கொடுமை செய்வோர் வாழ்கின்றார்! – கெருசோம் செல்லையா

கொடுமை செய்வோர் வாழ்கின்றார்!   கொன்று, திருடி, ஏமாற்றி, கொடுமை செய்வோர் வாழ்கின்றார்!. இன்று இவரைப் பாராட்டி ஏற்போர் நாட்டில் ஆள்கின்றார். அன்று இறைவன் உரைத்திருந்தும், அவற்றை மறப்போர் வீழ்கின்றார். நன்று எதுவென உணர்பவர்தான், நன்மை வழியில் மீள்கின்றார்!   – கெருசோம் செல்லையா  

தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகிறார் -கெர்சோம் செல்லையா.

தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகிறார்!   எப்படிச் சேர்த்தார் எனப் பாராமல், எவ்வளவென்று மலைக்கின்றார். இப்படித் தவற்றைப் புகழத் தொடங்கி, எளியரும் பண்பைக் கலைக்கின்றார். தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகி, தரணியைச் சீர் குலைக்கின்றார். அப்படிப்பட்டோர் கையினில் மீள, அறத்தைப் பிடிப்போர் நிலைக்கின்றார்! கெர்சோம் செல்லையா

மலைபோல் பற்று எனக்கில்லை! – கெருசோம் செல்லையா

மலைபோல் பற்று எனக்கில்லை! மலையைப் பெயர்த்துக் கடலில் கொட்டும், மாபெரும் பற்றும் எனக்கில்லை. கலையழகுள்ள சிலைபோல் கட்டும், கைத்திறன் அறிவும் எனக்கில்லை. விலை மதிப்பில்லா பொருளாய்க் கிட்டும், விண்ணின் அன்பும் எனில் இல்லை. இலைபோல் கருகும் இவ்வாழ்வைக் காட்டும், இறைமுன் வந்தேன், குறையில்லை! – கெருசோம் செல்லையா

பார்வை இல்லார் வாழப் பாடுவோமா? – கெருசோம் செல்லையா

பார்வை இல்லார் வாழப் பாடுவோமா? உருவில் அழகு குறையுமானால், ஒப்பனை செய்ய ஓடுகிறோம்! தெருவில் அழுக்கு நிறையுமானால், தென்படுவோரைச் சாடுகிறோம்! எருவில்லாத பயிரைப் பார்த்து, ஏங்கலும் கொண்டு வாடுகிறோம். கருவிலிருந்தே பார்வை இல்லார், களிப்புடன் வாழப் பாடுவோமா? கெருசோம் செல்லையா

உணவளித்தால் உம்மை வாழ்த்துவரே! – கெருசோம் செல்லையா

உணவளித்தால் உம்மை வாழ்த்துவரே!   பசியென்று  வருபவரைப், பரிவுடன் பார்த்திடுவீர்! புசியென்று உணவளித்து, புன்னகையும் சேர்த்திடுவீர். கசியும் நீரூற்றாய்க் கண் கலங்கிக் கேட்பவர்கள், பொசியும் இறையன்பால், பொங்கியுமை வாழ்த்துவரே! – கெருசோம்  செல்லையா

நான்கு காசு சேர்ப்பதற்காம்! – கெர்சோம் செல்லையா

நான்கு காசு சேர்ப்பதற்காம்!   ஆட்டிப் படைப்பதை ஆட்சி என்றார்; அதைத்தான் விரும்பும் காட்சி என்றார். காட்டிக் கொடுப்பதைத் திறமை என்றார்; கயமை கொள்வதும் உரிமை என்றார். நாட்டில் நன்மை செய்வதெல்லாம், நான்கு காசு சேர்ப்பதற்காம்; ஊட்டிக் கொடுக்கும் இந்நஞ்சை, ஒழிக்கும் வழிதான் இறையரசாம்! – கெர்சோம் செல்லையா

கேளேன்! – கெர்சோம் செல்லையா

நீர் காண்பதுபோல் நான் காண …. ஊர் முழுதும் சொத்தும் கேளேன்; உணவு, உடை, வீடும் கேளேன்; பார் புகழும் பேரும் கேளேன்; பரிசு, பொருள் என்றும் கேளேன். நீர் காணும் காட்சியைத்தான், நான் காண விரும்புகின்றேன். நேர்மையாய் பார்க்கும் இறையே, நெஞ்சில் உம் ஆவி கேட்டேன். -கெர்சோம் செல்லையா.

புளிப்பு எது? இனிப்பு எது? – கெர்சோம் செல்லையா

புளிப்பு எது? இனிப்பு எது?    வெளியே தெரியும் தோற்றம் கண்டு, வெறுப்போ விருப்போ கொள்கின்றோம். எளிதாய் நாமும் எடைக்கல் போட்டு, இருக்கும் உண்மையைக் கொல்கின்றோம். தெளிவாய் நோக்கும் தெய்வம் காட்டும் திசையின் வழியை மறுக்கின்றோம். புளிப்பா? இனிப்பா? புரியாதவராய் பொய்மையில்தானே இருக்கின்றோம்!   – கெர்சோம் செல்லையா

பயனில்லாரைத் தெரிவது தொல்லை! – கெர்சோம் செல்லையா

பயனில்லாரைத் தெரிவது தொல்லை! ஏழ்மை ஒழிப்பே நோக்கு என்பார்; ஏழையை ஒழிக்கவே நோக்குகின்றார்! ஊழல் இல்லா ஆட்சி என்பார்; ஊதிப் பெருக்கவே ஆளுகின்றார்! வாழ வைக்கும் தலைவரும் இல்லை; வறுமையை ஒழிக்கும் தலையும் இல்லை! பாழாய்ப் போனது தேர்தல் இல்லை; பயனில்லாரைத் தெரிவதே தொல்லை! -கெர்சோம் செல்லையா

செந்தமிழ் நாட்டார் வாடுகிறார்! – கெர்சோம் செல்லையா

செந்தமிழ் நாட்டார் வாடுகிறார்!   மக்களாட்சி என்ற பெயரில், மானம் விற்போர் ஆடுகிறார். சக்கையாக ஏழையைப் பிழிந்து சாற்றை எடுத்து ஓடுகிறார்! செக்கு மாடாய்ச் சுற்றுகின்ற செந்தமிழ் நாட்டார் வாடுகிறார். எஃகு போன்ற துணிவு இல்லை; இதனால் அழுது பாடுகிறார்! -கெர்சோம் செல்லையா

ஆறுதல் இல்லாத் தேர்தல்! – கெர்சோம் செல்லையா

ஆறுதல் இல்லாத் தேர்தல்! அள்ளி வீசும் காசுகளால், ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கின்றார். கொள்ளையடிக்கும் நோக்கில்தான், கூட்டணி என்று சேர்க்கின்றார். தள்ள வேண்டும் இவர்களை நாம், தன்மானத்தில் ஏற்பவர் யார்? வெள்ளையடித்தக் கல்லறையை, வீடெனக் கொள்வோர் தோற்கின்றார்! -கெர்சோம் செல்லையா.