(அறிவுக்கதைகள்நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 7. பொன்னும் பொரிவிளங்காயும், 8. வீண்பேச்சு  & 9. போகாத இடம்-தொடர்ச்சி)

இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து அரசி விக்குடோரியா மகாராணி அவர்கள், தன் பேரன் ஐந்தாம் சியார்சை {பிற்காலத்தில் மன்னன்) இளமையில் வெளிநாட்டில் ஒரு கப்பல்கட்டுந் துறையில் பணிபுரிய அனுப்பியிருந்தார். பேரனுடைய செலவுக்கு அங்குக் கிடைக்கும் சம்பளம் போதாது என்று எண்ணித் தானும் ஒரு ஐம்பது பவுன் மாதந்தோறும் அனுப்பிக்கொண்டிருந்தார்.

‘தன் செலவுக்கு இந்தப் பணமும் போதவில்லை’ என்று ஐந்தாம் சியார்சு பாட்டி விக்குடோரியா மகாராணிக்கு, ‘இனி நூறு பவுனாக அனுப்புங்கள்’ என்று எழுதிக் கேட்டிருந்தார்.

இதனைக் கண்டதும், மகாராணியார் சிந்தனையில் ஆழ்ந்தார். அதிகமாக அனுப்ப விரும்பவில்லை. அனுப்பாமல் இருக்க மனமும் ஒருப்படவில்லை அனுப்பாவிட்டால் பேரன் வருந்துவானே என்ற கவலை ஒருபுறம். அனுப்பினால் பேரன் அதிக செலவாளியாகிக் கெட்டுவிடுவானே என்ற வேதனை மற்றொருபுறம் என் செய்வார்! இந்தக் குழப்பத்திலே அவரால இன்னது செய்வது என்றே புரியல்லை.

பேரனை எண்ணிக், கடிதம் எழுதுவார்; அதை அனுப்பாமல் கிழித்துப் போடுவார். எழுதுவதும், கிழித்துப் போடுவதுமாகச் சிலநாட்கள் சென்றன.

இறுதியாக,

‘உலகத்தையாளும் சக்கரவர்த்தினி, தன் பேரனுக்கு (வருங்கால மன்னனுக்கு) பணம் அனுப்ப மறுக்கலாமா?’ – என்று எண்ணிக் கடைசியாகப் பணம் அனுப்பப்போகும் போது, மனம் வரவில்லை; பணத்தையும் அனுப்பவில்லை.

பின், ஒருநாள் கடிதம் – அதில், அவன் பெருஞ் செல்வத்தில் பிறந்து வளர்ந்த குடிமகனாயினும், எப்படிச் சிக்கனமாக இருந்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது பற்றிய விதிகளை, அதற்குரிய வழிகளை எல்லாம் நன்கு விளக்கமாக விவரித்து எழுதி – கடிதத்தை உறையிற் போட்டு, அஞ்சலில் அனுப்பச் சொன்னார்.

அஞ்சலிற் போட்டுவிட்டு வந்தவனை நோக்கிப் பதைபதைத்து – ‘அஞ்சல் நிலையத்துக்குச் சென்று, அக் கடிதத்தைத் திரும்பி வாங்கிவா’ என்று, அவனை அனுப்பினார்.

அங்கு போய் வந்த வேலையாள், “அஞ்சல் கட்டு எடுத்தாயிற்று; போய்விட்டது” என்று சொன்னான்.

விக்குடோரியா மகாராணிக்குப் பெருங் கவலை –

‘பேரன் என்ன நினைப்பானே? என்ன செய்வானோ? எப்படிக் கஷ்டப்படுகிறானோ?’ – என்ற கவலையினாலே அவ்வாரம் முழுதும் சரியாக உண்ணாமலும் உறங்காமலுங் கூட இருந்து வருந்தினார்.

பேரனிடமிருந்து –

பத்தாம் நாள் கடிதம் வந்தது. அதைக் கண்டதும், பேரன் என்ன எழுதியிருக்கின்றானோ எப்படித் துயருறுகிறானோ? என்ற கவலையால், உடல் நடுங்கி, கைநடுக்கத் தோடு கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார்கள்.

அதில். இந்த நான்கு ஐந்து வரிகள்தான் இருந்தன :

“பாட்டி, இனிமேல் நீங்கள் இந்த ஐம்பது பவுனும் அனுப்ப வேண்டா. நான் பணம் கேட்கும் போதெல்லாம் எனக்குச் சிக்கன வாழ்க்கைக்கான விவர விளக்கவியல் எல்லாம் எழுதி அனுப்பிக்கொண்டே இருங்கள். அது போதும்! ‘சிக்கனமாக வாழ்வது எப்படி?’ எனும் புத்தகத்தின் ஆசிரியர் விக்குடோரியா மகாராணி என்று – இதனை, ஒரு புத்தக வியாபாரிக்கு ஆயிரம் பவுனுக்கு விற்றுவிட்டேன்.”

