செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்

thirukkural02

  ஒரு மொழியாளர் இன்னொரு மொழியாளருடன் கூட்டுறவு கொள்ளுங்கால் இருசாரார் மொழிகளின் சொற்களும் அயலவர் மொழிகளில் கலப்புறுதல் இயற்கை. அக்கலப்பின் மிகுதியும் குறைவும் அந்தந்த மொழியின் வளத்திற்கு ஏற்ப அமையும், சொல்வளம் குறைந்த மொழி, சொல்வளம் நிறைந்த மொழியிடம் கடன் பெறும்.

  இமயம் முதல் குமரி வரை வழங்கி வந்த தமிழோடு முதன்முதல் கூட்டுறவு கொண்டது ஆரியமே. ஆரியத்தின் கலப்பாலேயே தமிழ்மொழி பல்வேறு மொழிகளாகப் பிரிவுபட்டது. பரத கண்டத்தின் வடபகுதி (விந்தியத்திற்கு வடக்கு)யில் ஆரிய மொழிக் கலப்பு மிகுதியாகவும், தென் பகுதியில் அக்கலப்பு குறைவாகவும் நிகழ்ந்துள்ளது. ஆகவே வட இந்திய மொழிகள் ஆரியச் சார்பு மிகுதியும் உடைமையால் ஆரியக் குழு மொழிகள் எனவும், தென்னிந்திய மொழிகள் தமிழ்ச் சார்பு மிகுதியும் உடைமையால் தமிழ்க் குழு அல்லது திராவிடக் குழு மொழிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

  திராவிடக் குழு மொழிகளில் தமிழ் ஒன்றே ஆரிய மொழிக்கு அடிமையாகாமல் எதிர்த்து நின்று தனித்தன்மையைக் காத்து வருகின்றது. ஆயினும் அதனுள் வடமொழிச் சொற்கள் புகாமல் இல்லை. ஆரியமொழியிலும் தமிழ்ச் சொற்களும் புகுந்துள்ளன. ஆரியமொழி கடன் கொடுக்குமேயன்றிக் கொள்ளாது என்று சிலர் நினைத்திருந்தது தவறு. அவ்வாறு நினைத்ததன் பயனாகத் தமிழ்ச் சொற்களையும் ஆரியமொழிச் சொற்கள் என உரைக்கும் நிலை ஏற்பட்டது. தமிழ் ஆரியம் எனும் இரு மொழியிலும் சில சொற்கள் காணப்பட்டால் அச் சொற்கள் எம்மொழிக்கு உரியன என ஆராயாது அவை ஆரியமொழிக்கே உரியன எனக் கூறிவிட்டனர்.

 திருக்குறளை ஆராய்ந்தால் வடசொல் எனக் கூறத்தக்கது, ‘இந்திரன்’ என்பது ஒன்றே, வடசொல்லா தமிழ்ச் சொல்லா என ஆராய்ந்து முடிவுகட்ட வேண்டிய நிலையில் உள்ளனவை, ‘‘ஆதி’’, ‘அந்தம்’, ‘தனம்’ ‘பகவன்’, ‘பதம்’, ‘பூதங்கள்’, ‘மதி’, ‘மந்திரி’ முதலியனவே. இவற்றுள்ளும் அதி, கனம் எனபனவே வேர்ச்சொல் காண முடியாதவாறு ஐயத்திற்குரியனவாய் உள்ளன.

‘‘அந்தம்’’, ‘‘அற்றம்’’ என்பதன் திரிபேயாகும். ‘‘பகவன்’’ என்பது ‘பகு’ என்னும் பகுதியினின்றும் தோன்றியுள்ளது. பகு+அன் = பகவன். ‘பகவன்’ என்றால் பகுப்பவன் எனப் பொருள்படும். மக்களுக்கு வாழ்வு நலங்களை அவரவர்கள் ஊழுக்கு ஏற்ப பகுத்துக் கொடுக்கும் கடவுளைப் பகவன் என்று அழைத்துள்ளனர்.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (குறள் 377)

எனத் திருவள்ளுவரும் கூறியுள்ளார். ‘பதம்’ என்னும் சொல் உலக வழக்கிலும் இன்றும் பக்குவம் இனிமை, நிலைமை முதலிய பொருள்களில் பயன்படுகிறது. பதம் என்பதன் அடியாகப் பிறந்ததே பதவி என்னும் சொல்.

