(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 5/7 : தொடர்ச்சி)

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,

தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி

திருநெல்வேலி

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம்

கட்டுரைத் தொகுப்பு நூல்

தொகுப்புரை 6/7

 

  “பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்ப்பணி” குறித்து முனைவர் சி.சுந்தரேசன் போற்றியுள்ளார்; பேராசிரியராக, நூலாசிரியராக, இதழாசிரியராக, மரபுக்கவிஞராக, களப்போராளியாக எனப் பலவகையிலும் செம்மாந்து வாழ்ந்து தொண்டாற்றியமையைச் சான்றுகளுடன் விரிவாக விளக்கியுள்ளார்; கவிதைகளில் சமூக அங்கதம் காணப்படுவது, மணமானவர்தான் குடும்ப விளக்கு பாடம் நடத்த வேண்டும் என்ற பாவேந்தர் பாரதிதாசனை உடன் மறுத்த துணிவு, சங்க இலக்கியத்தை சமூகவியல் நோக்கில் முதன்முறை ஆராய்ந்து எழுதிய நுண்மாண்நுழைபுலம், சங்க இலக்கியப் பரப்புரையில் ஈடுபட்ட காரணம், தொல்காப்பியத்திற்கு விளக்கம்  தரும்  ஆழ்ந்த புலமை, அறிஞர்களின் பாராட்டுகளுக்குரிய சீர்மை எனப் பலவகைகளிலும் இலக்குவனாரை நமக்குக் காட்சிப்படுத்தியுள்ளார்.

  “சி.இலக்குவனாரின் சமூகப் பார்வை” திறனாய்வு வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்று என அவரது படைப்புகள் வழி ஆய்ந்து தெரிவிக்கிறார் முனைவர் இள.தேன்மொழி, ஆரியத்தின் தீமைகளை உணர்த்தினாலும் பிராமண மாணவர்கள் கல்வி கற்பதற்கு உதவி செய்த பேருள்ளம், அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகியவற்றிற்குப்  பெண்களை உயர்வுபடுத்தி விளக்கம் தரும் நடுவுநிலைமை, முதலானவற்றையும் விளக்கியுள்ளார்

  பேராசிரியரால் ஆய்ந்து தெளிவிக்கப்பட்டுள்ள “தொல்காப்பியர் காலத்தமிழர் மணமுறை – களவு”  குறித்து எடுத்துரைக்கிறார் ஆய்வாளர் அ.உரோகிணி; தமிழ்க் களவு, காதல் மணமுறை  ஆரியத்தின் காந்தருவ முறையைவிட உயர்ந்தது,  தொல்காப்பியர் காலத் தமிழர் நாகரிகத்தில் சிறந்திருந்தனர், காதல் மணம் தமிழரின் தனித்த அடையாளம் என  இலக்குவனார் விளக்குவதையும் விவரிக்கிறார்.

  “சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆராய்ச்சியில் கற்புநெறி” திறம்பட விளக்கப்பட்டுள்ளமையைச் சீரியமுறையில் தருகிறார் முனைவர் எசு.பாத்திமா; கற்புநெறியை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாகவும் உரையாசிரியர்கள் கருத்து தவறானவை என விளக்கமாகவும் தமிழப் பெரியவர்களை ஐயர் என அழைப்பதைப் பார்த்த பிராமணர் தங்களை ஐயர் என அழைத்துக் கொண்டனர் என்பதையும் பொது, சிறப்பு, ஆராய்ச்சி என மூவகைக் கல்வி நிலைகள் இருந்தன என்பதையும் தமிழ்நெறிப்பட இலக்குவனார் ஆராய்ந்தளிக்கிறார் என்கிறார்.

