தமிழ் இணையக் கல்விக்கழகம்

‘ஒருங்குகுறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும்‘ – ஒருநாள் கருத்தரங்கம்

21.02.2045 / 05.03.2014

  சென்னை

கருத்தாளர் : இலக்குவனார் திருவள்ளுவன்

தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்

  tnvirtualuniversity02

  மேற்குறித்த தலைப்பிலான த.இ.க. கருத்தரங்கத்திற்குக் கட்டுரை அளிப்பது தொடர்பாக இயக்குநருடன் தொடர்பு கொண்ட பொழுது யாரிடமும் கட்டுரை வாங்கவில்லை என்றும் உத்தமம், கணித்தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள், என்றும் பார்வையாளர்கள் அவற்றின் அடிப்படையில் கருத்துகளை வழங்கலாம் என்றும் தெரிவித்தார். அவ்வாறாயின் இந்நிகழ்வு சொற்பொழிவுக்கூட்டம் என்றுதான் கருதப்பட வேண்டும். அனைவரிடமும் கட்டுரை கேட்டு இதனைக் கருத்தரங்கமாகவே அமைத்திருக்கலாமே என்றதற்கு இதில் தொழில் நுட்ப வல்லுநர்கள் பேசுவார்கள் என்றார். தவறான கருத்துகள் இடம் பெறுவதால் அது குறித்து நானும் கருத்து தெரிவிக்க எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றேன். முனைவர் ப.அர.நக்கீரன், இரு பக்க அளவில் எழுதிக் கொண்டு வருமாறும்   மேடையில் அதைத் தெரிவிக்குமாறும் கூறினார்.  இந்த வாய்ப்பை அளித்த அவருக்கு நன்றி.

  இத்தகைய கருத்தரங்கம்  தேவையான ஒன்று என்பதாலும் த.இ.க. முயற்சி உரிய பயன் அளிக்க வேண்டும் என்பதாலும் நிகழ்ச்சி விவரத்தை நான் நடத்தும் இணைய இதழிலும் வலைப்பூக்களிலும் உறுப்பாக உள்ள குழுக்களிலும் பகிர்ந்தேன்.

 

  எனினும், நான்  பேசினால் மட்டும் போதாது; தமிழறிஞர்கள் கலந்து கொண்டால்தான் கருத்தரங்கம் முழுமையுறும் என்பதால் த.இ.க.தலைவருக்கு இது குறித்து மடல் அனுப்பினேன்.

 

   ஒருங்குகுறி நுட்பக்குழு தமிழ் வல்லுநர்களைக் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டியதன் அடிப்படையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. எனினும்  தமிழ் வல்லுநர்களைச் சிறப்பாக அழைக்காமல், உத்தமம் என்னும் தொழில்நுட்ப அமைப்பின் பொறுப்பாளர்களை அழைத்து நடத்தும் வகையில் இக்கூட்டம் அமைக்கப் பெற்றுள்ளது. பங்கேற்கும் தமிழார்வலர்கள் அல்லது தமிழறிஞர்கள் கருத்து தெரிவிக்கலாம் எனினும், முதன்மைப் பங்களிப்பு உத்தமப் பொறுப்பாளர்களுக்கே உரியது. உத்தமத்தைச்  சேர்ந்தவர்கள் வணிக நோக்கில் செயல்படுவதாகக் கருத்து நிலவுகிறது. எனினும்  அவர்கள் தமிழார்வத்துடன் அரும்பணி ஆற்றி வருபவர்களே! என்றாலும் சிறந்த பல் மருத்துவர்கள் என்பதற்காக அவர்களிடம் நாம் நம் கண்களை ஒப்படைக்க முடியாதல்லவா? எனவே, தமிழறிஞர்களைக்  கொண்டே குழு அமைத்துக்  கணிணி வல்லுநர்களும் கலந்து பேசி முடிவெடுப்பதே சாலவும்  நன்றாக அமையும்.

