(பங்குனி 30, தி.ஆ.2045 / ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி)

  brokenship01

வெள்ளத்தைப் போல் நீருக்கடியில் உள்ள பாறையும் தீங்கின் சின்னமாகிறது. உள்ளதை மறைப்பாரின் ‘இல்லை’ என்ற சொல் நீரினுள் பாறையாகிறது.

இரவென்னும் ஏமாப்புஇல் தோணி கரவென்னும்

பார்தாக்கப்பக்கு விடும்.

  ஊர்நடுவேயுள்ள குளத்து நீர் ஈவாரின் செல்வத்திற்கு உருவகமாகிறது. ஈயாது செல்வத்தைச் சேர்ப்போரின் உள்ளம் இக்குறளில் பாறையாக மாறிவிடுகிறது. இரத்தல் உடைந்த மரக்கலம்; இரந்து வாழ்பவன் இறைவனின் திருவடியைப் பற்றாது, உடையும் மரக்கலத்தைத் துணை கொண்டு, பிறவிப் பெருங்கடலைக் கடக்க முயலுகிறான். அவன் வாழ்க்கையில் நேரும் தீங்குகளை நீக்கவியலாது. கடல் உருவகமும், பாறை உருவகமும், மரக்கல உருவகமும் இணைந்து இக்குறளைச் சிறப்பிக்கின்றன. ‘ஏமாப்பு இல்தோணி’ இரவச்சம் என்ற காவல் இல்லாத தோணி; உருவக முறையில் ஆராய்ந்தால், இது ‘இறைப்பற்று என்ற காவல் இல்லாத தோணி’யாகவும் மாறுகிறது. காமம் அளவற்றுப் பெருகி கடலுருக்கொள்ளும் போது தனிமையில் வருந்தும் தலைவி, காக்கும் தோணியான காதலனன்பைக் காணாது, வருந்துகிறாள். வறுமையும் இவ்வாறு அளவற்றுப் பெருகும்போது, சுற்றத்தாரின் ஆதரவென்னும் கரை காணவியலாத மனிதன், கண்ணில் தோன்றும் எளிய மாக்கலத்தில் ஏறி, பிறவிக்கடலை நீந்த எண்ணுகிறான்! அன்பற்றாரோடு காமத்தில் ஊடுபவன் இழுத்துச் செல்லும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுகிறாள்; இவ்வாறே இரந்து வாழமுயலும் மனிதனின் இரவென்னும் மரக்கலமும் கரவெனும் பாறை தாக்க உடைந்து விடுகிறது. காமவயப்பட்ட காதலிக்குத் தோணி (துணை) இல்லை; இரப்பவனின் தோணியோ பயனில்லை. இவ்வாறு காமமும் இரவும் நிறைந்த வாழ்க்கை ஆரவாரமிக்க பெருங்கடலுருக்கொள்கிறது; அல்லது எல்லாப் பொருட்களையும் தன்னகத்தே இழுத்துச் சென்று அழிக்கும் வெள்ளமாகவும் உருவெடுக்கிறது.

நீரும் நிழலும் அடுத்தடுத்து இருப்பவை. இனிய பொழில் நீரும், நிழலும் நிறைந்து மனதிற்கு இன்ப மூட்டுகிறது.

நீரும் நிழலும் இனிதே புலவியும்

வீழுநர் கண்ணே இனிது. (1309)

நீர் ஊடலுக்கு உருவகமாகவும், நிழல் அன்பிற்கு உருவகமாகவும் இங்குப் பயன்படுகின்றன. அன்புடன் காக்கும் தன்மையுடையோர் யாவரும் துன்பமென்ற வெயிலில் நாம் புழுப்போல் துடிக்கையில் காக்கும் நிழலுருக்கொள்கின்றனர். இவ்வாறு நீரும் நிழலும் இனிமையின் உருவகங்களாகின்றன. இருப்பினும் அவை நோய்தரலா மென்பதையும் சொல்கிறார் திருவள்ளுவர்!

