இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 8
– தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(29 திசம்பர் 2013 இதழ்த் தொடர்ச்சி)
பேராசிரியர் எம்.எசு. பூரணலிங்கம், “பண்பாடு மிக்க தமிழர் தம் கடவுளை, மேனிலையில் உள்ள கொடிநிலை, பற்றற்றக் கந்தழி, அருள் வழங்கும் வள்ளி என மூவகையாகக் கண்டனர். சுருங்கக்கூறின், தம்மை உருவாக்கி ஆள்பவருக்கு, முதன்மைப் பண்புகளாக எங்கும் உளதாகும் தன்மை, பற்றின்மை, அருள் முதலியவற்றை எடுத்தியம்பினர் எனலாம்.” (தொல்காப்பியம் பொருளதிகாரம் விளக்கவுரை பக்கம் 335) (தமிழ் இந்தியா பக்கம் 53.)
பால்வரைதெய்வம் (பொருள். 57) என்று சொல்வதிலிருந்து, கடவுள் ஊழி்னை உருவாக்குபவர் என்றும் வாழ்வுமுறைகளை விதிப்பவர் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தனர் எனலாம்.
(பொருள்.93).
கடவுள் மீதுள்ள இந்நம்பிக்கையின் காரணமாகவே, தம் ஆண்மக்களும் பெண்மக்களும் தத்தம் வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்க உடன்பட்டனர்(பொருள்.93).
இடருற்ற பொழுது இறைவழிபாடு கொண்டிருந்தமைக்கான குறிப்புகள் உள்ளன.(பொருள் 115)
தெய்வம் அஞ்சல், எப்பொழுதும் வலியுறுத்தப்பட்டது. (பொருள்.272)
கொற்றவை என்னும் சொல் வெற்றியைத் தருபவர் என்னும் பொருளில் விளக்கப்படுகிறது. ஆனால் உரையாசிரியர்கள் வெற்றிக்கான பெண் தெய்வம் என இதற்குப் பொருள் தருகின்றனர்;
ஆனால் இது தொல்காப்பிய உணர்விற்கு ஒத்த உறுதிப்பாட்டான பொருளைத் தரவில்லை; ஏனெனில் சமற்கிருதத் தொன்மயியலார் போன்று, தொழிற் செயல்பாடுகளின் அடிப்படையில் கடவுள் இதில்,வேறுபடுத்தப்படவில்லை.
கோயில், கோயில் குரு, வழிபாடு ஆகியன குறித்து எக்குறிப்பும் தொல்காப்பியத்தில் இல்லை. தொல்காப்பியம் மொழி இலக்கிய அறிவியல் நூல் ஆதலின் இத்தகைய விடுபாடுகளை இவை அக்காலத்தில் இல்லையெனும் பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
மோட்சம் அல்லது வீடு அல்லது இறப்பிற்கு பின் உள்ள பிற உலக வாழ்க்கை குறித்து எவ்வகைக் குறிப்பும் இல்லை. எனினும் அவர் வாழ்க்கையின் மூன்று குறிக்கோள்களாக அறம், பொருள், இன்பம் என்பனவற்றை இரண்டு இடங்களில் (பொருள். 92,418) குறிப்பிடுகிறார்; ஆனால் வீடு குறித்து எவ்விடத்திலும் குறிப்பு இல்லை.
எழுத்துகளை உயிர் என்றும், மெய் என்றும் பெயரிட்டமையால் பழந்தமிழர்கள் உயிர், உடல் ஆகியவற்றின் தனிப்பட்ட இருத்தலை குறித்து அறிந்து இருந்தனர் எனலாம்.
தொல்காப்பியர், உலகிற்கு வழங்கும் அறிவுரையின் அடிப்படையில், உலகின் நிலையற்ற தன்மையை அறிந்தவராக காணப்படுகிறார். (பொருள்.78, 79) தொல்காப்பியத்தில் எவ்விடத்திலும் சமயம் குறித்தோ, பிரிவு குறித்தோ குறிப்பு இல்லை. எனவே தொல்காப்பியத்தில் காணக்கிடைக்கும் சமயம் உழவர்களின் சமயம், மனித நேயர்களின் சமயம், பிறருக்கு பயன்பட நல்முறையில் வாழும் வாழ்வியல் தத்துவம், என முடிவிற்கு வரலாம்.
தொல்காப்பியர் தெரிவித்தவாறான பழந்தமிழர் இலட்சியம் “கடவுள் மீது நம்பிகை வை, பிறருக்கு உதவு” என நாம் முடிவாக்கலாம்.
(Tholkaappiyam in English with critical studies
By Prof. Dr. S. Ilakkuvanar: Pages 483-484)
தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்
(தொடரும்)
Leave a Reply