 

தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் வரிவடிவச் சிதைவில் நாட்டம் கொண்டது. எனவேதான் அரசின் கொள்கைக்கு மாறாக வரிவடிவச் சிதைவுபற்றிய காணொளியைப் பரப்பி வருகின்றனர்; கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தித் தமிழ் வரிவடிவத் தூய்மைக்கு எதிராகவும் செயல்படுகின்றனர். இத்தகைய அமைப்பு இது போன்ற குழுவை அமைத்து முடிவெடுப்பது என்பது தமிழ்நலத்திற்கு எதிராகவே அமையும் எனத் தமிழறிஞர்கள் அஞ்சுகின்றனர்.

எனக் குறிப்பிட்டு,

 தமிழ்ப்பல்கலைக்கழகம் மூலம் குழுவை அமைத்து தமிழ் இணையக்கல்விக் கழகம் இணைந்து செயல்படுமாறு கூட்டம் அமைக்க வேண்டியிருந்தேன்.

  த.இ.க. தலைவரான தகவல்தொழில்நுட்பச் செயலர் உடன் இயக்குநரை வரவழைத்துப் பேசியுள்ளார். தொழில்நுட்பம் சார்ந்த கூட்டம் எனத் தெரிவிக்கப்பட்டதால், ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை நிறுத்த வேண்டா என்றும் அதில் பங்கேற்று தேவைப்படும் மாற்றங்கள் குறித்த கருத்தைத் தெரிவிப்பின் அரசு தொடர் நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிய வந்தேன்.

  உரிய நாளில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்று இதன் பொருண்மை தொடர்பான என் கருத்துகளை த.இ.க.  தலைவரிடமும் இயக்குநரிடமும் அளித்தேன்.  கட்டுரையைப் பெற்ற இயக்குநர் முனைவர் ப.அர.நக்கீரன், முகம் மலர்ந்து எப்பொழுது வாசிக்கின்றீர்கள் என்றார். அமர்வுகளின் பொழுது என்  கருத்துகளைத் தெரிவிக்கின்றேன் என்றும் அமைதி ஆனந்தம்  பங்கேற்கும் அமர்வில் மட்டும் அப்பொருண்மை குறித்து வாசிப்பதாகவும் தெரிவித்தேன். அவரும் உடன்பட்டார்.

 thamizhinaiyakarutharangam01

முதல் அமர்வு:   ‘தமிழ் பின்னம் – பெயரிடல் மற்றும் வரிவடிவம்’ தொடர்பாக.ஒருங்கிணைப்பாளர் மணி மு.மணிவண்ணன் பேராளர்களின் கருத்துகளைச் சிறப்பாக விளக்கினார்;  பேராளர் முனைவர் சிரீஇரமணன் கட்டுரையை வாசித்து விளக்கியபின்பு, ஒருங்கிணைப்பாளர் தொலைபேசி வழியாக முனைவர் கணேசன் கருத்தையும் அவையில் அறியச் செய்தார்.

 முதலில் அமர்வுத்தலைப்பு  ‘தமிழ் பின்னம் – பெயரிடல்’  எனத் தெரிவித்து இருந்ததால், இதில் எவ்வகை மாற்றமும் செய்தல் கூடாது எனக்  குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் நிகழ்நிரல் தலைப்பில்  தமிழ்ப் பின்னத்தை ஒருங்குகுறி முறையில் ஆங்கில ஒலிபெயர்ப்பு, வரிவடிவம் தொடர்பாக என்று இருந்து அவ்வாறு பேச்சு அமைந்தது.  அத்துடன் பற்று, செலவு முதலான சொற்களின்  குறியீடுகளை ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டிய ஒலி பெயர்ப்பு வடிவமும் பேசப்பட்டது.

  இது குறித்து நான் கருத்து தெரிவிக்க எழுந்த போது, கணிணி நிரலர்கள்தாம்(Programmers) கருத்து  தெரிவிக்க வேண்டும் என்று மறுக்கப்பட்டேன். நிகழ்ச்சி தொடக்கத்திலேயே (என் மடலுக்கு மறுமொழி அளிப்பதுபோல்) இது தொழில்நுட்பம் தொடர்புடையது, அவர்கள்தான் உரையாற்ற கருத்து தெரிவிக்க இயலும் என்று தெரிவித்திருந்ததால், அதன் அடிப்படையில் மறுத்தார்.

