(அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் தொடர்ச்சி)

attai_kuralarusolurai

02. பொருள் பால்  
06. அமைச்சு இயல்
 அதிகாரம் 071. குறிப்பு அறிதல் 

  பிறரது மனஉணர்வுகளைக்  கண்கள்,

முகங்கள்வழி ஆராய்ந்து அறிதல்.

  1. கூறாமைநோக்கிக்  குறிப்(புஅறிவான்,  எஞ்ஞான்றும்,

     மாறாநீர் வையக்(கு) அணி.

       முகக்குறிப்பால் மனஉணர்வை அறிவார்

         உலகிற்கே நல்நகை ஆவார்.

 

  1. ஐயப் படாஅ(து), அகத்த(து) உணர்வானைத்,

    தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல்.

        மனத்தின் உள்கருத்தை ஐயம்அற,

        உணர்வார் தெய்வத்திற்குச் சமம்.   

 

  1. குறிப்பின் குறிப்(பு)உணர் வாரை, உறுப்பினுள்,

     யாது கொடுத்தும் கொளல். 

        உள்கருத்தைக் குறிப்பால் உணர்வார்க்கு,

        நாட்டுஉறுப்பைக் கொடுத்தும் சேர்க்க.                           

  1. குறித்தது, கூறாமைக் கொள்வாரோ(டு), ஏனை

     உறுப்போர் அனையரால் வேறு.

         குறிப்புஉணர்வார், உணர முடியாதார்

        உடலால் மட்டும் சமம்.      

 

  1. குறிப்பின் குறிப்(பு)உணரா ஆயின், உறுப்பினுள்

     என்ன பயத்ததோ கண்?

        முகக்குறிப்பால் மனக்கருத்தை உணரார்க்குக்,

        கண்களால் என்ன பயனோ?      

 

  1. அடுத்தது காட்டும் பளிங்குபோல், நெஞ்சம்

     கடுத்தது காட்டும் முகம்.

        பொருளைக் காட்டும் கண்ணாடி;

        மனஉணர்வை முகம்காட்டும் முன்னாடி.

 

  1. முகத்தின் முதுக்குறைந்த(து) உண்டோ? உவப்பினும்,

     காயினும், தான்முந்(து) உறும்.

        விருப்பும், வெறுப்பும் முந்திக்காட்டும்

        முகம்போல் வேறுஒன்று உண்டோ?

 

  1. முகம்நோக்கி நிற்க அமையும், அகம்நோக்கி,

     உற்ற(து) உணர்வார்ப் பெறின்.

        முகத்தை நுண்ஆய்ந்து, மனத்துள்

        உள்ளதைக் குறிப்புணர்வார், உணர்வார்.

 

  1. பகைமையும், கேண்மையும், கண்உரைக்கும்; கண்ணின்

     வகைமை உணர்வார்ப் பெறின்.

        கண்பார்வையின் வகைகள் உணர்வார்,  

        கண்வழி பகைநட்பு உணர்வார்.

 

  1. “நுண்ணியம்” என்பார் அளக்கும்கோல், காணும்கால்,

     கண்அல்ல(து) இல்லை பிற.

          “குறிப்புஉணர்வில் நுண்அறிவு பெற்றுளோம்”

          என்பார்க்குக், கண்ணே அளவுகோல்.    

-பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 072. அவை அறிதல்)