 சங்கக்காலத்தமிழ்மக்கள் பொழுதுபோக்கு முறையிலும் மிக உயர்ந்த நிலையில் இருந்தனர் எனப் பேராசிரியர் ஆய்ந்து  தருவனவற்றை, ஆய்வாளர் கு. மேனகா “சங்கக்காலத்தமிழரின் பொழுதுபோக்குகள்” தலைப்பில் நமக்குத் தருகின்றார்சங்கக்காலத்தில் இருந்த அலவனாட்டு, நீர் விளையாட்டு, வண்டலயர்தல், பாவை விளையாட்டு,  ஆடவருடன் துணங்கைக் கூத்தாடல், கழங்காடுதல்,ஊசலாடுதல் முதலான மகளிர் விளையாட்டுகள் பொழுதுபோக்குகளையும் கானைக்கன்றுடன் ஆடல்,  தேர் விளையாடல், கிலுகிலு விளையாடல் முதலான சிறுவர் பொழுதுபோக்குகளையும் மற்போர் முதலான ஆடவர் பொழுதுபோக்குகளையும் ஆய்வாளர் நமக்குத் தெரிவிக்கிறார்.

      “தொல்காப்பிய ஆராய்ச்சியில் அகத்திணையியல் செய்திகள்”  மூலம் தொல்காப்பியர் கூறும் அகத்திணை இலக்கணத்தையும் பாகுபாட்டையும்   பேரா.இலக்குவனார் ஆராய்ந்து அளிப்பதை முனைவர் சே.சாந்தி நமக்களிக்கிறார்; தமிழரின் கடவுட்கொள்கை தமிழர்க்கே உரியது’ வடமொழியாளர்களிடமிருந்து தமிழர்க்கு வந்தது என உரையாசிரியர்கள் தரும்  பொருள் தவறானது’ வடமொழிப்புராணக் கதைகள் அடிப்படையில் விளக்கியதால் வந்த வினை எனச் சிறப்பாகத் தொல்காப்பிய அறிஞர் இலக்குவனார் விளக்குவதை எடுத்துரைக்கிறார். 

     மொழியின் தோற்றம், பயன், தமிழ் இந்நாட்டு மொழியே, தமிழ் மொழியின் சிறப்பு, எழுத்தின் தோற்றம், தமிழ்வரிவடிவம் பிற மொழிகளின் வரிவங்களின் தாய், மொழிக்குடும்பம் அமையும் முறை, தமிழ்மொழிக்குடும்பம் ஆகியவனவற்றைப் பேரா.இலக்குவனார் ஆய்ந்து தந்துள்ளார்;  இவற்றை முனைவர் இ.மா.இராமச்சந்திரன், “மொழியின் சிறப்பு” என்ற தலைப்பில் நமக்குத் தருகிறார்; தமிழர்கள் மொழிக்குமட்டும் இலக்கணம் படைக்கவில்லை வாழ்க்கைக்கும் இலக்கணம் படைத்தவர்கள். ஆரியர்கள் வரும் முன்னர் இந்தியா முழவதும் வழங்கிய மொழி தமிழே. இந்திய மொழிகளின் தாயும் தமிழே. உலக வழக்கு நூல் வழக்கைத் தழுவியே இருந்தால்தான் மொழி நிலைக்கும் முதலான இலக்குவனாரின் முடிபுகளையும்  எடுத்தாண்டு விளக்குகிறார்.

  “பேரா.சி.இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூலில் ஆய்வுமுறை உத்திகள்”  குறித்துக் கிளாக்குளம் முக்கனி மு.பழநியப்பன் உரைக்கிறார்; அரிய பெரிய ஆய்வுச்செய்திகளைப் புதையலாக அள்ளி அள்ளிக் கொடையாக இலக்குவனார் அளித்துள்ளார் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறார்பிற மொழிகளின் இலக்கியத் தொன்மையை அடுக்கடுக்காக எடுத்தியம்பி அவற்றினும் தமிழ்இலக்கியம் தொன்மை வாய்ந்தது எனவும் சிந்துவெளிச் சொற்கள் தமிழ்ச் சொற்களே எனவும் பேராசிரியர் இலக்குவனார் நிறுவுவதைப் பாராட்டுகிறார்.