  பங்கேற்பாளன் என்ற முறையில் கருத்து தெரிவிப்பது என் உரிமை, நான் என் கருத்தைத் தெரிவிக்கப் போகின்றேன் என்றதும் பெயரை எழுதித்தருமாறு வேண்டப்பட்டேன். அவ்வாறு எழுதித் தந்ததும் பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், த.இ.க. காணொளியில் நான் எழுந்து நிற்பதும், துண்டுச் சீ்ட்டில் பெயர் எழுதிக்கொண்டு இருப்பதும் உள்ளது. என் பேச்சு  வெட்டப்பட்டுள்ளது.

 tamil fractions

 

 

  தமிழ்ச் சொற்களை எவ்வாறு எழுத வேண்டும் என்பது குறித்து  கணிணி வல்லுநர்களும் விற்பனையாளர்களும் முடிவெடுக்க இயலாது; தமிழறிஞர்களின் கருத்துகளை அறிந்தே முடிவெடுக்க வேண்டும்  என்பதை வலியுறுத்தினேன். ஆங்கில ஒலி பெயர்ப்பு தமிழின் மரபிற்கேற்பவே அமைய வேண்டும் என்று தெரிவித்ததும் பிறரும் இதற்கேற்பவே கருத்துகளைத் தெரிவித்தனர். ஆங்கில ‘டி’ (t)  எழுத்தின்கீழ்ப் புள்ளி இட்டுக் குறிக்கப்படுவதில் அடிப்புள்ளியை எடுத்து விடலாம், சிறப்பு ழகரத்திற்குப் பயன்படுத்தும் ஆங்கில இசட் எச்  (zh)  எழுத்துகளை நீக்கி விடலாம் என்பன போன்ற சமசுகிருதரின் கருத்தை வலியுறுத்தும் தொழில் நுட்பரின் கருத்து ஏற்புடைத்தல்ல. எனவே, எதிர்ப்பு வந்தது. ஒருங்கிணைப்பாளரே எதிர்பார்க்காத அளவு கருத்தாடல் நீண்டது. முனைவர் மு.பொன்னவைக்கோ ஒலி பெயர்ப்பில் சீர்மையை அறிமுகப்படுத்தி அதன்பின்பு இதனைக் கருதலாம் என்னும் நல்ல முடிவைத் தெரிவித்தார்.

  இப்பொருண்மையிலான மாலை நேர நிறைவுக் கலந்துரையாடலும் சூடாகவே அமைந்தது.

‘ஆழாக்கு’ என்பதை ‘அளக்கு’ எனப் படிப்பதுபோல் (alakku) குறிப்பிடல் போன்று பல ஒலிபெயர்ப்புகளும் தமிழுக்கு முரணாக அமைந்தன.  பொருந்தாமையைக் குறிப்பிட்டு எதிர்த்தேன். தமிழன்பர்கள் கருத்து ஒத்ததாகத்தானே இருக்கும்! காந்தளகம் சச்சிதானந்தம், முனைவர் மா.பூங்குன்றன், முனைவர் கண்ணன் முதலானோர் கடுமையாகத்  தொடர்ந்து எதிர்த்தனர். உச்சரிப்பு முதன்மை அல்ல; தமிழ் மரபே முதன்மையானது என்றனர். பேரகராதித்துறை பற்றி மேடையில் தெரிவித்ததால், தாங்களும் அகராதித்துறையினர் என்பதால்தான் மறுப்பு தெரிவிப்பதாகத் தெரிவித்தனர். “எழுத்தொலிபெயர்ப்பிற்குக் குழு அமைக்கலாம் என்று காலையில் கூறிவிட்டு மாலையில் சீரற்ற ஒலிபெயர்ப்பை வலியுறுத்துவது ஏன்” என்றேன். உடன் முனைவர் மு.பொன்னவைக்கோ அவ்வாறு குழு அமைத்துவிட்டு  இது குறித்து முடிவெடுக்கலாம் என்றார்.  பொறி. மணி மு.மணிவண்ணனும்  ஏற்றார்.  அப்பொழுதே குழு முடிவெடுக்கப்படவேண்டும் என முனைவர் பொன்னவைக்கோ வலியுறுத்தி அதற்கேற்ப குழுவை அமைத்தனர்.  முனைவர் மு.பொன்னவைக்கோ, மணி மு. மணிவண்ணன், முனைவர் இரமணன்  ஆகியோருடன் முனைவர் மா. பூங்குன்றனும் காந்தளகம் சச்சிதானந்தன்  தெரிவித்ததற்கிணங்க, புனல் க.முருகையனும் முனைவர் செயதேவனும் குழுவில் சேர்க்கப்பட்டனர்.

