வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா!

படஉருவாக்குநர்க்குப் பாராட்டு!

  குவைத்து வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா, ஆடி 23, 2045 / ஆக.8, 2014 வெள்ளி மாலை 5.30 மணிக்கு மங்காப்பு விழா அரங்கில் மிகச்சிறப்பாக   நடைபெற்றது. இவ்விழா,குவைத்து தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த “இருக்கு ஆன இல்ல” படஉருவாக்குநர்களைப் போற்றும் வகையிலும், அவர்களுள் ஒருவரான திரு செல்லத்துரை, பாடலாசிரியராக அறிமுகமான செங்கை நிலவன் ஆகியோரைப் பாராட்டும் வகையிலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடந்தது.

  விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நிறுவனர் செம்பொன்மாரி கா.சேது அவர்கள் வரவேற்க, திரு.அலெக்சு, கவிஞர் திரு. வித்யாசாகர், திரு செங்கை நிலவன் ஆகியோர் விழா மேடைக்கு சிறப்பு சேர்த்தனர்.

  வேலைப்பளுவின் காரணமாக நிகழ்ச்சியில் திரு செல்லத்துரை அவர்கள் உரிய நேரத்தில் கலந்து கொள்ளமுடியாத காரணத்தால் அவர்களின் சார்பாக நிலவனை முன்னிலைப்படுத்தி பாராட்டு அரங்கம் நடந்தேறியது.

  கவிஞர் வித்யாசாகர் ”இருக்கு ஆன இல்ல” படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான செங்கை நிலவனுக்குப் பொன்னாடை அணிவித்தார்; பட ஆக்குநர் திரு செல்லத்துரை அவர்களை வாழ்த்திப் பேசினார்.

  நந்தவனம் சார்பாக அதன் பொறுப்பாளர்கள் திருஇரவி வளவன், திருமதி தேவிஇரவி, திரு மகேசு, குழுவினர்கள் பொன்னாடை அணிவித்துப் படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார்கள்.

  பாவேந்தர் கழகத்தின் சார்பாக வாழ்த்திப் பேசிய அதன் தலைவர் திரு சேகர் அவர்கள் குவைத்து படஉருவாக்குநர்களுக்கும் அவர்கள் அறிமுகபடுத்தியதற்கும் நன்றி தெரிவித்து வாழ்த்துரை வழங்கினார். வாழ்த்திப் பேசிய அனைவரும் செங்கை நிலவனை பாடலாசிரியாராக அறிமுகப்படுத்திய குவைத்து பட ஆக்குநர்களுக்கும் திரு செல்லத்துரை அவர்களுக்கும் பாராட்டும் நன்றியும் மறக்காமல் பதிவு செய்தனர்.

  கவிதைத் தளத்தில் திரு இரவிச்சந்திரன், திரு. சுப்பிரமணியன் திரு தயாளன், திருமதி நசிமா (ஒளிப்படக் கலைஞர்) ஆகியோர் கவிதை வழங்கினர்.

  விழாவின் மண்ணிசைப் பாடல் பிரிவில் திரு முருகேசன் திரு இராமகிருட்டிணன் திரு.செந்தில் ஆகியோரும், மெல்லிசைப் பாடல் பிரிவில் திருமதி மஞ்சுளா, திரு கணேசன், திரு. சண்முகம், ஆகியோரும் பாடி வந்திருந்த அனைவரையும் இன்னிசை மழையில் நனைத்தார்கள்.

  தமிழ் இலக்கியத்தளத்தில் திரு பழ கிருட்டிணமூர்த்தி, சாந்தகுமார் , திரு விருதை பாரி ஆகியோர் மிகச் சிறப்பாக இலக்கியச் சுவையுடன் படக்குழுவினரை வாழ்த்திச் சிறப்புரையாற்றினார்கள்.

  வரும் அக்டோபர் 5இல் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கின்ற கவியரங்கம் – மண்ணிசை விழாவில் திரைப்பட பாடலாசிரியர் திரு பழநி பாரதி அவர்களும், தமிழகத்தின் தலைசிறந்த மண்ணிசைக் கலைஞர்களாக வலம் வரும் இணையர் திரு/திருமதி மகிழினி மணிமாறன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றார்கள் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார்கள்.

  ஏற்புரையில் செங்கை நிலவன் அவர்கள் எப்படி திரைப்படப் பாடலாசிரியர் ஆனேன் என்று எடுத்துரைத்தார். சங்கத் துணைத்தலைவர் அலெக்சு அவர்கள் நன்றி நவின்றார். கவிஞர் முனு.சிவசங்கரன் தொகுத்து வழங்கினார். இரவு விருந்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது