–    தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

 (முன் இதழ்த் தொடர்ச்சி)

pazhanthamizhnadu01

5. அரசியல் வாழ்க்கை

பிளட்டோ கூறுவதுபோல், மனிதன் இயற்கையிலேயே அரசியல் பொருளாவன். எனவே அரசியல் அவனோடு வளர்கிறது.  ‘மனிதன், தன்னுடைய ஆட்களுடன் கூடவே வளர்கிறான்’ என்பதை அரிசுடாடில் வலியுறுத்துகிறார். எனவே அரசியல் வாழ்க்கை என்பது குமுகாய வாழ்க்கையின் வெளிப்பாடு ஆகும்.  முந்தைய தலைப்பில் இருந்து தொல்காப்பிய காலத் தமிழர்கள் மன்பதை வாழ்க்கையில் முன்னேற்ற நிலையை அடைந்திருமையை உணரலாம். அவர்களின் அரசியல் வாழ்வும் பின்தங்கியதன்று.

தொல்காப்பியர் வாழ்க்கையையும் இலக்கியம் போல் அகம், புறம் எனப் பகுத்துள்ளார். புறம் மன்பதை வாழ்க்கையிலிருந்து பீறிட்டு எழுகின்ற, அதன் தாக்கத்தைக் கொண்ட அரசியல் வாழ்வுடன் பெரிதும் தொடர்பு உடையது.

புறம் போருடன் தொடங்குகின்றது. புறத்தில்  உள்ள ஏழு திணைகளில்(பிரிவுகளில்) கடைசி இரண்டு திணைகள் நீங்கலான அனைத்தும் போரைப் பற்றிக் கையாள்கின்றன. எனவே பழந்தமிழ் மக்கள் எப்பொழுதும் போர் நாடுவோராகவும், பண்பாட்டு விலகிய காட்டுமிரண்டிகளாகவும் இருந்தனர் என்று முடிவிற்கு வந்து விடக் கூடாது. போர் என்பது வாழ்க்கைக் கலையில் ஓர் அமைப்பாக கண்டறியப்பட்டுள்ளது உண்மைதான். இஃது ஒன்றுக்குப் பின் மற்றொன்றைத் தொடர்வது போன்று பல்வேறு நிலைகளாக முறைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் போருக்கான இலக்குகள் மிகக்குறைவு.

போர் தொடர்பான நெறிகள் இப்பொழுதும் நம்மால் பின்பற்றத் தக்கனவே.  ஒரு நாட்டின் மீது படையெடுப்பதும், போர் புரிவதும் தொடர்பான இலக்குகள் (பொருள்) நூற்பாக்கள் 62,70 ஆகியவற்றில் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன:

1. பிறருடைய நிலத்தைக் கையகப்படுத்த விரும்பும் பேராசை கொண்ட மன்னனை அச்சுறுத்தவும், வெற்றி பெறவும் அணிவகுத்து முன்னேறுவதை இது இலக்காகக் கொண்டது.

2. தன்னுடைய வலிமையைக் காட்ட விரும்பிச் சண்டைக்கு வந்துள்ள மன்னனை அழிக்கும் பெருமைக்கு உரியது.

 எனவே போரானது தற்காப்புக்குச் சண்டையிடுவதேயன்றி அடுத்தவரை தாக்குவதற்கானதன்று. உண்மையில்,இஃது இப்போதைய அரசியல் அறிஞர்களின் கூற்றையே கொண்டுள்ளது. எனவே தொல்காப்பியர் காலத் தமிழ்மக்கள், அமைதியையும் தற்காப்பையும் போர்க்கொள்கையாகக் கொண்டுஇருந்தனரேயன்றி அடுத்தவரைத் தாக்குவதை அல்ல என்னும் முடிவுக்கு வரலாம்.

தமிழ்நாடு, ஓர் அரசின் நான்கு இன்றியமையான கட்டமைப்புக்கூறுகளை வடிவமைக்கூடிய நிலம், மக்கள் தொகை, அரசு, இறையாண்மை ஆகியவற்றின் கூட்டாக விளங்கியது.