 Ponnavaikko01

  மதுரைத்திட்டம் அமைப்பாளர் நூ.த.(உ)லோகசுந்தரம் “இப்போதைய பயன்பாட்டில் இல்லாத  எண் குறியீடுகளுக்காகத் தனி இடம் ஒதுக்கவேண்டியது தேவைதானா” என்ற வினாவை எழுப்பினார்.  பொறி மணி மு. மணிவண்ணன், முனைவர் இரமணன் தெரிவிப்பது போன்று  மீட்டுருவாக்கம் செய்வது தமிழுக்கு வளம் சேர்க்கும். எனவே,  கணிணிப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதே நன்று. ஆனால், பைசா, (இ)ராச, கெசம், சிரஞ்சீவி முதலிய அயற்சொற்களை நீக்கிவிட  வேண்டும். பிள்ளை என்பதற்கான குறியீடு தேவையில்லை. அதனை நீக்க வேண்டும். அட்டவணையில் ‘பௌர்ணமி’, ‘அமாவாசை’ என்பனவற்றை முறையே, வெள்ளுவா/முழு நிலவு, காருவா/இருள்நிலவு என ஏதேனும் தமிழ்ச்சொற்களால்தான் குறிக்க வேண்டும்.

 

  குறியீடுகளும் கூட்டெழுத்துகளும் இடம் பெறுவதாயின் முழுமையாக இடம் பெற வேண்டும்.

  முந்திரியின்  கீழ்வாயிலக்கங்களுக்கும் [முந்திரிக்குக் கீழ்முக்கால் (3/1,280), முந்திரிக்குக் கீழ் அரை (1/640), முந்திரிக்குக் கீழ் கால் (1 / 1280), முந்திரிக்குக் கீழ  அரைக்கால் (1/2,560), முந்திரிக்குக் கீழ  மாகாணி (1/5,120), முந்திரிக்குக்  கீழ் முந்திரி (1/1,02,400)]  இடம் பெற வேண்டும்.  தவறான ஒலி பெயர்ப்பால் வேலி என்னும் நீட்டல் அளவை (26,000 சதுரக்கோல்) வெளி எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இதுவே தொழில்நுட்பர் தாமே பின்பற்றும் ஒலி  பெயர்ப்பு முறையற்றது என்பதற்குச் சான்றாகும்.

  முகத்தல் அளவையில் செவிடு, உழக்கு, நாழி, மரக்கால், கலம் முதலான பிற அளவைகளும்  நிறுத்தல் அளவையில்  பணவெடை, கழஞ்சு, பலம் முதலான பிற அளவைகளும்,  அறியவரும் பிற அளவைக் குறியீடுகளும் குறிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அளவைக் குறியீடுகள் முழுமையடையும்.

  நிகழ்ச்சி முடிந்த பின்னர்ப் பலரும் உரையாடியபொழுது தெரிவித்ததுபோல், தமிழ்மொழிசார்ந்த முடிவிற்குத் தொழில்நுட்பர்கள் தேவையில்லை. தமிழின் தேவையை நிறைவேற்ற  வேண்டியதுதான் வல்லுநர்களான அவர்களின் கடமை.  தொழில் நுட்ப வாய்ப்பிற்கேற்ப தமிழ் தொடர்பான முடிவுகளை அமைத்திட இயலாது. எனவே, தமிழக அரசே, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில்தமிழறிஞர்கள் கொண்ட தமிழ் எழுத்துகளுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்புக்  குழு ஒன்றை அமர்த்தி அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும். இதுவே சாலச்சிறந்ததும் சரியான முறையுமாகும்.

 mani_mu_manivannan01

இரண்டாம், நான்காம் அமர்வுகள்

 தமிழ்அனைத்து வரிவடிவக் குறியமைப்பு – 16 ஓர்மி (TACE16) – செயல் திட்டம்: இப்பொருண்மையிலான இரண்டாம் அமர்வு முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையில் திரு அ.இளங்கோவன்  பேராளராகப் பங்கேற்க நடைபெற்றது. இருவரும் இது குறித்து விரிவாக விளக்கினர்.

 ஒருங்குகுகுறி எழுத்துருக்களும், விசைப்பலகையும் – பயன்பாடு  என்னும் தலைப்பிலான நான்கா்ம்அமர்வு பேரா.கிருட்டிணமூர்த்தி தலைமையில்  திரு இனியநேரு, திரு செயபாலன் பேராளர்களாகப் பங்கேற்க நடைபெற்றது.   பேரா. கிருட்டிணமூர்த்தி பயன்பாட்டுச் சிக்கல் குறித்து விளக்கி, இச்சிக்கல் இந்திய மொழிகளுக்குப்  பொதுவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். பின்னிருவர்  தேசியத்தகவல் மையத்தின் பணிகள் அடிப்படையில் பயன்பாட்டு நோக்கில் பேசினர்.

 

ஒத்த பொருள்கொண்ட இத்தலைப்புகள் பற்றிய கருத்துகள் வருமாறு :-

 

 எழுத்துரு தொடர்பான அட்டவணையில் உகர, ஊகாரக் குறியீடுகள் கிரந்த வடிவில் உள்ளன. தமிழ் உகரக் குறியீடு என்பது சிறு நெடுக்கைக் கோடும்,  ஊகாரக் குறியீடு என்பது சுழிக்கப்பட்ட சிறு நெடுக்கைக் கோடுமாகும். இக்கோடு எழுதும் வாகிற்கேற்ப  வெவ்வேறு வடிவமாகத் தோற்றமளிக்கின்றது. இதனைக் கீழே காட்டப்படும் படம் தெளிவுறுத்தும்.

.ukarakuriyeetu

எனவே, தமிழ்க் குறியீடுகளையே அட்டவணையில் சேர்க்க வேண்டும்.

 thamizh ezhuththu cheermai 1

 முனைவர் மு.பொன்னவைக்கோ அவ்வாறு இப்பட்டியலில்  உகரக்குறியீடு எதுவும் இல்லை என்றும் கிரந்த எழுத்திற்காகப் போடப்பட்டது என்றும்  தெரிவித்தார். தமிழ் உகர, ஊகாரம் போல் கிரந்தத்தைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ள பொழுது அதற்கு ஏன் தனிக் குறியீடு தேவை.

  அதே நேரம், கிரந்தக் குறியீடு குறிக்கப்பட்டுள்ளது உண்மை.

  தகவல்தொழில்நுட்பத்துறை அரசாணை எண் 29 நாள் 23.06.2010 இல் உள்ள அட்டவணைகள் கிரந்தக் குறியீட்டைக் காட்டுகின்றன. இணைப்பு ஆ.4 கு.1ஊ.5, கு1.ஊ6 (Appendix B 4 : E1F5 E1F6)  வரிசைகளிலும் உகரக்குறியீடு, ஊகாரக்குறியீடு ஆகியனக் கிரந்தக்  குறியீடுகளாகவே உள்ளன.  பல்வேறு விசைப்பலகை அட்டவணையிலும் இவ்வாறே  தமிழ்க்குறியீடு அறியாமல் கிரந்தக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இவற்றுக்கு முற்றுப்புள்ளி இடும் வகையில் மேலே தெரிவித்தவாறான தமிழ் உகர, ஊகாரக் குறியீடுகளே குறிக்கப் பெற வேண்டும்.

  மேலும், தமிழ்க்கணியச்சுப் பலகை அல்லது விசைப்பலகையில் கிரந்த எழுத்துகள் தேவையற்றவை.

