“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே (புறம்: 312)
பெண்ணடிமைத்தனமா ?

 பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர், குழந்தையைப் பெற்றேடுப்பதை விட அப்பிள்ளையைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பதே தாய்மாரின் பெரும் பொறுப்பாகும். அதிலும் கன்னியரையும் காளையரையும் சமுதாய நலம் பேணுபவராய் வளர்த்து எடுத்துக் கொடுப்பது மிகமிகக் கடினமான செயலாகும்.

அந்தக் கடினமான செயலைச் சங்ககாலத் தாய்மார் தத்தம் பண்புகளுக்கு ஏற்ப மிக நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.

  சங்ககாலத் தாய்மார் அப்படி வளர்த்திராவிட்டால் சங்கப்பாடல்களையும், சங்க இலக்கியங்களையும், சங்கச்சான்றோர்களயும் நாம் கண்டிருக்க முடியுமா?

“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கி
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” – (புறம்: 312)

எனப் புறநானூற்றில் கூறியுள்ளார்.

  புறந்தருதல் எனும் சொல் பாதுகாத்தல் எனப்பொருள்தரும்.

  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்  ஒரு தாயாக நின்று,  வீட்டிற்கும், நாட்டிற்கும் உள்ள கடமைகளைச் சுட்டிக்காட்டிய ஆளுமையுள்ள தலைசிறந்த பெண்ணாகப் பொன்முடியார் திகழ்ந்துள்ளார்.

  ஆனால் இப்பாடலில் பெண்ணின் அடிமைத்தனத்தை பொன்முடியார் உறுதி செய்திருப்பதாக சிலர் எழுதி வருகிறார்கள்.

  பெண் அடிமைத்தனம் இப்பாடலில் எங்கிருக்கிறது?

 

  நாட்டை ஆளும் அரசனுக்கும் சேர்த்தே, இது இது, உங்கள் கடமை எனச்சுட்டிக் காட்டி இருப்பதை எப்படி அடிமைத்தனம் என்று சொல்வது?

பெண் அடிமைத்தனம் என எழுதுவோர்

“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே”

என்று பொன்முடியார் சொன்னதில் வரும் புறந்தருதல் என்பதைப் பிள்ளையைப் பெறுவது எனக் கருகின்றனர். அப்படி பிள்ளையைப் பெறும் இயந்திரமாக அடிமையாகச் சங்ககாலப் பெண்கள் வாழ்ந்தார்கள் என எழுதுவது சரியல்ல. பிள்ளையைப் பெறுவதே தன் கடமை என்று பொன்முடியார் இப்பாடலில் கூறவில்லை.

புறந்தருதல் என்பது என்ன என்பதைப் பதிற்றுப்பத்துப் பாடல் சொல்வதைக் கொண்டு பார்ப்போம். அதில்

“பாடுசால் நன்கலம் தரூஉம்
நாடுபுறந் தருதல் நினக்குமார் கடனே” 
– (பதிற்றுப்பத்து: 59: 18 – 19)

எனத் ‘திறையாகப் பொருட்களைக் கப்பலில் அனுப்பி வைக்கும் நாடுகளைப் பாதுகாப்பதும் உனது கடமையாகும்’ என்று நற்செள்ளையார் சேரலாதனுக்குக் கூறுகிறார்.

  புறந்தருதல் என்னும் சொல் பிள்ளைபெறுவது என்ற கருத்தைத் தருமானால் திறையளக்கும் நாடுகளையும் சேரலாதரன் பிள்ளை பெறுவதுபோல் பெற்றெடுப்பானா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

நன்றி
இனிதே, 
தமிழரசி.

மண் வாசம்