(அதிகாரம் 082. தீ நட்பு தொடர்ச்சி)
attai_kuralarusolurai03

02. பொருள் பால்
11. நட்பு இயல்
அதிகாரம் 083. கூடா நட்பு 

கூடாத மனங்களின் கூடாத

போலிமை நட்போடு கூடாமை.

  1. சீர்இடம் காணின், எறிதற்குப் பட்டடை,

   நேரா நிரந்தவர் நட்பு.

 

       மனம்கூடா நண்பர், வாய்ப்புவரின்,

     துயரம் செய்வார்க்கும் துணைஆவார்.  

 

  1. இனம்போன்(று) இனம்அல்லார் கேண்மை, மகளிர்

   மனம்போன்று, வேறு படும்

 

       போலிமை நண்பர்தம் நட்பும்,

         விலைமகளிர் மனம்போல் மாறுபடும்.

 

  1. பலநல்ல கற்றக் கடைத்தும், மனநல்லர்

ஆகுதல், மாணார்க்(கு) அரிது.

 

       நல்லன கற்றாலும், மனம்பொருந்தா

         நண்பர், மனத்தாலும் பொருந்தார்.

 

  1. முகத்தின் இனிய நகாஅ, அகத்(து)இன்னா

   வஞ்சரை, அஞ்சப் படும்.


       முகத்தால் இனிதாகச் சிரிக்கும்,

       வஞ்சக நண்பர்க்கு அஞ்சுக.

 

  1. மனத்தின் அமையா தவரை, எனைத்(து)ஒன்றும்,

   சொல்லினால் தேறல்பாற்(று) அன்று.

         மனம்கலவாத நணபர்தம் சொல்லை    

       மட்டும், வைத்துத் தெளியாதே.  

 

  1. நட்டார்போல் நல்லன சொல்லினும், ஒட்டார்சொல்,

   ஒல்லை உணரப் படும்.

 

       நண்பர்போல் நல்லன சொல்லினும்,    

       நடிப்பார் சொல்தீமை, உடன்வெளிஆம்.

 

  1. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க, வில்வணக்கம்

     தீங்கு குறித்தமை யான்.  

 

       பகைவர் சொல்பணிவும், வில்வளைவும்

       தீமைக்கு அறிகுறிகள்; கொள்ளற்க.

 

  1. தொழுத கைஉள்ளும், படைஒடுங்கும்; ஒன்னார்

     அழுத கண்ணீரும், அனைத்து.

 

       வணங்குகைக்குள் கொலைசெய் கருவியும்,

       பகைவர் கண்ணீரும் சமம்.

 

  1. மிகச்செய்து, தம்எள்ளு வாரை, நகச்செய்து,

   நட்பினுள் சாப்புல்லல் பாற்று.

 

       மிகுநட்பைச் செய்து, இகழ்வாரை,

       சிரித்துப் பேசியே ஒதுக்கு.

                            

  1. பகைநட்(பு)ஆம் காலம் வரும்கால், முகநட்(டு),

     அகநட்(பு) ஒரீஇ விடல்.

        பகைவன் நண்பனாக வந்தால்,       

     முகத்தில் சிரிப்புகாட்டி விலக்கு

பேராசிரியர் வெ. அரங்கராசன்

பேரா.வெ.அரங்கராசன்
(அதிகாரம் 084. பேதைமை)