(அதிகாரம் 055. செங்கோன்மை தொடர்ச்சி)

attai_kuralarusolurai97

02.பொருள் பால்

05.அரசு இயல்

அதிகாரம் 056. கொடுங்கோன்மை

 

மக்களை அலைக்கழிக்கும், தீமையான,

முறைஇல்லாக் கொடுமையான வல்ஆட்சி.

 

  1. கொலைமேற்கொண் டாரின் கொடிதே, அலைமேற்கொண்(டு),

     அல்லவை செய்(து)ஒழுகும், வேந்து.

 

மக்களை வருத்தி, அலைக்கழிக்கும்,

ஆட்சி, கொலையினும் கொடிது.

 

  1. வேலொடு நின்றான்,”இடு”என்றது போலும்,

      கோலொடு நின்றான் இரவு.

 

வன்முறையால் வரிகேட்டல், வேல்காட்டிக்

கொள்ளை அடித்தலுக்குச், சமம்.

 

  1. நாடொறும் நாடி, முறைசெய்யா மன்னவன்,

      நாடொறும் நாடு கெடும்.

 

நாள்தோறும் ஆராய்ந்து, முறைசெயாவிட்டால்,

நாள்தோறும் நாடும் கெடும்.

 

  1. கூழும், குடியும், ஒருங்(கு)இழக்கும், கோல்கோடிச்,

      சூழாது, செய்யும் அரசு.

 

முறைதவறி ஆள்வான், பொருளை,

குடிகளை முழுதும் இழப்பான்.

 

  1. அல்லல்பட்(டு), ஆற்றா(து), அழுதகண்ணீர், அன்றே,

      செல்வத்தைத் தேய்க்கும் படை.

 

துன்புறும் மக்களது கண்ணீர்,

ஆட்சியைத் அழிக்கும் கருவி.

 

  1. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அஃ(து)இன்றேல்,

     மன்னாஆம் மன்னர்க்(கு) ஒளி.

 

நிலையான நல்ஆட்சி இல்லாவிடின்,

ஆட்சியார்க்குப் புகழும் இல்லை.

 

  1. துளிஇன்மை ஞாலத்திற்(கு) எற்(று),அற்றே, வேந்தன்

     அளிஇன்மை, வாழும் உயிர்க்கு.

 

உலகிற்கு மழைஇன்மை எப்படியோ,

ஆட்சியார் அருள்இன்மை. அப்படியே.

 

  1. இன்மையின், இன்னா(து) உடைமை, முறைசெய்யா[த]

     மன்னவன், கோல்கீழ்ப் படின்.

 

முறைஅது தவறும் ஆட்சியில்,

வறுமையினும், செல்வம் பெரும்துன்பம்.

 

  1. முறைகோடி மன்னவன் செய்யின், உறைகோடி,

     ஒல்லாது வானம் பெயல்.

 

முறைகெட ஆட்சியான் ஆண்டால்,

பருவ நல்மழையும் பொய்க்கும்.

 

  1. ஆபயன் குன்றும், அறுதொழிலோர் நூல்மறப்பர்,

      காவலன், காவான் எனின்.

 

ஆட்சியாளன் காக்காவிட்டால், ஆகும்

பயன்கள், தொழில்கள் குறையும்.

-பேராசிரியர் வெ. அரங்கராசன்