திருக்குறள் அறுசொல் உரை – 094. சூது : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 093. கள் உண்ணாமை தொடர்ச்சி)
02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம் 094. சூது
பரம்பரைப் புகழ்,பண்பு, மதி,அன்பு
பொருள்கெடுக்கும் சூதை விடு.
- வேண்டற்க, வென்(று)இடினும் சூதினை; வென்றதூஉம்,
தூண்டில்பொன் மீன்விழுங்கி அற்று.
மீன்விழுங்கிய தூண்டில் இரைதான்
சூதில் வருவெற்றி; வேண்டாம்.
- ஒன்(று)எய்தி, நூ(று)இழக்கும் சூதர்க்கும், உண்டாம்கொல்
நன்(று)எய்தி, வாழ்வ(து)ஓர் ஆறு?
ஒன்றுபெற்றுப், பலஇழக்கும் சூதாடிக்கும்
நன்றுஆம் வாழ்வு உண்டாமோ?
- உருள்ஆயம் ஓயாது கூறின், பொருள்ஆயம்,
போஒய்ப் புறமே படும்.
ஓயாது சூதினை ஆடினால்,
பொருள்வளம் போஒய்த் தொலையும்.
- சிறுமை பலசெய்து, சீர்அழிக்கும் சூதின்,
வறுமை தருவ(து)ஒன்(று) இல்.
இழிவு தந்து, புகழ்மதிப்பையும்
அழிக்கும் சூதுதான் வறுமை.
- கவறும், கழகமும், கையும் தருக்கி,
இவறியார், இல்ஆகி யார்
கருவி,இடம், கைத்திறன் உள்ளாரும்
சூதினால் இல்லாரே ஆவார்.
- அக(டு)ஆரார், அல்லல் உழப்பர்,சூ(து) என்னும்,
முகடியால் மூடப்பட் டார்.
சூதுஎனும் மூதேவியால் மூடப்பட்டார்,
நன்கு உண்ணார்; துன்புறுவார்.
- பழகிய செல்வமும், பண்பும் கெடுக்கும்,
கழகத்துக் காலை புகின்.
நாளும், சூதுஆடினால், பரம்பரைச்
சொத்தும், பண்பும் அழியும்.
- பொருள்கெடுத்துப், பொய்மேல் கொளீஇ, அருள்கெடுத்(து),
அல்லல் உழப்பிக்கும் சூது.
சூது, அருள்,பொருள் கெடுக்கும்;
பொய்யைக் கொடுக்கும்; துயர்ப்படுத்தும்.
- உடை,செல்வம், ஊண்,ஒளி, கல்வி,என்(று) ஐந்தும்,
அடையாஆம் ஆயம் கொளின்.
சூதாடி இழப்பவை: உடை,செல்வம்,
உணவு, மதிப்பு, கல்வி.
- இழத்தொறூஉம், காதலிக்கும் சூதேபோல், துன்பம்
உழத்தொறூஉம், காதற்(று) உயிர்.
துன்பத்தில் உயிர்மேலும், இழப்பில்
சூதுமேலும் காதல் தோன்றும்.
பேரா.வெ.அரங்கராசன்
(அதிகாரம் 095. மருந்து)
Leave a Reply