திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள்

– பகுதி 6 (நிறைவு)

(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி)

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/12/thiruvalluvamaalaiyin_melaanmai.png

10.5. இடைக்காடரது பாடற்கொடை 54      

கடுகைத் துளைத்[து]ஏழ் கடலைப் புகுத்திக்

         குறுகத் தறித்த குறள்

  •   பொருள் உரை

     திருக்குறளின் சொற்சுருக்கத்தையும், பொருட்சுருக்கத்தையும் ஆய்ந்தால், கடுகின் நடுவே துளைபோட்டு, ஏழு கடல் நீரையும் அத் துளைவழி உட்செலுத்தி, அளவில் குறுகி இருக்கும்படித், தறித்து வைத்தது போன்ற வடிவினது திருக்குறள்.

  • நுட்பங்கள்     
  • சொல்: கடுகு
    • கடுகு = திருக்குறட் பா
    • ஏழ்கடல் = அப் பாவில் உள்ள ஏழு சீர்கள்
  • கடுகு மிகவும் சிறியது.
  • திருக்குறளின் குறள் யாப்பும் அன்றைய இலக்கியச் சூழலில் மிகவும் சிறியது.
  •  கடுகு சிறிதெனினும். அப் பருப்பொருளுக்குள் பல்வேறு ஆற்றல்களும் [சத்துக்களும்], மருத்துவக் குணங்களும் இருக்கின்றன,

சான்றாக நச்சுத் தன்மையை நீக்கப் பயன்படுதல், நரம்பு மண்டலத்தில் செயல்படுதல், இருமலை நீக்குதல், சிறுநீர்  பிரிதலுக்குப் பயன்படல், கடுகு எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்குப் பயன்படுதல், இதய நோயை நீக்குதல் போன்ற பல்வேறு பயன்பாடுகள்.

  • திருக்குறளின் குறள் யாப்பு சிறிதெனினும், அதற்குள் உள்ளம் சார்ந்த நோய்களுக்கும், உடல் சார்ந்த நோய்களுக்கும், சமுதாய நோய்களுக்கும் நற்பயன்கள் தரும் உலகத் தரம் மிக்க நுண்பொருள் மருந்துகள் பல்வகைகளில் நிறைந்துள்ளன.
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
  • திருக்குறள் குறள் யாப்பும் சிறிதெனினும், காரமாக இருக்க வேண்டிய இடத்தில் காரமாகவே இருக்கின்றது.
  • சான்று: இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து

            கெடுக உல[கு]இயற்றி யான். [1062]

  • பொருள் உரை
  • பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டுமாயின், அந் நிலைக்குக் காரணனான ஆட்சியாளன் அலைந்து கெட்டு ஒழியட்டும்.
  • கடுகு அனைவராலும் அறியப்பட்ட ஒன்று.
  •  திருக்குறளும் அனைவராலும் அறியப்பட்டதும் ஆகும்; அறியப்பட வேண்டியதும் ஆகும். இவை போன்ற நுட்பக் குறிப்புக்கள் இதில் இருக்கின்றன.

 

  • கடுகு சிறப்பாகப் பெண்களுக்கு நன்கு தெரியும்.
  • திருக்குறளும் எல்லோரையும்விடப் பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

 

  • கடுகு தாளிப்பில் சுவையைக் கூட்டும்.
  • திருக்குறளும் வாழ்க்கையில் இன்பச் சுவையைக் கூட்டும்.

 

  • கடுகு தாளிப்பில் மணத்தைக் கொடுக்கும்.
  • திருக்குறளும் அதன்வழி நடப்போர்க்குப் புகழ்மணம் கொடுக்கும். .

10.6. அவ்வையாரின் பாடல் — 55

  • அணுவைத் துளைத்[து]ஏழ் கடலைப் புகட்டிக்

         குறுகத் தறித்த குறள்.    

  • நுட்பங்கள்

 

  • அணு = திருக்குறட் பா
  •  ஏழ் கடல் = அப் பாவில் உள்ள ஏழு சீர்கள்   

  • அணு மிகவும் சிறியது.
  •  திருக்குறட் பாவும் அன்றைய இலக்கியச் சூழலில் மிகவும் சிறியது.

 

  • ஏழு கடல்கள் .
  •  கடலுக்குள் மூழ்கினால் ஒளிமுத்தும், பல்வேறு கனிமங்களும்   கிடைக்கும். அவை வாழ்க்கையில் வளம் படைக்கும்.
  •  திருக்குறட் பாச் சீர்களுக்குள் நுழைந்து நுண்ஆய்வு செய்வோர்க்குஒளியூட்டும் அறக் கருத்துக்களும், வழிகாட்டும் சிந்தனைகளும் கிடைக்கும். அவை வாழ்க்கையில் உளவளமும், உடல்வளமும் அடைக்கும்.
  • கடல் நீர் உப்புக் கரிக்கும்.
  • திருக்குறட் பாச் சீர்கள்படி நடப்பார்க்கு வாழ்க்கை இனிக்கும்.   நடவார்க்குக் கரிக்கும்.
  • கடல் உப்பு உணவின் சுவையைக் கூட்டும்.
  • திருக்குறளின் ஒவ்வொரு சீரும் அதன்படி நடப்பார் வாழ்க்கையில் இன்பச் சுவையைக் கூட்டும்.
  • கடல் இக் கரையிலிருந்து அக் கரைக்குச் செல்லப் பயன்படும்.
  •  திருக்குறட் சீர்களும் துன்பக் கரையிலிருந்து இன்பக் கரைக்குச் செல்லப் பயன்படும்.