  ‘பூதம்’ என்னும் சொல் தொல்காப்பியத்தில் தமிழ்ச் சொல்லாகக் கொண்டு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. (தொல் – சொல் – நூற்பா 57) ‘மதி’ தூய தமிழ்ச் சொல்லே, அதனின்றும் தோன்றியதே மதித்தல், காலத்தைக் கணிப்பதற்கு (மதிப்பதற்கு, அளவிடுதற்கு)த் துணை புரிந்தமையால், திங்கள் மதி எனப்பட்டது. மதிப்பதற்கு அறிவு இன்றியமையாதது. ஆதலின் அறிவும் மதி எனப்படுகின்றது. ‘மாதம்’ என்னும் சொல்கூட, இம்மதியினின்று தோன்றியதே மந்திரி என்னும் சொல். மந்திரம் என்னும் தமிழ்ச் சொல்லினின்றும் தோன்றியதாகும். மந்திரம் என்பது மறைமொழியாகும். அரசியல் தொடர்புள்ளனவற்றை மறைவாகக் கூடி ஆராய்ந்து செயல்முறைக்குக் கொண்டு வருபவர்களே ‘மந்திரிகள்’ எனப்பட்டனர். மந்திரத்துக்கு உரியவர்கள் மந்திரிகள் இன்றும் அமைச்சராய் வருவோர் அரசியல் மறைகளைக் காப்பாற்றுவோம் என உறுதிமொழி கூறுவது எல்லா நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றது. இங்ஙனம் ஆரிய மொழிச் சொற்களோ என ஐயுறற் பாலனவும் தமிழ்ச் சொற்களாகவே இருக்கின்றன.

  இன்னும் பல தூய தமிழ்ச் சொற்களை வட சொற்களாக வகுத்துள்ளார் வையாபுரியார். அவை யாவன.

 thamizhchutarmanigal_wrapper01 அகரம் (1), அங்கணம் (720), அச்சு (175), அமர் (814), அமரர் (121), அமிழ்தம் (11), அமைச்சு (381),vaiyapuri01 அவம் (401), அரசர் (381), அரண் (381), அவம் (266), அவலம் (1072), அவி (259), அவை (332), ஆகுலம் (334), ஆசாரம் (1075), ஆசை (206), ஆணி (667), ஆதி (1), ஆயிரம் (259), இசை (231), இமை(775), இரா(1168), இலக்கம் (627) உரு (221), உருவு (667) உல்கு (756), உலகம் (11), உலகு (11), உவமை (7), உறு (498), ஏமம் (306), ஏர் (14), கஃசு (1037), கணம் (29), கணிச்சி (1251), கதம் (130) கந்து (507), கலுழும் (1173), கவரி (969), கவுள் (678), கழகம் (935), களம் (1224), களன் (730), காமம் (360), காமன் (1197), காரணம் (270), காரிகை (571), காலம் (102), கானம் (772), குடங்கர் (890), குடி (171), குடும்பம் (1029), குணம் (29), குலம் (956), குவளை (1114), கூர் (599), கொக்கு (490), கோடி (337), கோட்டம் (119), கோட்டி (401) சுமுனு (118), சுலுமு (660), சுவுஐகு (37), சுதை (714), சூதர் (932), சூது (931), தர் (486), தவம் (19), தாமரை (1103), திண்மை (54), திரு (168), துகில் (1087), துலை (986), தூது (681), தெய்வம் (43), தேயம் (753), தேவர் (1073), கொடி (911), தோட்டி (24), தோணி (1068), தோள் (149), நத்தம் (235), நயம் (860), நாகம் (763), நாகரிகம் (580), நாமம் (360), நாவாய் (496), நிச்சம் (532), நீர்(13), நுதுப்பேம் (1148), பக்கம் (62), பகுதி (111), படாம் (1087), படிவத்தர் (586), பண்டம் (475), பயன் (2) பரத்தன் (1311), பளிங்கு (706), பள்ளி (840), பாகம் (1092), பாக்கியம் (1141), பாவம் (115), பீழிக்கும் (843), பீழை (658), புருவம் (1086) பூசனை (18), பேடி (614, பேய் (565), மங்கலம் (60), மடமை (89), மதலை (449), மயிர் (964), மயில் (1081), மனம் (7) மணி (1272) மா (68), மாடு (400), மானம் (384), மீன் (931), முகம் (90), யாமம் (1136), வஞ்சம் (271), வண்ணம் (561) முகம் (90), யாமம் (1136), வஞ்சம் (271), வண்ணம் (561), வளை (1157), வள்ளி (1304), வித்தகர் (235), வேலை (1221).

(தமிழ்ச்சுடர் மணிகள் -பக்கம் 87-88)

  இவையனைத்தும் தூய தமிழ்ச் சொற்கள் என்பதைச் சிறிது தமிழ்ப்புலமையுடையோரும் எளிதில் அறியக்கூடும். ஆகவே திருக்குறள் முழுவதும் நன்கு துருவி ஆராய்ந்தாலும் மூன்று வடசொற்களுக்கு மேல் காணப்படா என அறுதியிட்டுக் கூறலாம். அவையாவன: இந்திரன், அதி! கனம்! இவற்றுள்ளும் பின்னிரண்டும் ஐயத்துக்குரியன. எஞ்சியிருப்பது ‘இந்திரன்’ ஒன்றே. அது வடமொழிக் கதையில் வரும் பெயராகும். இது பயின்றுள்ள,

‘‘ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்

இந்திரனே சாலும் கரி’’. என்னும் குறள் இடைச்செருகலாக இருக்கலாமோ எனப் பல அறிஞர்கள் எண்ணுகின்றனர். ஆதலின் திருக்குறள் வடமொழிச் சொல் கலவாத தூய தமிழ்நூல் என்பதில் கருத்துவேறுபாட்டுக்கு இடமின்று.

–  குறள்நெறி: ஆனி 32, 1995 / 15.07.64

Prof.Dr.S.Ilakkuvanar