இதன் எல்லை – வடக்கே வேங்கடம், தெற்கே குமரி, கிழக்கிலும் மேற்கிலும் கடல்கள்- என நன்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளது. (பனம்பாரனாரின் பாயிர உரையும், சொல் நூற்பா 391 உம்). இது பன்னிரண்டு பணியாட்சி அலகுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது (சொல் நூற்பா 400). தமிழ்நாடு, தங்களின் வள்ளண்மையால் புகழ்பெற்ற சேர, சோழ, பாண்டிய  மூவேந்தர்களால் ஆளப்பட்டதெனத் தொல்காப்பியர் கூறுகின்றார்.(பொருள்.391). எனவே மூவேந்தர்களும் தத்தம் நிலப்பரப்பை – பிற்கால நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் விளங்கியது போன்று – எவ்வழக்கும், சண்டையும் இன்றி ஆட்சி புரிந்தனர் என அறிந்து கொள்ளலாம்.

தொல்காப்பிய நூலில் – பொருள் நூற்பா 391இல் தொகுப்பாகக் குறிக்கப்பட்டதன்றி – மூவேந்தர்களின் பெயர்கள் பற்றிய எவ்வகைக் குறிப்பும் இல்லை. ஆனால் பனம்பாரனாரின் பாயிரத்தில் தொல்காப்பியம் நிலம்தருதிருவின் பாண்டியன் அவையத்தில் அரங்கேற்றபட்டதாகக்  குறிக்கப்பட்டுள்ளது. எனவே பொருள் 391 நூற்பாவில் குறிப்பிட்டபட்டுள்ள மூவர் என்பது  உறுதியாக  மரபார்ந்த சேர, சோழ, பாண்டியர்களையே குறிப்பதாகக் கொள்ளலாம். புலவர்களையும், அறிஞர்களையும் பேணி, பெரும் படைகளை நிலைநிறுத்தி, அலுவலர்களைப் பணியமர்த்தி, தூதர்களை அனுப்பி அவர்கள் இன்றைய புதுக்கால  நிலைக்கு மாறுபாடு இல்லாத வகையில் வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழித்தனர் எனலாம் (பொருள் நூற்பா-391).

மரபுவழியிலான முடியாட்சி அரசமைப்பின் வடிவாக இருந்தது. முடியாட்சி, என்றால் வல்லாட்சியோ, கொடுங்கோலாட்சியோ அன்று;  நலநாட்டமும் பரிவும் மிக்கது.

மெய்யுணர்வாளர்கள் அரசர்கள் ஆகும் வரையில் அல்லது உலகின் அரசர்களும் இளவரசர்களும்- அறிவும் அரசியல் தலைமையும் ஒருவரிடமே   இணையும் வகையில்-அறிவும் மெய்யுணர்வு வலிமையும் கொண்ட உணர்வினர் ஆகும் வரையில்  …… நகரங்களோ, மனித இனமோ துன்பத்திலிருந்து விடுபடா எனப் பிளேட்டோ கூறுகிறார்(The Story of Philosophy – page 23).  பிளேட்டோ என்ன கூறினாரோ, தமிழ்நாட்டில் அஃது உண்மையாய் இருந்தது. தொல்காப்பியர் காலத் தமிழ் அரசர்கள் மெய்யுணர்வாளர்களாகவும், அறிஞர்களாகவும் விளங்கி மெய்யுணர்வாளப் புலவர்களால் வழிநடத்தப்பட்டனர். புலவர்களால் வழங்கப்பெறும் அறிவுரை செவி அறிவுறு அல்லது வாயுரை வாழ்த்து எனப்பட்டது; இவை இலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளன(பொருள். 423, 473).

மன்னர் வேந்து (நூற்பா.57) அல்லது வேந்தன் (பொருள் நூற்பா.64) அல்லது வேந்தர் (பொருள். நூற்பா.72) அல்லது அரசர் (பொருள் நூற்பா.75) என அழைக்கப்பெற்றார். வேந்து அல்லது இவற்றின் பல்வேறுபாடுகள்   வேம் என்னும் வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியது;  வேம் எனில் வேண்டல் அதாவது விரும்பப்படுதல் என்னும் பொருளாகும். எனவே மன்னர் மக்களால் விரும்பப்பட வேண்டும் என எதிர்ப்பார்பதை அறிந்து கொள்ளலாம். அரசர் என்னும் சொல் அரசு என்னும் சொல்லிலிருந்து வந்தது; சில அறிஞர்களால் நம்படுவது போன்று இராஜா என்ற சமற்கிருதச் சொல்லின் தமிழாக்க வடிவமன்று.