நிழல் நீரும் இன்னாத இன்னாதமர் நீரும்

இன்னாவாம் இன்னாசெயின் (881)

நோய் உண்டாக்கும் நீரும் நிழலும் தீயனவே! ஆதலால் அவை சுற்றத்தாரின் உட்பகைக்கு உருவகங்களாகின்றன. இக்குறள் இனிய ‘மணி நீரும்’ ‘அணி நிழலும்’ பார்வையளவில் இனிமையாகவும், நுகர்ச்சியில் தீமையாகவும் மாறுவதைக் காட்டுகிறது. நீரும் நிழலும் தமது இனிய தன்மையை இழத்தலைக் காட்டுகிறது இக்குறள். சுற்றத்தார் சுற்றம் மறந்து உட்பகையோடிருத்தல் இயற்கைக்கு முரணானதல்லவா? இவ்வாறே, மழை அமிழ்தமாயினும், மண்ணின் கண்ணுள்ள நீர் சேர்க்கையால் மாறிவிடும் தன்மையது. நீரும் நிலமும் பிரிக்கவியலாது கலத்தல் அன்பால் ஒன்றிய காதலின்பத்தைக் குறிப்பினும், நிலத்தியல்பால், நீர் அத்துடன் கலக்கையில் திரிகின்றதையும் எண்ணிப்பார்க்கிறார் கவிஞர்! அமிழ்தமும் தூய்மையற்ற முற்றத்தில் விழுந்தால் பயணற்று கெட்டு விடுகிறது. (இந்த அமிழ்தம் -அங்கணம் உருவகத்தைப் பின்னர் ஆராய்வோம்.) இவ்வாறே நீர் இனத்திற்கேற்பமாறும் அறிவிற்கு உருவகமாகிறது.

நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாரும் மாந்தர்க்கு

இனத்தியல்பதாகும் அறிவு. (452)

இத்துடன் முன்னர்க் கூறிய அறிவு –  நீர் உருவகம் அமைந்த குறளை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்தூறும் அறிவு. (496).

இவ்விரு குறட்பாக்களிலும் அறிவு நீரெனப்படுகிறது. மணற்கேணியில் ஊறும் நீர் தூய்மையானதால், இங்குத் தூய்மையான ஆழ்ந்த அறிவைக் குறிக்க மணற்கேணியின் உருவகத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால் கல்வியைப் பேணாது, சிற்றினம் சேருபவனின் அறிவோ தனது தன்மையில் திரிந்துவிடுகிறது. மண்ணிலிருந்து ஊறினாலும், எல்லாக் கேணிகளிலும் நீர் இனிமையாகவா இருக்கிறது? நல்லநீரும் அது கலக்கும் நிலத்திற்கேற்ப கெட்டுவிடுகிறதல்லவா? இப்பொருள் இனத்தியல்பால் கேடுறும் அறிவிற்கு உருவகமாகிறது. இவ்வாறு உடலழுக்கை நீக்கும் நீர், நிலத்து அழுக்கையோ, மனவழுக்கையோ மாற்றவியலாது திரிகிறது.

  நீர் தனது தன்மையில் ஓடுவதைப்பல குறட்பாக்களில் காட்டுகிறார் வள்ளுவர். மனிதன் தவறான முறையில் நடக்கும் போதெல்லாம், அறம் மறையும் போதெல்லாம், மேகம் வறண்டு விடும். பச்சை மட்கலத்தில் நீரைக் காப்பாற்ற இயலாது; இப்பொருள் வஞ்சனையான வழியில் ஈட்டிய பொருளின் உருவகமாக உள்ளது. தீயவழியில் ஈட்டிய பொருள் பயனற்ற நீர் உருக்கொள்கிறது. பயனற்ற நீர் கரையற்ற குளத்து நீராகவும், பசுமட் கலத்துள் வைத்த நீராகவும் மாறுகிறது. மாறாக, தானே வளரும் பாத்தியில் நீர் சொரிதல் செழுமையின் அடையாளமாக நிற்கிறது. இது தாமே உணர்கின்ற கற்றார் முன் பேசுவதற்கு உருவகமாகிறது. நீர் நல்லதே; ஆனால் அதில் மூழ்குதல், நுனிக்கொம்பில் ஏறுதல் போல் உயிருக்குத் தீங்கு விளைவிக்கிறது. இவ்வாறு மூழ்கியவனை மீட்கத் தீ விளக்கைக் கொண்டு தேட இயலுமா? இப்பொருள் கட்குடியில் மூழ்கியவனை அறிவு சொல்லி மாற்ற வியலாது என்ற பொருளுக்கு உருவகமாக அமைந்துள்ளது. நீரில் மூழ்கினால் இருள்; இருள் இங்கு கட்குடியால் எழும் அறிவு மயக்கத்திற்கும், தீ விளக்கு நல்லறிவிற்கும் உருவகங்களாகத் தோன்றுகின்றன.

இதுகாறும் கூறியவற்றால், மழையும், நீரும் வாழ்க்கையில் தோன்றும் இருமைகளைத் தெளிவுற எடுத்துக் காட்டும் உருவகங்களாகப் பயன்படுவதைக் காணலாம்.

(வளரும்)

குறள்நெறி : சித்திரை 3, தி.பி.1995, ஏப்பிரல் 15, கி.பி.1964