திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 031. வெகுளாமை
(அதிகாரம் 030. வாய்மை தொடர்ச்சி)
01. அறத்துப் பால்
03. துறவற இயல்
அதிகாரம் 031. வெகுளாமை
எப்போதும், எவரிடத்தும், எதற்காகவும்,
சினமோ, சீற்றமோ கொள்ளாமை.
- செல்இடத்துக் காப்பான், சினம்காப்பான்; அல்இடத்துக்
காக்கின்என்? காவாக்கால் என்?
செல்இடத்தில் சினம்அடக்கு; செல்லா
இடத்தில் அடக்கு; அடக்காமல்போ.
- செல்லா இடத்தும் சினம்தீ(து); செல்இடத்தும்
இல்,அதனின் தீய பிற.
செல்இடத்தும், செல்லா இடத்தும்,
சினத்தலைவிடத், தீயது வே[று]இல்லை.
- மறத்தல் வெகுளியை, யார்மாட்டும்; தீய
பிறத்தல், அதனான் வரும்.
தீமைகளின் பிறப்பிடமாம் சினத்தை
யாரிடத்தும் மறத்தலே அறம்.
- நகையும், உவகையும் கொல்லும் சினத்தின்,
பகையும், உளவோ பிற?
முகமகிழ்வையும், மனமகிழ்வையும்,
கொல்லும் சினம்தான், பெரும்பகை.
- தன்னைத்தான் காக்கின், சினம்காக்க; காவாக்கால்,
தன்னையே கொல்லும் சினம்.
சினத்தைக் கொல்லுக; கொல்லாவிடில்,
சினம்அ[து] உன்னையே கொல்லும்.
- சினம்என்னும், சேர்ந்தாரைக் கொல்லி, இனம்என்னும்,
ஏமப் புணையைச் சுடும்.
தன்னைச் சேர்த்தாரையும், சேர்த்தாரோடு .
சேர்ந்தாரையும் தீச்சினம் எரிக்கும்.
- சினத்தைப் பொருள்என்று, கொண்டவன் கேடு,
நிலத்(து)அறைந்தான் கை,பிழையா(து) அற்று.
நிலத்தை அறைந்தான் கைகெடும்;
சினந்தான் தப்பாது கெடுவான்.
- இணர்எரி தோய்(வு)அன்ன, இன்னா செயினும்,
புணரின், வெகுளாமை நன்று.
பூங்கொத்தை எரிக்கும் தீயைப்போல்
தீமைகளைச் செய்தாலும் சினக்காதே.
- உள்ளிய(து) எல்லாம் உடன்எய்தும், உள்ளத்தால்
உள்ளான், வெகுளி எனின்.
மனத்தாலும், சினத்தை நினையார்க்கு,
நினைத்தன எல்லாம் அடைவான்.
- இறந்தார், இறந்தார் அனையர்; சினத்தைத்
துறந்தார், துறந்தார் துணை.
சினத்தார் செத்தாரைப் போல்வார்;
சினவாதார் துறவியரைப் போல்வார்.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply