(அதிகாரம் 087. பகை மாட்சி தொடர்ச்சி)

kuralarusolurai_mun attai

02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம் 088. பகைத் திறம் தெரிதல்

பகைவரது பலவகைத் திறன்களை

ஆராய்ந்து தக்கவாறு நடத்தல்.    

  1. பகைஎன்னும் பண்(பு)இல் அதனை, ஒருவன்

     நகையேயும், வேண்டல்பாற்(று) அன்று.

     பகைஆக்கும் பண்புஇல்லா எதுவும்,

       வேடிக்கை என்றாலும் வேண்டாம்.

 

  1. வில்ஏர் உழவர் பகைகொளினும், கொள்ளற்க,

     சொல்ஏர் உழவர் பகை.

     வீரரைப் பகைத்தாலும், சொல்திறப்

     பேரறிஞரைப் பகைக்க வேண்டாம்.

 

  1. ஏமுற் றவரினும் ஏழை, தனியனாய்ப்,

     பல்லார் பகைகொள் பவன்.

     தனியனாய்ப், பலரைப் பகைப்பான்,

       பித்தனைவிட, அறிவு குறைந்தான்.

 

  1. பகைநட்(பு)ஆக் கொண்(டு)ஒழுகும், பண்(பு)உடை யாளன்

     தகைமைக்கண், தங்கிற்(று) உலகு.

     பகையையும், நட்பாக மாற்றும்

       பண்பாளன்கீழ், உலகமே தங்கும்.      

 

  1. தன்துணை இன்(று)ஆல், பகைஇரண்(டு)ஆல், தான்ஒருவன்,

     இன்துணைஆக் கொள்க(அ)வற்றின் ஒன்று.

     துணைஇலான், இரண்டு பகைவரில்,

       ஒருவரைத் துணையாக் கொள்க.

 

  1. தேறினும், தேறா விடினும், அழிவின்கண்,

     தேறான் பகாஅன் விடல்.

     நெருக்கடியில் முன்பகைவர்தம் பகையும்,

       வேண்டாம்; நட்பும் வேண்டாம்.

 

  1. நோவற்க, நொந்த(து) அறியார்க்கு; மேவற்க,

     மென்மை பகைவர் அகத்து.

     உணரா நண்பரிடம் துன்பம்,

       பகைவர்முன் முடியாமை காட்டாதே.

 

  1. வகைஅறிந்து, தன்செய்து தன்காப்ப, மாயும்,

     பகவர்க்கண் பட்ட செருக்கு.

     வகைஆராய்ந்து, தன்னைக் காத்துக்கொண்டால்,

       பகைவர் ஆணவம் மறையும்.

 

  1. இளை(து)ஆக முள்மரம் கொல்க; களையுநர்

     கைகொல்லும், காழ்த்த இடத்து.

     முள்மரத்தை, முளையிலேயே கிள்ளுக;

       முற்றின், வெட்டுவார்கை புண்படும்.

 

  1. உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற, செயிர்ப்பவர்

     செம்மல் சிதைக்கலா தார.

     பகைவர் செருக்கை அழிக்காதார்,

       பகைவர் மூச்சுவிட்டால், அழிவார்.

பேரா.வெ.அரங்கராசன்

பேரா.வெ.அரங்கராசன் :ve.arangarasan

(அதிகாரம் 089. உள்பகை)