   பரதகண்டம்  முழுவதும் பேசப்பட்டுவந்த மொழி தமிழ்;   ‘தமிழ்நாட்டில் எல்லாம் தமிழ்’ என்னும் நிலையை எய்தவேண்டும்; தமிழ்மொழியை ஒவ்வொரு தமிழனும் ஒல்லும்வகை வளர்க்க வேண்டும்;    எனப் ‘பழந்தமிழ்’ நூல் வழி ஆராய்ந்து அளிக்கப்படுவனபற்றி முனைவர் அருள்நிதி பி.கா.வீரவராசா, “சி.இலக்குவனாரின் தமிழ் மறுமலர்ச்சி”  மூலம்  தெளிவுபடுத்துகிறார். ஆங்கில நாட்டில் பிரெஞ்சும் இலத்தீனும் ஆட்சி  செய்ததையும் ஆங்கிலேயர் அதனை அகற்றி ஆங்கில மொழியை வாழ வைத்துள்ளதையும் அவர்களைப் போன்ற மொழிப்பற்று இருந்தால்தான் தமிழ் வாழும் என்றும்  இலக்குவனார் விளக்கியுள்ளார். தமிழைப் பயன்படு மொழியாக்கித் திருத்தமாகப் பேசவும் எழுதவும்  வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார் எனவும் ஆய்வாளர் விவரிக்கின்றார்.

  ஐந்திணை மக்களின் வாழ்வியல் முறைகளை, ஆய்வாளர் செ.ஆமினா பானு, “தொல்காப்பியம் காட்டும் சமூகப் பின்புலம்: இலக்குவனாரின் நூல்வழிப் புரிதல்”   மூலம் வகைபட விளக்குகிறார்; மடலேறுதல் ஆண்களுக்கே உரியது எனத் தொல்காப்பியர் கூறுவதற்கான காரணத்தை இலக்குவனார் ஆராய்ந்து உரைப்பது ஏற்கத் தக்கதாக உள்ளது என்றும் தெரிவிக்கிறார்

   “உழைப்பால் உயர்ந்தவர் சி.இலக்குவனார்” என அவரின்  வாழ்வுக் களங்களை விளக்கி முனவைர் ப.செந்தில்நாயகம் சுருக்கித் தருகிறார்; அவரின் படைப்புப்பணி, ஆசிரியப்பணி, இதழ்ப்பணி, நிறுவனப் பணி, பரப்புரைப்பணி எனப் பலவற்றையும் விளக்கியுள்ளார். தமிழ் வாழ்வே தமிழர் வாழ்வு முதலான பேராசிரியர்  வேண்டுகோளை நிறைவாகக்கூறி, நாம் அவற்றைப் பின்பற்ற வேண்டும் எனக் கட்டுரையை முடித்துள்ளார்.

  மொழிப்போர் மூலம் “முத்திரை பதித்த முதல்வர் இலக்குவனார்”   குறித்துப் பேரா.சிவ.சத்தியமூர்த்தி நமக்குப் பேருவகையுடன் அளிக்கிறார். நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியில் 1970 சூன் திங்கள் ஆசிரியர்க்கு ஊதியம் வரக்காலத் தாழ்வாயிற்று; முதல்வராக இருந்த  இலக்குவனார்  தொலைபேசியில் கல்லூரித்தலைவரை அழைத்து நாளை கண்டிப்பாக ஊதியம் வழங்கப்பட்டாக வேண்டும் எனக் கண்டிப்பாகக் கூறினார் ; மறுமுனை கருத்திற்குக் காத்திராமல் தொலைபேசியை வைத்து விட்டார். என  இலக்குவனாரின் நேர்மைக்கும் துணிவிற்கும் நெஞ்சுரத்திற்கும் சான்றான ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்களைத் தம் பிள்ளைகளாகக் கருதியவர் முனிவுற்றுத் தண்டிக்கும் நிலையிலும் எதிர்கால நலன் கருதி மன்னிக்கும் சால்பினர் என அவரின் பண்புநலன்களையும் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

