மொரிசியசு-திருக்குறள்மாநாடு04;Mauritius conference 04

மொரிசியசு   நாட்டில்  திருக்குறள்  தேசிய மாநாடு

  மொரிசியசு  நாட்டில்  திருக்குறள்  தொடர்பான தேசிய மாநாடு இம்மாதம் 6-ஆம் நாள் மிகச்சிறப்பாக நடை பெற்றது.

அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பு (INTAD), சென்னை, ஆசியவியல்  நிறுவனத்தின்  கூட்டுறவோடு   இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மொரிசியசு நாட்டின்  முன்னாள் கல்வியமைச்சரும், கஅபபஅ(யுனெசுகோ) நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும்,  மொரிசியசு நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பின் தலைவருமான பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் இம்மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்துப் பன்னாட்டுத்தரத்துடன் மிகச்சிறப்பாக நடத்தினார்.

மொரிசியசு நாட்டின் குடியரசுத் துணைத்தலைவர் மாண்புமிகு பாலன் வையாபுரி மாநாட்டினைத்  தொடக்கி வைத்தார். இந்நாட்டின்  பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் ஏந்தி வந்த திருக்குறள்   ஒளியினை ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர்  சான் சாமுவேல், பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமனிடம் வழங்கினார். மகாத்மாகாந்தி நிறுவனப் பொது இயக்குநர் மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினார்.

  மையக்கருத்துரை வழங்கிய பேராசிரியர் பரசுராமன் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே திருக்குறள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை இணைக்கும் இணைப்பு பாலமாகத் திருக்குறள் அமைய வேண்டிய நிலையினை எடுத்தியம்பவும் இம்மாநாடு நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இம்மாநாட்டினைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு  வைகாசி 3-5, 2048 /  மே 17-19 2017 ஆகிய நாட்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சார்ந்தோர் கலந்து கொள்ள வகை செய்யும் நிலையில் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டினை ஆசியவியல் நிறுவனத்தோடு இணைந்து நடத்தப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

மேலும் 2020 ஆம் ஆண்டில் கஅபபஅ(யுனெசுகோ)வுடன் இணைந்து பிரான்சு நாட்டின் தலைநகரான பாரீசில் மற்றுமொரு அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டினை நடக்கவிருப்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

  ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர்  சான் சாமுவேல் ‘திருக்குறள் உலகப்பொதுமறை‘ என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் சிறப்புரையாற்றினார்.

சென்னையிலிருந்து வருகை வந்த  மருத்துவர் மு.செம்மல்திருக்குறளும் உடல்நல மருத்துவக் கல்வியும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

   மொரிசியசு நாட்டைச் சார்ந்த மருத்துவர் யுவன், வழக்கறிஞர் நித்தியானந்தம். திருமதி. சந்தான வெளியன் ஆகியோரும் உரையாற்றினர்.

   புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் குறித்த முதல் மாநாடு மொரிசியசு நாட்டில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது. இரண்டாவது மாநாட்டினை அடுத்த ஆண்டு (2017) ரீயூனியன்   நாட்டில் ஐப்பசி 17-19, 2048 /  நவம்பர் 3-5, 2017 ஆகிய நாட்களில் ஆசியவியல் நிறுவனத்தோடு இணைத்து நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.