(அதிகாரம் 056. கொடுங்கோன்மை தொடர்ச்சி)

attai_kuralarusolurai

02.பொருள் பால்

05.அரசு இயல்

அதிகாரம் 057. வெருவந்த செய்யாமை

 

குடிமக்கள், அஞ்சி நடுங்கும்படி,

கொடுமைச் செயல்கள் செய்யாமை

 

  1. தக்காங்கு நாடித், தலைச்செல்லா வண்ணத்தால்,

     ஒத்(து),ஆங்(கு), ஒறுப்ப(து), வேந்து.

 

 தக்கபடி ஆய்ந்து, குற்றம்

  மீளநடவாவாறு, பொருந்தத் தண்டிக்க.

 

  1. கடி(து)ஓச்சி, மெல்ல எறிக, நெடி(து)ஆக்கம்,

      நீங்காமை வேண்டு பவர்.

 

      கடுமையாக மிரட்டி, மென்மையாகத் 

      தண்டிப்பதே, ஆக்க நீதி.

 

  1. வெருவந்த செய்(து)ஒழுகும், வெங்கோலன் ஆயின்,

      ஒருவந்தம், ஒல்லைக் கெடும்.

 

      அஞ்சத்தக்கன கொடும்செயல் செய்யும், 

      ஆட்சியான், விரைந்து வீழ்வான்.

 

  1. “இறைகடியன்” என்(று)உரைக்கும், இன்னாச்சொல் வேந்தன்,

      உறைகடுகி, ஒல்லைக் கெடும்.

 

“ஆட்சியன் கொடியன்” எனும், தீயசொற்கள்,

 அவனை விரைந்து அழிக்கும்.

 

  1. அரும்செவ்வி, இன்னா முகத்தான், பெரும்செல்வம்,

      பேஎய்கண்(டு) அன்ன(து) உடைத்து.

      பார்க்க முன்வராதான், கடுமுகத்தான்,

       பெரும்செல்வம், பேய்அச்சம் போன்றது.

 

  1. கடும்சொல்லன், கண்இலன் ஆயின், நெடும்செல்வம்,

      நீ(டு)இன்றி, ஆங்கே கெடும்.

 

      கடும்சொல்லான், இரக்கம் இல்லான்

       நெடும்செல்வம், உடனே கெடும்.

 

  1. கடுமொழியும், கைஇகந்த தண்டமும், வேந்தன்,

      அடுமுரண் தேய்க்கும் படை.

 

      கடும்சொல், மிகக்கடும் தண்டனை,

      ஆள்வானை அழிக்கும் கருவிகள்.

 

  1. இனத்(து)ஆற்றி, எண்ணாத வேந்தன், சினத்(து)ஆற்றிச்

      சீறின், சிறுகும் திரு.

 

      தக்காரோடு கலக்காது, சீறிவிழும்

      ஆள்வானின் செல்வம், சுருங்கும்.

 

  1.  செருவந்த போழ்தில், சிறைசெய்யா வேந்தன்,

      வெருவந்து, வெய்து கெடும்.

 

     போர்க்காலத்தில், பாதுகாப்பைச் செய்யாத

      ஆட்சியான் விரைந்து அழிவான்.

 

  1. கல்லார்ப் பிணிக்கும் கடும்கோல்; அதுஅல்லது

     இல்லை, நிலக்குப் பொறை.

 

     அறம்கல்லாரைச் சாரும் வன்முறை

     ஆட்சியும், நாட்டுக்குச் சுமைதான்.

 

(அதிகாரம் 058. கண்ணோட்டம்)

-பேராசிரியர் வெ. அரங்கராசன்