சிலப்பதிகார விழா02 : chilappathikaaravizhaa02

புதுச்சேரி ஆளுநர்  தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை

மதிக்க வேண்டும் – தனித்தமிழ் இயக்கம்

 ஆண்டுதோறும் சிலப்பதிகாரவிழாவைப் புதுச்சேரியில் தனித்தமிழ் இயக்கம் நடத்திவருகிறது. இவ்வாண்டு ஆனி 16, 2047 / சூன் 30, 2016 இல் புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் சிலப்பதிகார விழா நடைபெற்றது.

 தனித்தமிழ்இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில் முனைவர் கனகராசு வரவேற்புரை நிகழ்த்தினார். சிலப்பதிகாரம் பற்றிய பா வரங்கில் மு.பாலசுப்பிரமணியன், இரா.தேவதாசு, ஆறு.செல்வன், சண்முகசுந்தரம், இரா. இள முருகன், நட.இராமமூர்த்தி ஆகிய பாவலர்கள் கலந்து கொண்டனர். புரவலர் கி.கலியபெருமாள் செயல்அறிக்கை படித்தார். புரவலர் கோ.இரத்தினவேல் வாழ்த்துரை வழங்கினார்.

  முனைவர் க.தமிழமல்லன் ‘கண்ணகிசமயம்’ என்னும் தலைப்பிலும் முனைவர் நா.இளங்கோ ‘சிலம்பும்தென்றலும்’ என்னும் தலைப்பிலும் செம்மொழித்தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் ‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்’ என்னும் தலைப்பிலும் கலக்கல் காங்கேயன் ‘சிலப்பதிகாரத்தில் இலக்கியச்சுவை’ என்னும் தலைப்பிலும் உரைநிகழ்த்தினர்.

 புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வெ.முத்து தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகளார் படத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.

 உமாகாந்தன், பார்த்தசாரதி ஆகியோர் விருந்தினர்களைச் சிறப்பித்தனர். த.தமிழ்ச்செல்வி, உலோ.பசுபதிகரிகாலன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அவ்விழாவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. த.தமிழ்த்தென்றல் தீர்மானங்களைப்படித்தார்.

  1. சட்டமன்றத்தில் உறுதிமொழியளித்ததற்கேற்ப புதுச்சேரி அரசு உடனடியாகத் தமிழ்வளர்ச்சித் துறை  ஒன்றை அமைக்க வேண்டும். அதற்காகத் தொகை  ஒதுக்கித் தனிஅலுவலர் ஒருவரை அமர்த்த வேண்டும்

2. புதுச்சேரி து.நி.ஆளுநர் கிரண்பேடியின் பொதுமக்கள் தொடர்புகளையும் நற்பணிகளையும் தனித்தமிழ் இயக்கம் பாராட்டுகிறது. அவரது பணி சிறக்கும்   வகையில் மக்கள் தொடர்பு எளிமைகருதி ஆளுநர் கிரண்பேடி பொதுமக்கள் மொழியான தமிழ்மொழியை முந்திய ஆளுநர்களைப் போலக் கற்றுக்கொள்ள வேண்டும்.

3. புதுச்சேரியின் ஆட்சிமொழி தமிழ் ஒன்றேஆகும். சட்டத்தின் ஆட்சியை விரும்பும் ஆளுநர் அச்சட்டத்தை மதித்து அதைமுழுமையாகச் செயற்படுத்த முன்வரவேண்டும்.அரசின் நடைமுறைகள் முழுமையாகத் தமிழில் நடைபெற ஆவன செய்யவேண்டும்.

4. பாவேந்தர் 125ஐச் சிறப்பிக்கும் வகையில் சுற்றுலா நன்மை கருதிப் புதுச்சேரிக் கடலில் பாவேந்தரின் 150அடிஉயரச் சிலையொன்றை அமைக்க வேண்டும்.

சிலப்பதிகார விழா01 : chilappathikaaravizhaa01