(அதிகாரம் 071. குறிப்பு அறிதல் தொடர்ச்சி)

attai_kuralarusolurai

02. பொருள் பால்   
06. அமைச்சு இயல்
அதிகாரம் 072. அவை அறிதல்

அறிஞர் கூட்டத்தின்  இயல்புகள்

 ஆராய்ந்து ஒப்ப நடத்தல்.

 

  1. அவைஅறிந்(து), ஆராய்ந்து சொல்லுக, சொல்லின்

     தொகைஅறிந்த தூய்மை யவர்.

        சொல்வள நல்அறிஞர், அவையின்

        இயல்பை ஆராய்ந்துதான் பேசுவர்.  

 

  1. இடைதெரிந்து, நன்(கு)உணர்ந்து, சொல்லுக, சொல்லின்

     நடைதெரிந்த நன்மை யவர்.

        தமக்கும், அவைக்கும், இடைநிற்கும்

        இடைவெளியை நன்குணர்ந்து சொல்க.

 

  1. அவைஅறியார், சொல்லல்மேற் கொள்பவர், சொல்லின்

     வகைஅறியார், வல்லதூஉம் இல்.

         அவைஇயல்பு அறியாது சொல்வார்,

        சொல்அறியார்; வல்லாரும் அல்லார்.

 

  1. ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல், வெளியார்முன்

     வான்சுதை வண்ணம் கொளல்.

         அறிவார் முன்னர் அறிவாராய்,

        அறியார்முன் அறியாராய் அமைக.

 

  1. நன்(று)என்ற வற்றுள்ளும் நன்றே, முதுவருள்

     முந்து கிளவாச் செறிவு.

         மூதறிஞர் முன்னர் முந்திக்கொண்டு

        பேசாமை, நல்லவற்றுள் நல்லது.

 

  1. ஆற்றின் நிலைதளர்ந்(து) அற்றே, வியன்புலம்

     ஏற்(று)உணர்வார் முன்னர் இழுக்கு.

        பேரறிஞர்முன் குற்றப்படப் பேசல்,

        ஆற்று வெள்ளத்துள் தடுமாறல்போல்.  

  1. கற்(று)அறிந்தார் கல்வி விளங்கும், கச(டு)அறச்

     சொல்தெரிதல் வல்லார் அகத்து.    

        தெளிவாய்ப் புரிந்து கொள்வாரிடம்,

        கற்றுஅறிந்தார் கல்வி விளங்கும்..

 

  1. உணர்வ(து) உடையார்முன் சொல்லல், வளர்வதன்

     பாத்தியுள் நீர்சொரிந்(து) அற்று.

         உணர்த்துவதை உணர்வார்முன் சொல்லல்,

        வளர்பயிர் பாத்தியுள் மழை.

 

  1. புல்அவையுள் பொச்சாந்தும் சொல்லார், நல்அவையுள்

     நன்கு செலச்சொல்லு வார்.

         பேரறிஞர், கூட்டத்தில் செலச்சொல்வார்,

         கீழானவர் கூட்டத்தில் சொல்லார்.       

 

  1. அங்கணத்துள் உக்க அமிழ்(து)அற்(று)ஆல், தம்கணத்தர்

     அல்லார்முன் கோட்டி கொளல்.

         தம்போல் தகுதிஇலார்முன் பேசல்,

        சாய்கடையில் கொட்டிய அமிழ்தம்.

 

பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 073. அவை அஞ்சாமை)