வள்ளுவர் சொல்லமுதம் -1 : அ. க. நவநீத கிருட்டிணன்: திருக்குறள் தெள்ளமுதம்
க. திருக்குறள் தெள்ளமுதம்
அமிழ்தம் என்பது அழகிய இனிய தமிழ்ச்சொல். அச்சொல்லின் இனிமைக்கு அதன் கண் உள்ள சிறப்பு ழகரமே தக்க சான்று. இயற்கை நலம் கெழுமிய இன்பத் தமிழ்மொழியே இனிமை வளம் கொழிப்பது. தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்ற பொருள் உண்டு. கற்பதற்கும் கேட்பதற்கும் களித்து உரையாடுதற்கும் எளிமையும் இனிமையும் வாய்ந்தது இம்மொழி. அமிழ்தம்போன்று ஆருயிர் தழைக்கச் செய்யும் ஆற்றல் உடையது.
இந்நாள் உலகில் வழங்கும் மொழிகள் மூவாயிரம். அவற்றுள் பழமையும் இலக்கிய வளமையும் பொருந்திய மொழிகள் இரண்டே. அவை நந்தம் செந்தமிழும் அயலதாகிய சீனமுமே ஆகும். இவ் இரண்டனுள்ளும் இனிமை மிக்கது தமிழ்மொழியே. இதனாலேயே பன் மொழி அறிந்த பாவலராகிய பாரதியார்,
– யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணுேம் ”
என்று பாடினர். முன்னேப் பழமொழிக்கும் முன்னைப் பழமொழியாய்ப் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியதாய் இனிமையே உருவாய் இலங்கு கின்றது. எழுத்து, சொல், பொருள் அமைதிகளால் உயர்வுற்றது. பல்வேறு சொல்வளத்தால் தனித் தியங்கும் ஆற்றல் உடையது. குறைவறத் திருந்திய செம்மைகொண்டது. ஆதலின் உயர்தனிச் செம்மொழி என்று போற்றும் ஆற்றல் உடையது.
உயர்தனிச் செம்மொழி ஆகிய நந்தம் செந்தமிழில் இனிய பொருள்களைக் குறிக்கும் சொற்கள் எல்லாம் தனிச் சிறப்புடையன. குழல், யாழ், எழில் . பழம், மழை, எழிலி, அழகு, மழலை, தழை, உழை, முழவு, உழவு அமிழ்து முதலாய சொற்களை நோக்குங்கள். எல்லாச் சொற்களும் வாயால் சொல்லவே நல்லின்பம் விளைப்பனவாக உள்ளன. தமிழுக்கே உரிய சிறப்பு ழகரம் அச்சொற்கள் அனைத்தினும் ஒலிப்பதைக் காணலாம்.
பாற்கடலைக் கடைந்த நாளில் அமிழ்தம் தோன்றியது என்பர். அது சாவாமைக்குக் காரணமாகும் தேவாமுதம் என்று கூறுவர். அவ்வமுதை உண்ட வானவர் என்றும் அழியாத வாழ்வு பெற்றனர் என்பர். தெய்வப் புலவராகிய திருவள்ளுவர் அறிவுப் பெருங்கடலைக் கடைந்தார். அமிழ்தத் திருக்குறளைக் கண்டார்.
“அறிவுக் கடலைக் கடந்தவனாம்
அமுதம் திருக்குறளை அடைந்தவனாம்“
மாலவன் பாற்கடல் அமுதத்தை வானவர்க்கு மட்டுமே வழங்கினான். வள்ளுவர் பெருமானோ தாம் கண்ட திருக்குறள் தெள்ளமுதத்தை உலகினர் அனைவர்க்கும் ஊட்டியருளினார்.
திருவள்ளுவருக்குப் பாமாலை சூட்டிய பாவாணருள் ஒருவராய ஆலங்குடி வங்கனார் என்னும் அருந் தமிழ்ப்புலவர் திருக்குறள் தெள்ளமுதின் தீஞ் சுவையை வியந்து போற்றுகிறார்.
வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்
தெள்ள முதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால்-தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து.
இப்பாட்டில் ஆலங்குடி வங்கனார்., வள்ளுவர் வழங்கி அருளிய திருக்குறள் என்னும் தெள்ளமுதின் தீஞ் சுவைக்கு வானவர் உண்ட அமிழ்தின் அருஞ்சுவையும் ஒவ்வாது என்று உவந்து புகழ்ந்தார். வானமுதம் உண்டவர் அழியாத பெருவாழ்வு அடைதல்போலத் திருக்குறள் தெள்ளமுதம் உண்டவர் உலகில் நல் வாழ்வுபெற்று உய்வர். ஆயிரத்து முந்நூற்று முப்பது அருந்துளிகளே கொண்ட அமுதப் பொற்கிண்ணம் நமது அருமைத் திருக்குறள். அத்தெள்ளமுதத் தீந்துளிகளை உளமாரப் பருகினோர் தமிழ் வளமார்ந்த பெரும்புலவராய்த் திகழ்வர். மன்னு தமிழ்ப் புலவராய் மாநிலத்தில் வீற்றிருக்கலாம் என்பர் நத்தத்தனர் என்னும் நற்றமிழ்ப் புலவர்.
திருக்குறள் தெள்ளமுதம் சிந்தைக்கு இனியது . செவிக்கு இனியது வாய்க்கு இனியது வந்த இரு வினைக்கும் மாமருந்தாய் இலகுவது என்று கவுணியனார் கட்டுரைப்பர். பிழை மிகுந்த பாக்களை நோக்கி நோக்கித் தலைக்குத்துநோயால் அலைப்புண்ட தமிழ்ப் புலவராய சீத்தலைச்சாத்தனார்க்குத் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் தெள்ளமுதமே நோய் நீக்கும் மருந்தாய் அமைந்தது. இதனை அவர் காலத்தில் விளங்கிய மருத்துவராய பெரும்புலவர் தமோதானாரே தெரிவிக்கிருர்,
மலைக்குத்து மால்யானை வள்ளுவர் முப் பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு ’ என்பது அவர் வாக்கு.
இங்ஙனம் இன்னமிழ்தாய் நன் மருந்தாய் விளங்கும் திருக்குறளை, அதற்குப் பின்னெழுந்த நூல்கள் அனைத்தும் எடுத்தாள்வதைச் சிறப்பென்று எண்ணின. உணவுக்கு உறுசுவை தந்து நிற்பது உப்பு அன்றோ. உப்பில்லாப் பண்டம் குப்பையில் அன்றோ கொட்டப்படும். அது போன்றே, குறள் உப்புக் கலவாத இலக்கிய உணவெல்லாம் அறிஞர் உள்ளம் கொள்ளாத இயல்புடையவாயின. சிறந்த மருந்துகளை ஆய்ந்து அமைக்கும் மருத்துவர், உண்டார்க்குச் சுவையுடன் அம்மருந்துகள் அமையத் தித்திக்கும் அமிழ்தனைய ஒரு பொருளைச் சிறு துளி அளவே அனைத்தினும் கலப்பர். அஃதேபோன்று உளநோய் அகற்றும் மருந்தனைய நூல்கட்கெல்லாம் அருஞ்சுவைதரும் இயல்பினது திருக்குறள் தெள்ளமுதமே.
(தொடரும்)
வள்ளுவர் சொல்லமுதம்
வித்துவான் அ. க. நவநீத கிருட்டிணன்
[அ.க. நவநீதகிருட்டிணன் (அங்கப்பப்பிள்ளை கங்காதர நவநீதகிருட்டிணன்: சூன் 15, 1921-ஏப்பிரல் 14, 1967) கவிஞர், சொற்பொழிவாளர், தமிழாய்வாளர், எழுத்தாளர், ஆசிரியர் என்று பல களங்களில் செயல்பட்டார். தனது இலக்கிய பணிகளுக்காக பல பட்டங்கள் பெற்றார். திருநெல்வேலி திருவள்ளுவர் கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார்.]
Leave a Reply