(அதிகாரம்  085. புல்அறிவு ஆண்மை தொடர்ச்சி)

attai_kuralarusolurai03

02. பொருள் பால்    
12. துன்ப இயல்
அதிகாரம்   086. இகல்

வெறுப்பு, பகைமை, பேரிழப்பு

துயரம்எனப் பெருக்கும் மனமாறுபாடு.

  1. இகல்என்ப .எல்லா உயிர்க்கும், பகல்என்னும்

     பண்(பு)இன்மை பாரிக்கும் நோய்.

 

    பிரிவுஎனும் தீப்பண்பை வளர்க்கும்

       கொடிய நோய்தான் மனமாறுபாடு.

 

  1. பகல்கருதிப் பற்றா செயினும், இகல்கருதி

இன்னாசெய் யாமை தலை.

     பிளவால் விரும்பாதன செய்வார்க்கும்,

       மாறுபாட்டால், தீங்கு செய்யாதே.

 

 

  1. இகல்என்னும் எவ்வநோய் நீக்கின், தவல்இல்லாத்

     தாஇல் விளக்கம் தரும்.

 

     மாறுபாட்டு மனநோயை நீக்கினால்,      

       அறிவு விளக்கம் பெறும்.

 

  1. இன்பத்துள் இன்பம் பயக்கும், இகல்என்னும்,

     துன்பத்துள் துன்பம் கெடின்.

 

     மாறுபாட்டுப் பெரும்துயரின் நீக்கம்,

       இன்பத்துள் பெரியதோர் இன்பம்.

 

  1. இகல்எதிர் சாய்ந்(து)ஒழுகல் வல்லாரை, யாரே

   மிகல்ஊக்கும் தன்மை யவர்?

 

     மாறுபாட்டோடு மாறுபாடு கொண்டாரிடம்,

     மாறுபாட்டைத் தூண்டுவார் யார்?

 

  1. “இகலின், மிகல்இனி(து)” என்பவன் வாழ்க்கை,

   தவலும், கெடலும் நணித்து.

 

     “மாறுபாட்டு மிகுதியே இனிது”எனக்

     கூறுவார் வாழ்க்கை, கெடும்.

 

  1. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார், இகல்மேவல்

இன்னா அறிவி னவர்.

 

     மாறுபாட்டுக் கொடிய அறிவினார்

       பொருளின் உண்மையை ஆராயார்.

 

  1. இகலிற்(கு) எதிர்சாய்தல், ஆக்கம்; அதனை

 மிகல்ஊக்கின், ஊக்கும்ஆம் கேடு.

 

      மாறுபாட்டோடு மாறுபட்டால் வளர்ச்சி;

       உடன்பட்டால் உண்டாகும் வீழ்ச்சி.

 

  1. இகல்காணான் ஆக்கம் வரும்கால்; அதனை

   மிகல்காணும், கேடு தரற்கு.

 

   முன்னேற்றத்தில் மாறுபாட்டை ஆராயான்;

     கேட்டை ஆக்க ஆழ்ந்துஆய்வான்.

 

  1. இகலான்ஆம், இன்னாத எல்லாம்; நகலான்ஆம்,

   நல்நயம் என்னும் செருக்கு.

 

     மாறுபட்டால் துன்பங்கள்; உடன்பாட்டு

       மகிழ்நட்பால் பெருமித இன்பங்கள்.

 

பேரா.வெ.அரங்கராசன்

பேரா.வெ.அரங்கராசன்