இதைப் பார்த்ததும், உலகத்தையாண்ட மகாராணியின் உள்ளம் எப்படி இருந்தது? எப்படி இருந்திருக்கும்?

இதனைப் படிக்கிற உங்கள் உள்ளம் எப்படி?

எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிற தன் பேரனுக்குப் பாட்டி எண்ணி எழுதியது? – பேரன் – வருங்காலத்தில் சக்கரவர்த்தியாக விளங்கப்போகிறவன் தன் பாட்டிக்கு தெய்தது? இவ் இரண்டையும் பற்றி –

உங்கள் உள்ளம் என்ன எண்ணுகிறது?
———–

பெரிய கடைவீதியில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவரிடம் மற்றொருவன் சென்று குறுக்கிட்டு, என்னவோ கேட்டான். அவர் நின்று, ‘பளிர்’ என்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

அதைக்கண்ட மற்றவர்கள், ‘ஏன் ஐயா, அவரை அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டனர்.

அதற்கு அவர், ‘இவன் என்ன சாதி? நான் என்ன சாதி இவனுக்கு என்ன (அந்தசுத்து) தரம்? இது என்ன இடம்? வீதியில் போய்க் கொண்டிருக்கிறபோதா திடீரென்று வந்து பெண் கேட்பது?’ – என்றார்.

கூடியிருந்தவர்கள், அடிப்பட்டவனை நோக்கி, “ஏம்பா, இம்மாதிரித் தவறு செய்யலாமா? நம் வீட்டுப் பெண்களுடன் அவர் வீட்டுக்குச்சென்று கேட்கிறது என்ற ஒருமுறை இருக்கிறதே! இப்படி நடுத் தெருவில், சே! – நீ கேட்கலாமா?” – என்றார்கள்.

அடிப்பட்டவன் கன்னத்தைத் தடவிக் கொண்டே; “நான் அவரைப் பெண் ஒன்றும் கேட்க வரவில்லை, சட்டைப் பையில் இருக்கிற பேனாவைத்தான் எழுதக் கேட்டேன். ‘பேனா’ என்றிருந்தால்: இது நடந்திருக்காது – ஆங்கிலத்தில் ‘பென்’ (Pen) என்று கேட்டதனால் வந்த வினை இது.”

இது அவர் வினை மட்டுமல்ல. பிறமொழிச் சொற்களைத் தம்மொழியுடன் கலந்து பேசுவதால் இன்னும் வரும் வம்புகள் எவ்வளவோ!
———–

நாற்பது ஆண்டுகட்குமுன் பள்ளிப்பாடப் புத்தகத்தில் உள்ள கதை இது.

வயதான தன் தந்தையைத் தெருத்திண்ணையில் உட்காரவைத்து, ஒரு சட்டியைக் கொடுத்து, நாடோறும் அதில் சோறு போட்டுவைத்து, அவர் உண்ணும்படிச் செய்யத் தன் மனைவியிடம் சொல்லிவைத்திருந்தான் ஒருவன்.

பல நாட்கள் இந்தத் தொண்டு நடந்துவந்தது.

ஒருநாள் சோறு போடப் போகும்போது, கிழவனிடம் அச் சட்டி இல்லை. இச்செய்தியைக் கணவனிடம் சொல்லுகிறாள் மனைவி.

சட்டி எங்கே என்று கேட்டு, அவரைத் திட்டி அடிக்கவும் கை ஓங்குகிறான் அவன். அப்போது அவன் பிள்ளை ஒடி வந்து, “அப்பா, நான் தான் அந்தச் சட்டியை எடுத்து ஒளித்து வைத்திருக்கிறேன்” என்று சொன்னான்.

‘ஏன் அப்பா?’ என்று கேட்டதற்கு, ‘சிறுவன்’ “உங்களை இம்மாதிரித் திண்ணையில் உட்கார வைத்துச் சோறு போட எனக்கு ஒரு சட்டி வேண்டாமா? அதற்காக எடுத்துப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்” என்றான்.

மகனுடைய சொல்லைக் கேட்டு, ‘தனக்கும் இப்படி நேரிடுமோ’ என்று தந்தை பயந்தான்.

தன் தந்தைக்குத் தான் செய்யும் கொடுமைகளையே தன் மகன் தனக்கும் செய்வான் என்று அஞ்சித் திரும்பினான்; திருந்தினான்.

இக் கதை நமக்கு, ஓர் உண்மையை விளங்குகின்றது.

‘தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்

இதுதான் அந்த உண்மை.

நாம் செய்கின்ற செயல்களின் பலன்களை பெரும்பாலும் இப்பிறவியிலேயே அனுபவிக்க நேரிடும் என்பதற்கு இது ஒரு சான்று.
000