 ‘‘தொல்காப்பிய வேற்றுமையியலில் இலக்குவனாரின் பன்முக உத்திகள்” குறித்துக்  கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.சங்கர வீரபத்திரன் செறிவாக வடித்தமைத்துள்ளார். தான்போற்றும் அறிஞர் கால்டுவெல் அவர்களின் கருத்தையும் அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியின் கருத்தையும் மறுத்தும் தெய்வச்சிலையார் கருத்தை ஒத்தும் பேராசிரியர்  வேற்றுமையியலை விளக்கியுள்ளார் என்கிறார்; ஒப்பீட்டு உத்தி, வழக்கு உத்தி, காரண – காரிய உத்தி முதலான உத்திகள் மூலம் பிற உரையாசிரியர்களின் கருத்துகளைச் சுட்டிக்காட்டிச் சிறப்பான முறையில்  இலக்குவனார் விளக்குகிறார் என்றும் சான்றுடன் நமக்கு அளித்துள்ளார்; நாஞ்சில் நாட்டு வழக்கத்தையும் எடுத்துக் காட்டிப் பேரா.இலக்குவனார் விளக்குவதால் எக்காலத்திற்கும் ஏற்ற விளக்கமாகப்  பேரா. இலக்குவனார் ஆய்வுரை அமைவதை நமக்கு உணர்த்தியுள்ளார்.

  “குறள்நெறிக் காவலர், கொள்கைக்குரிசில் இலக்குவனார்”  என அவரின் இதழ்ப்பணி மூலம் ஆய்வாளர் இராசாமுகம்மது இயம்புகிறார். 1969  ஆண்டு முழுமையும் திருவள்ளுவர் ஈராயிரமாண்டைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனப் பேராசிரியர் இலக்குவனார் 12 வேண்டுகோள்கள் விடுத்தமை குறள்நெறி இதழில் வெளிவந்துள்ளது.  இதனைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார் ஆய்வாளர்.

 தொல்காப்பியத்திற்கு உரை எழுதியோர், அவரவர் காலத்தில் வழங்கிய ஆரியப்புராணக் கதைகளை உள்ளத்தில் கொண்டு உரை எழுதியுள்ளனர் என இலக்குவனார்  மெய்ப்பித்துள்ளார்; தமிழின் தொன்மைச்சான்றுகளைத் தருக்க முறையிலான ஆதாரங்கள் மூலம் நிறுவியுள்ளார்; தொல்காப்பிய ஆராய்ச்சிகளில் வடமொழிச்சார்பு கருத்துகள் திணிக்கப்பட்டமையைக் களைந்து தமிழ்மரபு வழி ஆராய்ந்து கூர்நோக்குடன் அளித்துள்ளார். இவ்வாறு, முனைவர் ஆ.செல்லப்பா, “தொல்காப்பிய ஆராய்ச்சிகளில் வடமொழித் தாக்கமும் தமிழ் அகமரபுச் சிந்தனைகளும்” என்னும் தலைப்பில் எடுத்தோதியுள்ளார்.

  “முனைவர் சி.இலக்குவனார் கூறும் தொல்காப்பிய உவமயியல்” குறித்து முனைவர் இரா.இந்துபாலா விளக்கியுரைக்கிறார்; வினை உவம உருபுகள், பயன் உவம உருபுகள், மெய்யுவம உருபுகள், உரு உவம உருபுகள் ஆகியவற்றை இலக்குவனார் விளக்கும் முறையையும் குறிப்பிட்டுள்ளார்.

  “சி.இலக்குவனாரின் எடுத்துக்காட்டுகளும் உவமைகளும்” நாட்டு நடைமுறைக்கேற்ப மன்பதை நோக்கில் அமைந்துள்ளமையை ‘அமைச்சர் யார்?’  நூலின் மூலம் ஆய்வாளர் செ.தங்கராசு அழகுபட விளக்கியுள்ளார்; உலகியல் அறிவும் தமிழ்ப்புலமையும் மிக்கவர் என்பதை உணர்த்தும் வகையில்  இலக்குவனாரின் எடுத்துக்காட்டுகள்  பொருத்தமாக இருக்கின்றன என்கிறார்.

இலக்குவனார்திருவள்ளுவன்

thiru2050@gmail.com

www.akaramuthala.in