(23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி)

kuralneri02

  இவ்வாறு முட்களும், அடிமரத்தை வெட்டி வீழ்த்தும் கோடரியும் துன்பத்தில் உருவாகின்றன. மரத்தை வெட்டுதலும், வீழ்த்துதலும் அழிவின் சின்னமாகின்றன. இவ்வாறே பிணக்கினால் வாடிய காதலி வாடிய கொடியாகிறாள்; அவளது ஊடலை நீக்காது, கூடாது செல்லும் காதலன் அக்கொடியை அறுக்கும் கொடியவனாகிறான். முள் மரம் இளையதாக இருக்கையிலே அழிக்கப்பட வேண்டும்; ஆனால் பழம் பெரும் அடிமரமும், வாடிய கொடியும் காக்கப்பட வேண்டும். பெருங்குடி காப்பவன் முதலில் இல்லாளின் வாட்டத்தை நீக்கிக் காப்பவனாக இருக்க வேண்டுமல்லவா?

  கயவரை எண்ணிய திருவள்ளுவர் கரும்பை எண்ணியது வியப்பே! கரும்பின் இனிமையை எளிதில் நுகர முடிவதில்லை; அதை நெருக்கிப் பிழிந்தால்தான், பயன் விளைவிக்கும், இவ்வினிய பொருளின் தன்மை கயவர்க்கு உருவகமாக அமைகிறது. கடிந்து நடத்தினால்தான் அவர்கள் பயன்படுவர். மூங்கில் பெண்ணில் தோளிற்கு உருவகமாகிறது. தினையும் பனையும் சிறிதும் பெரிதுமான பொருள்களுக்கு முறையே உருவகங்களாகின்றன. புல்லும், திணைபோல, எளிமைக்கும், இழிவிற்கும் அடையாளமாக எடுத்தாளப்படுகின்றன.

  பொதுவாகக் கூறுமிடத்து, மரம், கனி காய், இவை வாழ்க்கையில் தோன்றும் மாறுபட்ட இருமைகளை (The Dichotomies of life) எடுத்துக் காட்டும் அடையாள உருவகங்களாகத் திருக்குறளில் தோன்றுகின்றன. இதைப் பின்னர் விரிவாகக் காண்போம்.

  மலர் : மென்மையைச் சொல்லுமிடத்தெல்லாம் பெரும்பாலும் மலர் உருவகமாகத் தோன்றுகிறதுanicham-flower01. இறையன்பு கொண்டோர் மனம் பூவாக மலர்ந்தது. அதில் ஆண்டவன் வீற்றிருப்பதைக் காண்கிறார் வள்ளுவர். அழகாலும் அமைப்பாலும் மலர்கள், சிறப்பாகத் தாமரையும், குவளையும் பெண்கள் முகத்திற்கும் கண்ணிற்கும் உருவகங்களாகின்றன. ‘பூவன்ன கண்ணாள்’ காதலியாகிறாள்; திருமகள் தாமரையினால் ஆகிறாள்.  மலர்களுள் அனிச்சம் மென்மையில் சிறந்தது. இது மோந்தவுடன் வாடும் இயல்புடையது. ஓம்பாத விருந்தினரின் முகம் உடன் வாடுவதைக் குறிக்க இம்மலர் உதவுகிறது. காதலியின் பாதமென்மை இப்பூவின் மென்மையை விடச் சிறந்ததாகச் சொல்லப்படுகிறது. அவளது மெல்லிய அடிகளுக்கு இப்பூ நெருஞ்சிப் பழமாம்! அனிச்சமலரும், அன்னப் பறவையினிறகும், மயிலினிறகும் மென்மைக்கு உருவகங்களாகத் திருக்குறளில் சொல்லப்படுகின்றன. மேலும், பூமலர்தல் மகிழ்ச்சியின் தோற்றத்திற்கும், கூம்புதல் துன்பத்தின் தொடக்கத்திற்கும் அடையாளமாக உள்ளன. சிறந்த அறிவு முன் மலர்ந்து பின் கூம்பாது என்கிறார் வள்ளுவர்.

