திருக்குறள் அறுசொல் உரை – 068. வினை செயல் வகை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 067. வினைத் திட்பம் தொடர்ச்சி)
02. பொருள் பால்
06. அமைச்சு இயல்
அதிகாரம் 068. வினை செயல் வகை
தூய செயலை, மனஉறுதியுடன்
செய்தற்கு உரிய வழிமுறைகள்
- சூழ்ச்சி முடிவு துணி(வு)எய்தல்; அத்துணிவு,
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
ஆழ்ந்தாய்ந்து எடுத்த நல்முடிவைக்,
காலம் தாழ்த்தாது, துணிந்துசெய்.
- தூங்குக, தூங்கிச் செயல்பால; தூங்கற்க,
தூங்காது செய்யும் வினை.
செயல்களைப் பொறுத்துக் காலம்
தாழ்த்தியும், தாழ்த்தாதும் செய்க.
- ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால்,
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
முடிந்தபோது எல்லாம், செயல்நன்று;
முடியாப்போது, முடிந்ததைச் செய்.
- வினை,பகை என்(று)இரண்டின் எச்சம், நினையும்கால்,
தீஎச்சம் போலத் தெறும்.
மீதியான செயலும், பகையும்
அணைக்கப்படாத் தீயைப் போன்றது.
- பொருள்,கருவி, காலம், வினைஇடனோ(டு), ஐந்தும்,
இருள்தீர எண்ணிச் செயல்.
பொருள், செயல், காலம், கருவி, இடம்
ஐந்தையும் ஆழ்தாய்ந்து செய்.
- முடிவும், இடைஊறும், முற்றி,ஆங்(கு) எய்தும்
படுபயனும், பார்த்துச் செயல்.
முடிவுகள், தடைகள், இறுதியில்
பெறுபயன்கள் ஆராய்ந்து செய்.
- செய்வினை செய்வான் செயல்முறை, அவ்வினை
உள்அறிவான் உள்ளம் கொளல்.
செயலைத் தொடங்குவான், அச்செயல்
வல்லார்தம் பட்டறிவைப் பெற்றுச்செய்.
- வினையால் வினைஆக்கிக் கோடல், நனைகவுள்
யானையால் யானையாத்(து) அற்று.
யானையால் யானை பிடித்தல்போல்,
செயல்முனைவார், வல்லாரால் முடிக்க.
- நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே,
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
நண்பர்க்கு நல்லது செய்தலைவிடப்,
பகைவரை நண்பர் ஆக்கு.
- உறைசிறியார், உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்,
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
மக்கள்தம் நடுக்கம் ஒழிக்க,
மெலியார், வலியாரிடம் பணிக.
பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply