பொதுத் தேர்வும் (நீட்/NEET) இளந்தளிர் அனிதாவின் இழப்பும்

– அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம்

 

  அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் எனும் சிற்றூரில் கூலித் தொழிலாளியான திரு.சண்முகம் அவர்களின் குழந்தை அனிதா ‘நீட் (NEET)’ எனப்படும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வினால் தனது வாழ்நாள் கனவான மருத்துவக் கல்வியை இழந்தார். முறையான மருத்துவச் சேவை கிடைக்காததால் தனது சிறு வயதிலேயே தாயை இழந்தார் மாணவி அனிதா. இப்பேரிழப்பு தந்த வலியால், தான் மருத்துவராகி தனது சிற்றூர் மக்களுக்கு உதவ வேண்டுமென்ற உயரிய குறிக்கோளுடன் தன் குடும்ப வறுமையெல்லாவற்றையும் பொருட்படுத்தாது, தன் இலட்சியக் கனவை அடையும் வகையில் அயராதுழைத்து 12 ஆம் வகுப்பில் மிகச்சிறந்த மதிப்பெண் எடுத்து மருத்துவப் படிப்புக்குத் தகுதி பெற்றிருந்தார்.

  தனது தரப்பு நியாயத்தை நிறுவ, தில்லி சென்று உச்சநீதி மன்றத்தின் படியேறி நீதியின் கதவுகளைத் தட்டியும்  நீட் (National Eligibility cum Entrance Test (NEET)) என்ற மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்டதால் சமூக நீதிக்கான அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டதைத் தாங்க இயலாத நிலையில் மருத்துவராக வலம்வர இருந்த ஒரு மொட்டின்  வாழ்க்கை அநியாயமாகப் பறிக்கப்பட்டதற்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றது.  மாணவி அனிதாவின் இழப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு  மட்டுமல்லாது, உலகெங்கிலும் பரவி வாழும் தமிழர்களையும், அதே போன்று அமெரிக்கவாழ் தமிழர்களையும்  பெருந்துயரில் ஆழ்த்திய நிகழ்வாகும்.

  மாணவி அனிதாவின் இழப்பிற்கு நீதி கிட்ட வேண்டும், தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவர் கனவிற்கு தடை போடும் பொதுத் தேர்விற்கு (நீட்/NEET) விலக்கு வேண்டும் எனத் தமிழ்நாட்டில் மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக அறம் காக்க போராடி வருகின்றனர்.

  இத்தருணத்தில் தமிழ்நாட்டில் உள்ள நம் சொந்தங்களுக்காகத், தமது முழு ஆதரவை தெரிவிக்க அமெரிக்கத் தமிழர்களும் ஒன்று திரண்டனர்.  அமெரிக்கா முழுவதிலும் உள்ள  தன்னார்வலர்கள், தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், பல தொண்டு நிறுவனங்களைச்  சார்ந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொடர் முயற்சியாக, முகநூல்  முதலான சமூக வலைத்தளங்களின் மூலம் மாணவி அனிதாவிற்கு தங்கள் ஆதரவை கொண்டு சேர்த்துள்ளனர்.

நினைவஞ்சலிக் கூட்டங்கள்

செப். 2 சனிக்கிழமை தொடக்கம் மிச்சிகன், நியூசெர்சி, டெக்சாசில் தொடங்கி டெலாவெர், அட்லாண்டா, வாசிங்டன், சிகாகோ, கலிபோர்னியா, மினசோட்டா, கனக்டிகெட், கேரொலைனா, நியூயார்க், செயின்ட் லூயிசு, ப்ளோரிடா என அமெரிக்கா முழுவதும் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் மாணவி அனிதாவிற்கு நினைவஞ்சலி – நீதி கோரும் கூட்டங்கள் நடைபெற்றன.  தன்னார்வளர்களும், உள்ளூர் தமிழ்ச்சங்க மக்களும் முன்னெடுத்த இந்நிகழ்வுகளில் அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் குழந்தைகள், பெண்கள் எனக் குடும்பத்துடன் நூற்றுக்கணக்கில் இக்கூட்டங்களில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தம் உணர்வுகளை வெளிப்படுத்தினர். பேரவையின் சார்பாக மாணவி அனிதாவிற்கு நடைபெறும் நினைவஞ்சலிக் கூட்டங்களில் பங்கேற்க அனைத்துத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்து அறிக்கையும் வெளியிடப்பட்டது.

பல்வழி அழைப்புகள்

 செப். 7 வியாழக்கிழமை தொடக்கம் இணைய வழியில் மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் தொடர் பல்வழி அழைப்புக் கூட்டங்கள் நடைபெற்றன.  தமிழ்நாட்டின் கல்வித்துறை வரலாறு, ‘நீட்’ எனும் மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு,  இதனால் தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத் துறையில் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து அமெரிக்கா வாழ் தமிழர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் இத்தொடர் கூட்டங்கள் நடைபெற்றன.  தன்னார்வலர்கள், பெரியார் பன்னாட்டமைப்பு, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பாக நடைபெற்ற இக்கூட்டங்களில் கல்வியாளர் திரு. பிரின்சு கசேந்திரபாபு, மருத்துவர் எழிலன் நாகநாதன், நீதிபதி திரு. இராசன், பேராசிரியர் மணி நாச்சிமுத்து, பேராசிரியர். கல்யாணி ஆகியோர்  அழைப்பில் உரையாற்றினர்.

அமைதிப் பேரணி

  தொடர்ச்சியாக அமெரிக்கத் தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசிற்கு வெளிப்படுத்தும் நோக்கிலும், மாணவி அனிதாவிற்கு நீதி வேண்டியும், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க வேண்டியும் செப். 16, 17 ஆகிய நாட்களில் ஐந்து நகரங்களில் இந்தியத் தூதரக வளாகங்கள் அருகில் அமைதிப் பேரணிகள் நடைபெற்றன. வாசிங்டன், சிகாகோ, நியூயார்க், கலிபோர்னியா, அட்லாண்டா ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த அமைதிப் பேரணி கவனயீர்ப்பில் தன்னார்வலர்கள், தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கையெழுத்து பரப்புரை

  மாணவி அனிதாவிற்கு நீதி வேண்டி அமெரிக்கா வாழ் தமிழ் மக்களின் சார்பாக இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் அனுப்ப உள்ள மனுவில் கையெழுத்து வாங்கும் நடவடிக்கை, இணைய வழியிலும், நேரிலும் கடந்த செப். 2 முதல் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  பெருமளவிலான மக்களிடம் கையெழுத்து பெற்று இம்மனுவிற்கு வலுசேர்க்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

 அண்மைக் காலங்களில் சென்னை வெள்ளப் பாதிப்பு, சல்லிக்கட்டு போராட்டம் போல தமிழ்ச்சொந்தங்களின் உரிமைகளுக்கும், நல்வாழ்விற்கும், அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் எப்பொழுதும் துணை நிற்கின்றனர். இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாகத் தற்பொழுது மாணவி அனிதாவின் இழப்பிற்கு நீதி கோரி தொடர்ச்சியான முன்னெடுப்புகளை அமெரிக்கா வாழ் தமிழர்கள் முன்னெடுத்து வருகின்றனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை