(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: தொடர்ச்சி)

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,

தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி,

திருநெல்வேலி

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

கட்டுரைத் தொகுப்பு நூல்

தொகுப்புரை 7/7

 

  “தொல்காப்பிய ஆராய்ச்சியில் இலக்குவனாரின் உட்பொருள் விளக்கம்” குறித்து, முனைவர் உ.அலிபாவா உவகையுடன் உரைக்கிறார்; தமிழின்மீது, தமிழ்மக்கள்மீது, தமிழ் நாகரிகத்தின்மீது உயரிய மதிப்பினை ஏற்படுத்தும் வண்ணம் இலக்குவனாரின் ஆய்வுரைகள் அமைந்துள்ளன என்கிறார்; தொல்காப்பியத்தைத் தமிழ்மரபு நெறியில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; தொல்காப்பியம் மூலம் அறியலாகும் பல்துறை அறிவைப் புலப்படுத்தியவர்; மனித வாழ்விற்கான இலக்கணம் தமிழில்மட்டும்தான் உள்ளது; கற்புநெறிப்படி ஆடவரும் வாழவேண்டும்; தமிழ்நெறியைத் தமிழருக்காக, தமிழ் முன்னோர்கள் மரபுவழிமட்டும் நின்று உரைப்பதே தொல்காப்பியம் என இலக்குவனார் விளக்கும் பல கருத்துகளையும் ஆய்வாளர் நமக்கு அளிக்கிறார்.

  திருக்குறளுக்குப் பரிமேலழகர் வடநூற் கருத்துகளை ஒட்டி உரை செய்தமையையும் இலக்குவனார் அதனை மறுத்துத் தமிழர் மரபுப்படி விளக்கி யுள்ளமையையும், “பரிமேலழகர் – சி.இலக்குவனார் உரை ஒப்பீடு” மூலம் ஆய்வாளர் இரா.உமாதேவி ஆராய்ந்தளிக்கிறார்; அதிகார வைப்புமுறையிலும் குறள் வரிசை முறையிலும் பரிமேலழகரிடமிருந்து இலக்குவனார் வேறுபட்டுள்ளதையும் விளக்கியுள்ளார்.

  தொல்காப்பியருக்குப் பிற்பட்டகாலத்தவர் திருவள்ளுவர் என  ஆராய்ந்து பேராசிரியர் சி.இலக்குவனார் நமக்குத்  தந்துள்ளனவற்றை      முனைவர் இரா.செகதீசன் “தொல்காப்பியரா? திருவள்ளுவரா?”   என வினா தொடுத்து விடையாக விளக்குகிறார்; தொல்காப்பியர் தொகுத்தளிக்காத  அற்று, அனைய உவம உருபுகளைத் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார் என்பதுபோன்ற ஆதாரங்களை இலக்குவனார் தெரிவிப்பதை நமக்கு இவர் விளக்குகிறார்; காய்ப்பு உவப்பு இல்லாத ஆராய்ச்சிக்கும் சமய அரசியல் கலப்பு இல்லாத ஆராய்ச்சிக்கும் இன்றைய ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாகப் பேராசிரியர் இலக்குவனார் விளங்குவதையும் ஆய்வாளர் எடுத்துரைக்கிறார்.

    “வணிகவியல் பார்வையில் இலக்குவனார் கூறும் வாணிகம்”  எனச்  சங்கக்கால வணிகவியலை  நமக்கு இலக்கியம் வாயிலாக வழங்குவதை முனைவர் கோ.வீ.பிரேமலதா வணிகவியல் துறை நோக்கில் வடித்துத் தருகிறார். உள்நாட்டு வணிகம், அயல்நாட்டு வணிகம், போக்குவரத்து முதலியவற்றைப் பேரா. இலக்குவனார் விளக்கியுள்ளார்; இதன் மூலம் வணிகம் குறித்த பின்னாளைய வரையறைகளைப் பழங்காலத்திலேயே தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது; என வணிகவியல் அறிஞர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டுக்கட்டுரை அளித்துள்ளார்.

 இலக்கிய வரலாற்றை ஆய்வுக்கண்கொண்டு அலசுகிறார்; புத்தம் புதுக் கருத்துகளை  வல்லமையுடன் எடுத்துரைக்கிறார்; இலக்கியம்பற்றியும் தமிழ்பற்றியும் மேலை நாட்டு அறிஞர்கள் கூறும் கருத்துகள்  வழி  ஆராய்கிறார்; இவ்வாறு  ‘பழந்தமிழ்’ நூல் படைத்துள்ளார்;  இவற்றைக் குறிப்பிட்டுச்,  “சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு” எனச் சிங்கப்பூர் பேராசிரியர் முனைவர்  வேல்முருகன் சிறப்பாக அளிக்கிறார்; சங்கப்புலவர்களின் படைப்புகளையும் மேனாட்டுஅறிஞர்களின் ஆய்வுகளையும்  நுணுகிக்கற்ற இலக்குவனார்,  ஆய்வுக்கண்கொண்டே எதையும் அலசுகிறார்; புதிய கருத்துகளையும் அளிக்கிறார்; யாவற்றையும் நெஞ்சம் கவரும் வண்ணம் எளிமையாக விளக்குகிறார் என்கிறார்.

  “இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம்” குறித்து ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’நூலை அடிப்படையாகக் கொண்டு முனைவர் க.தமிழமல்லன், விரிவாக ஆராய்ந்து அளித்துள்ளார்; பேராசிரியர் இலக்குவனார்  சில குறட்பாக்களை முறை மாற்றி அளித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  பேரா.சி.இலக்குவனார், ‘திருக்குறள் – எளிய பொழிப்புரை’ வழங்கும் பொழுது குறட்பாக்களை  நடைமுறை வைப்பின்படியே அளித்துள்ளார். எனினும் குறிப்பிட்ட தலைப்புகளின்கீழ்த் திருக்குறள் கருத்துகளை ஆராயும் பொழுது, அத்தலைப்பிற்கேற்ப முறை மாற்றி அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலக்கணத்தின் துணைக்கொண்டு இலக்குவனார் திருக்குறளின் பல இடங்களை அழகாக விளக்குகிறார்; மறுக்க  வேண்டிய இடங்களில் பரிமேலழகரின் கருத்துகளை மறுக்கிறார்; ஆரியச் சார்பிலான கொடிய கருத்துகளைத் தெளிவாக மறுக்கிறார்; தனித்தமிழில் படைக்கிறார்;பல்துறைப் புலமை கொண்டு திருக்குறளுக்குச் சிறப்பான உரை யளித்துள்ளார் என்று பல்வகைக் கண்ணோட்டத்தில் ஆய்வாளர் அளிக்கிறார்.

  பேராசிரியர் சி.இலக்குவனார் பல்வேறுநிலைகளிலும் பல்வேறு துறைகளிலும் முன்னெடுத்துக்காட்டான அரும் பணிகளை ஆற்றியுள்ளார். அவற்றில், கல்விப்பணி, சொற்பொழிவுப்பணி, படைப்புப்பணி, தொல்காப்பியப் பரப்புரைப்பணி, காலஆய்வுப்பணி, சொல்லாய்வுப்பணி, சங்க இலக்கியப் பரப்புரைப்பணி,  குறள்நெறிப் பரப்புரைப்பணி, இதழ்ப்பணி,  ஆற்றுப்படுத்தும் பணி, தமிழ்க்காப்புப்பணி, ஆகிய  சிலவற்றைத் தொகுத்துக் கருத்தரங்கத்தின் மையத் தலைப்புரையாக “இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள்”  கட்டுரை அமைந்துள்ளது.

  கட்டுரையாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளவாறு,   பேராசிரியரின் படைப்புகள் மேலும் விரிந்த ஆய்விற்குரியனவே!  பேராசிரியரின் ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’, எக்காலத்திற்கும்  ஏற்ற திருக்குறளுக்கு எக்காலத்திற்கும் ஏற்ற அறிவியல் அணுகுமுறையான விளக்கங்கள் கொண்டது. இது குறித்த  கட்டுரையை முனைவர் க.தமிழமல்லன் மட்டும் விரிவாக அளித்துள்ளார். இந்நூற்சிறப்பை ஆய்வாளர்கள் உணர்ந்து மாணாக்கர்க்குத் தெரிவிக்க வேண்டும்.

  பேராசிரியரின் முதல் படைப்பாகிய தனித்தமிழ்க் குறும்பாவியமான ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ ஆராய்ந்து போற்றுதற்குரியது.  தழுவல் ஆக்கத்திலும் தலை சிறந்தது.  இதில் இடம் பெற்ற கவிதைகள் குறிக்கப் பெற்றிருப்பினும் இப்பாவியம் குறித்த கட்டுரை இல்லை.  வாழ்க்கை நிகழ்வுப் பாவியமான  பேராசிரியரின் ‘துரத்தப்பட்டேன்’, ஆற்றுப்படை இலக்கணத்திற்கேற்ப எழுதப்பெற்ற பேராசிரியரின் ‘மாணவர் ஆற்றுப்படை’  முதலானவையும் விடுபட்டுள்ளன. இவை, சிறப்பான முறையில் ஆய்வு செய்திருக்க வேண்டிய நூல்களாகும். இதழியலறிஞர் பேராசிரியர் இலக்குவனார் எழுதிய தலையங்கங்கள் குறித்தும் கட்டுரைகள் இடம் பெற்றிருப்பின் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். பேராசிரியரின் ஆங்கில நூல்கள் குறித்த கட்டுரைகளும் இடம் பெறவில்லை. இவை போல்  இக்கருத்தரங்கத்தில் பார்க்கப்படாத நூல்கள் குறித்த ஆய்வுகள் இனி இடம் பெற வேண்டும். பேராசிரியர் நூல்களில் குறிப்பிட்ட சில பகுதிகளையே பலரும் ஆய்வுக்களன்களாக அமைத்துக் கொண்டது தற்செயல் நிகழ்வுதான். இனி, ஆய்வுத் தளங்களை வரையறுத்துக் கொண்டு  கருத்தரங்கங்கள் நடத்தப் பெற வேண்டும்.

   வாழ்க்கைக் குறிப்புகள் திரும்பத் திரும்ப வருவது தவிர்க்கப்பட்டு நீக்கலாம் எனப் பதிப்பாசிரியர் முதலில் கருதி,  அதன் பின்னர் அந்தந்தக் கட்டுரைஅளவில் முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நீக்கவில்லை என அறிந்தேன். சில மேற்கோள்கள் திரும்பத் திரும்பக் கையாளப்பட்டிருப்பினும் பார்க்கும் கோணம் மாறுபடுவதால் கூறியது கூறலாக் கருத இயலவில்லை. நம் கருத்தில் ஆழப் பதிவதற்காக மீண்டும் மீண்டும்  இடம் பெற்றுள்ளன எனக் கருதலாம். எனவே, இவ்விரு இயல்பு நீங்கலாகப் பார்க்கும் பொழுது பேராசிரியரை அவரது படைப்புகள் வழியாகவும்  பணிகள் வாயிலாகவும்  நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளனர் எனலாம். ஆய்வாளர்கள் சிலர் தொடக்க நிலையில் உள்ளதால் அதற்கேற்ற நிலையில் படைப்புகள் உள்ளன. என்றாலும் பேராசிரியரை அறியாதவர் அறியச் செய்ய அவை உதவுகின்றன. எனவே, இக்கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு பாராட்டிற்குரியதாகவே உள்ளது. இதனைப் பாடமாக வைப்பதன் மூலம்  தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்லாமல், கடந்த நூற்றாண்டின் தமிழ்ச்சூழல், தமிழ்காக்கும் போர்க்களம், தமிழின் செம்மொழித் தன்மை, தொன்மை முதலான சிறப்புகள் ஆகியவற்றையும் இக்காலத்தலைமுறையினர் அறிய இயலும். அதற்கு ம.தி.தா.இந்துக் கல்லூரித் தமிழ்த்துறையினர் முயல வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளில் ஆன்றோர்கள் உரைகளையும் இடம் பெறச் செய்வது மேலும் சிறப்பாக இருக்கும்.

  பேராசிரியர் இலக்குவனாரைப்பற்றிய பார்வை பலவாக இருப்பினும் படைப்பிலும் களத்திலும் தமிழ்ப்பரப்புப் பணியிலும் தமிழ்க்காப்புப் பணியிலும் சிறந்து நின்ற செந்தமிழ் அரிமா அவர் என்பதே அனைவரும் கண்ட கவினுறு காட்சியாகும்.

  சிறப்பான முறையில் கட்டுரை அளித்துள்ள கட்டுரையாளர்களுக்கும் இதற்குக்காரணமான கல்லூரி ஆட்சிக்குழுவினர், முதல்வர், தமிழ்த்துறைத்தலைவர், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறையினர், மணிவாசகர் பதிப்பகத்தார் என அனைவருக்கும் பாராட்டுகள்!

இலக்குவனார் புகழ் பாடி  இனிய தமிழ் வளர்ப்போம்!

நற்றமிழை நானிலமெங்கும் பரப்புவோம்!

 

இலக்குவனார்திருவள்ளுவன்

thiru2050@gmail.com

www.akaramuthala.in