  • கடல் அளவிலாத ஆழம், அகலம், நீளம் ஆகியவற்றால்   பெரும்பரப்பினது.
  • திருக்குறளின் ஒவ்வொரு சீரும் ஆழம், அகலம், நீளம், உயரம் ஆகியவற்றால் பெரும்பொருட் பரப்பைத் தன்னுள் கொண்டுள்ளது.
  • கடல் என்றும் வற்றாது; நிலைத்து வாழும் நிலையினது.
  • திருக்குறளும் என்றும் வற்றாது; மானுட இனம் உள்ளவரை  நிலைத்து நிற்கும் பெற்றியது..
  • கடல் தனியாள் எவருக்கும் உரிமை உடையது அன்று. அது  பொதுச் சொத்து..
  •  திருக்குறளும், அதன் ஒவ்வொரு சீரும் தனியாள் எவருக்கும் உரிமை உடையது அன்று. அது பொதுச் சொத்து.
  • கடலை நம்பி உலகமும் வளத்தோடு இருக்கின்றது; உயிர்களும்  உவப்போடு வாழ்கின்றன.
  • திருக்குறளின் ஏழு சீர்களை நம்பி நடந்தால், அனைத்து உயிர்களும்  மகிழ்வோடு வாழும். அவ் உயிர்களால் உலகமும் வளத்தோடு வாழும்.
  •  கடல் உலகும், உயிர்களும் இருப்பதற்கும், வாழ்வதற்கும் மிகவும் இன்றியமையாத மழைப்பொழிவுக்கு உற்ற துணை;   கடல் பருப்பொருள் [CONCRETE THING] நிலைத் துணை.
  •  திருக்குறள் அதே பணியை 2-ஆவது அதிகாரம் வான்சிறப்புவழி மழைப் பொழிவின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறது; திருக்குறள் நுண்பொருள் [ABSTRACT THING] நிலைத் துணை.

11.0. நிறைவுரை

      திருக்குறளின் முழுமையான விழுமியங்களைப் பழுதறக் கற்றுத் தோய்ந்த திருவள்ளுவமாலைப் பெரும்புலவர்கள், அவற்றை நுட்பமாக ஆய்ந்தார்கள். ஒட்பமாக ஆய்ந்து, இன்புற்றவற்றை உலகும் இன்புறக் காணத் திட்பமுடன் விழைந்தார்கள். அவ் விழைவின் விளைவே,, திருவள்ளுவமாலை என்னும் நுண்திறனாய்வு நன்னூல். அன்றைய இலக்கியச் சூழலின்படி, அந் நூல் 53 வெண்பாக்களோடும், 2 குறள் வெண்பாக்களோடும் மண்புக்கு மாண்பு கொண்டது. திருக்குறளை அன்றைய உலகிற்கு அடையாளப்படுத்தியது; விளக்கப்படுத்தியது. உணர்வது உடையார்க்கு உயிர்சுவை விருந்தாக உயர்ந்தது. உலகும் போற்றியது; மனத்துக்குள் ஏற்றியது. அதனால், அப் புலவப் பெருந்தகையோரும் உலகிற்கு அறிமுகம் ஆனார்கள்.                       

 12.0. சொல்நுட்பக் கோட்பாடு

           வெளிப்பட்டுத் தோன்றாமல் சொல்லுக்குள் நுட்பங்கள் குறிப்புக்களாக மறைந்தும், நிறைந்தும் இருத்தல், சுருக்கத்தில் பெருக்கப் பொருள் பல காட்டுதல், எளிமைக்குள் அருமைகள் வெளிப்படுதல், தோய்வோர், ஆய்வோர், பேசுவோரது நல்அறிவு, நுண்ஆய்வுத் திறன்களுக்கு எற்ப நுட்பப் பொருள்கள் காட்டுதல் சொல்லின் ஆற்றலை வெளிப்படுதல் போன்ற கூறுகளைக் கொண்டு விளங்குவது, சொல்நுட்பக் கோட்பாடு என ஒருவாறு வரையறுக்கலாம்.

(நிறைவு )

திருவள்ளுவமாலைச் சொல்நுட்பங்கள் உட்தலைப்புக்கள்     

   1. நுழைவாயில்

2. ஆய்வுக் கட்டுரையின் நோக்கு

3. ஆய்வுக் கட்டுரையின் ஆய்வுப் பொருள்

4. சொல்நுட்ப வரைவிலக்கனம்

5. சொல்நுட்ப அமைவு

6. சொல்நுட்பத் தகவு

7. சொல்நுட்பப் பயன்கள்

8. நற்றமிழ் இலக்கணிகளின் நுட்ப இயல் ஆய்வு

9. திருக்குறளில் நுட்பம்

10. திருவள்ளுவமாலை அகச் சான்றுகள்

   10.1. உடம்பிலிப் பாடல் [அசரீரிப் பாடல்]

    10.2. இறையனார் பாடல்

    10.3. கபிலர் பாடல்

    10.4. மதுரைத் தமிழ்நாகனார் பாடல்

    10.5. இடைக்காடனார் பாடல்

    10.6. அவ்வையார் பாடல் 

11. நிறைவுரை

12. சொல்நுட்பக் கோட்பாடு

d;arangarasan

பேராசிரியர் வெ.அரங்கராசன்

            முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்

            கோ. வெங்சுடசுவாமி நாயுடு கல்லூரி

                கோவிற்பட்டி – 628502

                கைப்பேசி: 9840947998