள்கைகளிலும், முதன்மையான முடிவுகளிலும் தீர்மானகரமான செல்வாக்கு செலுத்தும் முதன்மைத் தலைவர்கள், மக்களின் சார்பாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளின் சார்பாளர்கள், பிரித்தானியாவிலுள்ள இந்தியச் சமூகத்தின் செல்வாக்கு மிக்கக் சார்பாளர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவினையும் கருத்தினையும் வழங்கினர்.
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட பிற்பாடு உலக அரசியலின் ஒழுங்குக்கு ஏற்ப அனைத்து நாடுகளுடன் எமது உறவைப் பலப்படுத்த வேண்டிய நிலைப்பாட்டின் முதன்மைத்துவத்தை உணர்ந்து பிரித்தானியத் தமிழர் பேரவை தனது அரசியல் செயற்காடுகளை அனைத்து நாடுகளுடனான உறவைப் பலப்படுத்துவதினூடாகப் பல தளங்களில் விரிவுபடுத்தியிருந்தத்துடன் அனைத்து நாடுகளின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் பல மாற்றங்களையும் ஏற்ப்படுத்த வழிவகுத்திருந்தது. . குறிப்பாகக் கடந்த பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானியத் தலைமையாளர் தாவீது கமரோனால் முன்மொழியப்பட்ட தற்சார்பு பன்னாட்டுஉசாவல் முதல் கடந்த வருடம் ஐ. நா. அவையின் மனித உரிமை ஆணையாளரினால் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான அறிக்கை வரை அனைத்து நாடுகளுடனான பிரித்தானியத் தமிழர் பேரவையின் தொடர் செயற்பாடே முதன்மைப் பங்கு வகித்தது.
ஐ. நா.அவையின் மனித உரிமை ஆணையாளரினால் முன்மொழியப்பட்ட இலங்கைக்கு எதிரான பன்னாட்டு உசாவல் அமெரிக்காவின் தலையீட்டாலும் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினாலும் நீர்த்துப் போன தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இத் தீர்மானம் அமைந்திருந்தாலும், இத் தீர்மானத்தில் உள்ள அனைத்து நாடுகளின் ஈடுபாட்டினை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி தமிழர்களின் அழுத்தங்களைச் செலுத்தும் முகமாக இவ் ஒன்றுகூடல் ஒழுங்கு செயப்பட்டு இருந்தது. இவ் ஒன்று கூடலில் பங்குபற்றிய பாராளு மன்ற உறுப்பினர்களிடம் இலங்கையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரவும், உசாவலில் பன்னாட்டு நீதிவான்கள் மற்றும் உசவாலர்களின்(விசாரணையாளர்களின்) பங்குபற்றலினை உறுதிப்படுத்தவும் சாட்சியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுதத்துவதுடன் தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தினரை முற்றாக வெளியேற்றக்கோரி இலங்கை அரசிற்கு அழுத்தங்களைக்கொடுக்குமாறும் பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் தமிழர்களின் உரிமைகள் கிடைக்கும் வரையில் பிரித்தானியா தொடர்ச்சியாக தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் என உறுதிமொழி அளித்திருந்ததுடன் இலங்கை அரசு உடனடியாகப் போர்க்குற்றம், சித்திரவதை தொடர்பான குற்றச்செயல்களுக்குப் பொறுப்புக்கூறல் தொடர்பாக வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் மீள் புனரமைப்பினை மேற்கொள்ளல் வேண்டும் எனவும் தமது கோரிக்கையினை முன்வைத்தனர்.
Leave a Reply