“நம்மை வீழ்த்தி என்றும் அடிமைகளாக மாற்றுவதற்காகச் சூழ்ச்சிக்காரர்கள் தீட்டிய சதியால் கொண்டுவரப்பட்ட மதுக்கடைகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற உணர்வு தமிழகம் முழுவதும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கிவிட்டது. இந்த நெருப்பை ஆட்சியாளர்களால் அணைத்துவிட முடியாது. அரசின் மதுக்கடைகளுக்கு முடிவுகட்டும் நேரம் நெருங்கிவிட்டது. அதற்கான இறுதிப் போர்தான் 24.12.2013 அன்று காலை 9 மணிமுதல் முதல்வர் செயலலிதா அவர்களின் போயசு தோட்டம் வீட்டின் முன்பாகத் தொடங்கவுள்ள காலவரையற்ற உண்ணா நோன்பு அறப்போர். அனைவரும் இந்த அறப்போரில் பங்கேற்க வாருங்கள்.துணிவும் வீரமும் மிக்க இளைஞர்களே! இளைய தலைமுறை மீது உண்மையான அக்கறை கொண்ட சான்றோர்களே! வாருங்கள் போயசு தோட்டத்திற்கு! இது தமிழ்நாட்டின் மானம் காக்கும்  தூயப்போர்! அன்போடும் வீரத்தோடும்,ஆ.நந்தினி,மதுரை சட்டக்கல்லூரி மாணவி..தொடர்புக்கு-8124718850,9750724220…”

 என அறப்போர்நாயகி நந்தினி அறிவித்துள்ளார்.  nanthini group1

மேலும் சட்டக்கல்லூரி மாணாக்கியான நந்தினி பின்வருமாறும் மடல் அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்திய அரசியல்யாப்பின் பிரிவுகள் 47,19(1),21, இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 107,108,157,328,405 ஆகியவற்றின்படி  அரசே மதுக்கடைகள் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்வது தண்டனைகுரிய குற்றம் என்பதைக் கடந்த 01.03.2013 அன்று மது இல்லா தமிழகம் காணவிரும்பும் 222 சட்டமாணவர்கள் அளித்த  வேண்டுகையில் தெரியப்படுத்தியுள்ளோம். இதற்குத் தமிழக அரசு அளித்த  மறுமொழியில் “மது விற்பது அரசின் கொள்கை முடிவு” எனத் தெரிவித்துள்ளீர்கள். சட்டத்துக்குப் புறம்பாக அரசு கொள்கை வகுக்க முடியாது என்று நாங்கள் பலமுறை தமிழக அரசுக்குச் சுட்டிக்காட்டினோம்,பல நாட்கள் உண்ணாநோன்பு இருந்தோம், மேலும் மக்களும் மாணவர்களும் சேர்ந்து தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறோம்.ஏற்காடு இடைதேர்தலிலும் மதுவுக்கு எதிராகத் தீவிரப்  பரப்புரை மேற்கொண்டோம். எதற்குமே நீங்கள் செவிசாய்க்காத நிலையில்தான் கடைசியாக 06.12.2013 அன்று உங்களுக்கு மடல் எழுதப்பட்டது. இதற்கும் நீங்கள்  மறுமொழி அளிக்கவில்லை என்பதால்தான் மதுவுக்கு எதிரான இறுதிப் போராக உங்கள் வீட்டின்முன் காலவரையற்ற உண்ணாநோன்பு  இருக்க முடிவு செய்துள்ளோம். இப்போது சொல்லுங்கள்! எங்களைப் போராடத் தூண்டுவது நீங்கள் தானே? வழக்கம்போல் காவல்துறை மூலம் இப்போராட்டத்துக்கு எல்லாத் தடைகளையும் ஏற்படுத்துவீர்கள் என்பது தெரியும். ஆனாலும் எல்லாத் தடைகளையும் மீறி போராட்டம் உறுதியாக நடக்கும். நீதியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அநீதிக்குக் கிடையாது. எப்போதும் இறுதியில் நீதியே வெல்லும். அரசு  (தாசுமாக்கு) மதுக்கடைகளை உடனடியாக மூடுவது ஒன்றுதான் உங்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பு. அரசுக்கு வருமானம் போய்விடும், கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்றெல்லாம் கையாலாகாத வாதங்களைக் கொண்டு இனிமேலும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. ஆற்றுமணல்,தாது மணல், கருங்கல் கொள்ளை ஆகியவற்றைத் தடுத்தாலே மது வருமானம் போல இருமடங்கு வருவாயை அரசால் ஈட்ட முடியும். சட்டத்தை முறையாகப் பயன்படுத்தினாலே கள்ளச்சாராயத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். பள்ளி மாணவர்களிடம் கேட்டாலே அரசின் வருவாய்க்கு ஆயிரம் வழிகளைச் சொல்வார்கள். நான் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் முடிவு உங்கள் கையில்… “படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோவெனப் போவான்”

இவ்வாறு அவர் மாண்புமிகு முதல்வருக்கு மடல் அனுப்பி, காவல்துறையின் உயர் அலுவலர்களுக்கும் பிற அரசியல்கட்சித்தலைவர்களுக்கும் ஊடகங்களுக்கும்  மடல் அனுப்பியுள்ளார்