 வேறுபாடு குறிப்பிடத்தகுந்தது.  சமற்கிருதத்தில் இராஜனுக்கு உரியது, ‘இராஜியம் எனக் கருதப்பட்டது. தமிழில் ‘அரசன்’, ‘அரசு’விலிருந்து தோன்றியது. தமிழ்நாட்டில் தொடக்கத்தில் எவர் எவரெல்லாம் அரசு செய்தனரோ அவர் எல்லாம் அரசர் எனப்பட்டார். ஆளுவதற்குப்  பிறப்புரிமை பெற்ற ஒரு குறிப்பிட்ட ஒரு  குமுகாயம் – ‘சத்திரியர்’, பழந்தமிழ் நாட்டில் ஏற்கப்படவில்லை. எனினும் காலப்போக்கில் ஆட்சி உரிமை மரபு வழியிலானது.

 அரசர் மக்களுக்கும்,  நாட்டிற்கும் ஐவகைக் கடமைகளை ஆற்ற வேண்டும்(பொருள்.75). நச்சினார்க்கினியர் ஐவகைக் கடமைகளாகப் புத்தங்களைப் படித்தல், வேள்வி செய்தல், கொடுத்தல், (மக்களைக்) காத்தல், (குற்றவாளிகளைத்) தண்டித்தல் எனக் குறிப்பிடுகின்றார்(பொருள்.உரை பக்கம் 273). இளம்பூரணர் (குற்றவாளிகளைத்) தண்டித்தல் என்பதற்கு மாற்றாகப் படைக்கலன்களை வழங்குதல் என்பதைச் சேர்த்துள்ளார். வேள்வி செய்தல் என்பது தமிழ்ப் பண்பாட்டிற்கு புறம்பானது;  எனவே தொல்காப்பியத்தில் எங்கும் குறிக்கப் பெறவில்லை.  மக்களுக்கு உரியதான புத்தங்களைப் படித்தல், படைக்கருவிகளை வழங்குதல் என்பன கடமைகளாகக் கொள்ளப்படவேண்டியன அல்ல. எனவே  அரசருக்குரிய ஐந்து கடமைகளைச் சரியான முறையில் விளக்குவதற்கு நச்சினார்க்கினியராலும் இளம்பூரராலும் இயலவில்லை என முடிவு கட்டலாம்.

தொல்காப்பியம்(புறத்திணையியல்) அடிப்படையில் அரசின் ஐந்து கடமைகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

1. அயலவர் படையெடுப்பைத் தடுத்தல்

2. அமைதியையும் ஒழுங்கையும் பேணல்.

3. புலவர்களையும் மெய்வுணர்வாளர்களையும் புரத்தல்.

4. குற்றவாளிகளைத் தண்டித்தல்

5. நல்லன காத்தல்.

முழு முடியாட்சி, வரையறுக்கப்பட்ட முடியாட்சி ஆகிய இரண்டனுள் தமிழரசர் வரையறுக்கப்பட்ட முடியாட்சி கொண்டு இருந்தார். அவர் தன் அவைப் புலவர்களால் நெறிப்படுத்தப்பட்டார். மேலும் அரசர்களின் செயல்பாடுகளை விளக்கும்  எண் வகைக் குணங்கள் கொண்ட அவை பற்றியும் குறிப்பு உள்ளது(பொருள் நூற்பா:76). எனவே அறிஞர்கள் அவையும் அரசருக்கு ஒருவகைக் கட்டுப்பாட்டை விதிப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எனவே அரசர் தனிநிலைத் தலைவரும் அல்லர்; கொடுங்கோல் ஆட்சியரும் அல்லர்; அவர் அறிஞர்களும் புலவர்களும் கொண்ட  அவையால் கட்டுப்படுத்தப்பட்ட முடி மன்னர் ஆவார்.