  மலரே மென்மையானது; அதைவிட மென்மையான கற்பனை மலராக காமம் காட்சியளிக்கிறது. காமநோய் காலையில் துவங்கி, பகல் முழுவதும் வளர்ந்து, மாலையில் முதிருகிறது. இத்தோற்றமும், வளர்ச்சியும், காலை அரும்பிற்கும், பகல் போதிற்கும் மாலை மலருக்கும் ஏற்ப அமைகிறது. மணம் அடங்கிய அரும்போ காதலியின் குறிப்படங்கிய புன்முறுவலாக மாறுகிறது. இவ்வுருவகம் கற்பனை மலர்ச்சியோடு மிக அழகாக அமைந்துள்ளது. இவ்வாறு அழகும், மணமும் மென்மையும் கூறுமிடத்தெல்லாம் மலர் இடம் பெறும். நீர்ப் பூக்களைக் குறித்தும் ஒரு குறள் உள்ளது. இவற்றின் தாள் நீளம் நீரின் அளவினதாகும். இப்பொருள் ஊக்கத்திற்கேற்ற உயர்விற்கு உருவகமாகிறது.

  மலரைப்பற்றி, குறையாகச் சொல்லப்படும் குறள் ஒன்றுதான் உள்ளது. கொத்தாக மலர்ந்து, மணங்கமழாத மலர், சொல்வன்மையில்லாத கற்றோருக்கு உருவகமாகிறது. இங்குச் சொல்வன்மை பூவின் மணமாகச் சொல்லப்படுகிறது. காதற் குறிப்பும் மொட்டுள் மணமாக முன்னர் சொல்லப்பட்டது.

  தாமரை மலர் திருமகளையும், திருமாலையும் நினைவூட்டுகிறது. தாமரைக் கண்ணனான திருமாலின் உலகம், விரும்பும் காதலியோடு பெறும் துயிலுக்கு ஈடாகாது என்கிறான் காதலன். திருமாலுக்கு அடைச் சொற்கள் பற்பல உண்டு. ஆயினும் தாமரைக் கண்ணன் என்ற பொதுவழக்கை இங்கே பயன்படுத்தியது, காதலை எண்ணிய கவிஞர், தாமரை மலரையும் எண்ணிய காரணமேயாகும். தாமரை, மென்மையும், இனிய மணமும், செவ்வண்ணமும், இறைமாட்சியும், உடைய மலராகி, கண்ணனுக்கும் அடைச் சொல்லாகி, காதலின்பத்தை உயர்வாகக் காட்டும் உருவகமாக அமைகிறது.

  மழை: வானத்திலிருந்து கொட்டும் மழை, கைம்மாறு வேண்டாது உலகத்திற்கு உதவி செய்யும் கருணையின் rain01வடிவாய் விளங்குகிறது. இவ்வாறே சேக்சுபியரும் மழையை அருள் வடிவாகக் காண்கிறார். ‘‘வெனிசு வணிகன்’’ என்ற நாடகத்தில் இரக்கத்தின் தன்மையைச் சைலக்கிற்கு, பின் வருமாறு எடுத்துரைக்கிறாள் போர்சியா; ‘‘கருணை என்னும் குணம் (ஒருவரது) வற்புறுத்தலால் தோன்றுவது அன்று; வானத்திலிருந்து மண்ணின் மீதுதானே சொரியும் நன் மழை போன்றது அது.’’ தாவரங்களும், விலங்கினமும், மனித இனமும் உலகம் தோன்றிய நாள் முதலாக என்றென்றும் வாழ வழிசெய்யும் மழையை அமிழ்தம் எனக் கூறுகிறார் திருவள்ளுவர். வானோர் பூமியின் மீது அமிழ்தத்தை –  விசும்பின் துளியைத் தெளிக்கின்றனர். அதனால் நிலமடந்தை மகிழ்ந்து, உயிரினங்களைத் தோற்றுவித்து வாழச் செய்கிறாள். மழை வானின்று உழவருக்குக் கிட்டும் வருவாய். மழை உணவாகிறது; வாழ்க்கைக்கு அது வளமளிக்கிறது. ஏன்? நெடுங்கடலையும் தன்னிலை கெடாது வற்றாது காக்கிறது. வழிபாடு,  தானம், தவம், ஒழுக்கம், செம்மையான உலக வாழ்க்கை இவை யாவிற்கும் அடிப்படையாக மழை விளங்குகிறது. மழை பொய்யாவிடில் எளிய பசும் புல்லும் தலையைக் காட்டாது. உலகம் அப்போது பாலையாகிவிடும். ஆதலால் உலகத்து உயிர்களெல்லாம் வானோக்கி மழையெனும் அருளைப் பெற வேண்டுகின்றன.

(வளரும்)

– குறள்நெறி மாசி 3, 1995 / 15.02.1964