  மேற்குறித்த அராசணை இணைப்பு ஆ.2. கு1 ஊ (Appendix B 2:E1F),  இணைப்பு ஆ.1 இல் கு.34 இல் (Appendix B1-E 34) இல் குறிக்கப்பெற்ற ‘சமசுகிருத ச’ (sh) ஒலிப்பு வரிசைகள் தமிழுக்குத் தேவையற்றவை. இவையே பின்னரும் விரிவாக  இணைப்பு  ஆ.3  இல் கு 340-349, கு 34 அ- 34இ (Appendix B 3 : E 340 – 349 ; E34A – E34C) வரிசையில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. தமிழில் பழக்கத்தில் இல்லாத இவ் வெழுத்துகள் சமசுகிருதச் சொற்களைத் தமிழில்  புகுத்தும் நோக்கிலேயே சேர்க்கப்படுகின்றன. பிற கிரந்த எழுத்துகளும் தேவையற்றவை. இவற்றில் பெரும்பாலான நடைமுறையில் இல்லை. நடைமுறையில் உள்ள சில எழுத்துகளே தமிழில் பிற மொழிக் கலப்பதற்குக் காரணமாக அமைகின்றன. தமிழில் ஆங்கிலம் இடையில்  கணியச்சிட வேண்டிய தேவையிருப்பின் எவ்வாறு ஆங்கில வரிவடிவ அமைப்பிலிருந்து பயன்படுத்துகின்றோமோ அவ்வாறே கிரந்தம் தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்திய வரிவடிவங்களுக்குத் தாயாகவும் உலக வரிவடிவங்களுக்கு முதன்மையாகவும் உள்ள தமிழைத் தாழ்த்தும் வண்ணம் தமிழ் வரிவடிவில் அயலெழுத்து ஒலி வடிவங்களுக்கான வரி வடிவம் சேர்ப்பது என்பது தீங்கானது! தமிழில் ஏற்பட்ட கலப்பு போதும்! இனியேனும் அதன் தூய்மையைக் காக்க வேண்டும்! எனவே, அனைத்துக் கிரந்த எழுத்துகளையும் தமிழ்வரி வடிவ அட்டவணையில் இருந்து  அறவே நீக்கி விட வேண்டும்.

  தமிழ்-99 விசைப்பலகையை வலியுறுத்தக்கூடாது. புதுப்புது வகை விசைப்பலகைகளை உருவாக்கிக் கொண்டே போகக்கூடாது.

  வழக்கத்தில் உள்ள விசைப்பலகை முறை எழுத்துகளின் பயன்பாட்டு அடிப்படையில் தட்டச்சிற்காக உருவாக்கப்பட்டது. இதில் தேவைக்கேற்ப மிகச் சில மாற்றங்களை  ஏற்படுத்தலாம். மாறாக முற்றிலும் மாற்றுவது உளவியலுக்கு எதிரானது. தமிழ் தட்டச்சை அறியாதவர்களால் உருவாக்கப்பட்டதுதான் தமிழ் 99 விசைப்பலகை. தமிழ்த்தட்டச்சினைப் பயின்று வருபவர்கள் அதற்கு மாறான விசைப்பலகை முறையை உருவாக்கினால் சிக்கல்தானே வரும். எனவே, புதிய தமிழ்த்தட்டச்சு முறையிலான விசைப்பலகையையே பயன்படுத்த வேண்டும்.

 chellappan,annakannan plus01

  ஒருங்குகுறி என்பது எல்லாத் தளத்திலும் பயன்படுத்தக்கூடியதல்ல. எனவே, பெரும்பான்மைப் பயன்பாட்டிலுள்ள தமிழ் எழுத்துருக்களின் சில வகைகளைஅனைவரும் எளிதில் பயன்படுத்தும் முறையில்  சீருரு அல்லது ஒருங்குகுறி இன்றி அனைத்துக் கணிணிகளிலும் பயன்படும் வண்ணம்  கணிணி வல்லுநர்கள் நன்முறையை உருவாக்க வேண்டும்.

மூன்றாம் அமர்வு :  “ஓர் இந்தியா -ஓர் எழுத்துரு” – திரு. அமைதி ஆனந்தம் அவர்களின் கருத்துரு

  தமிழ், ஒரு காலத்தில் தான் ஆட்சி செய்த  இன்றைய இந்திய நிலப்பரப்பு  முழுமையும் மீண்டும் பயன்படுத்தப்படும் நிலை வந்தால் மகிழ்ச்சிதான். ஆனால், வெறும் தமிழ் எழுத்துகளால்  அயல்மொழி குறிக்கப்  பெற்றால் தமிழுக்குப் பெருமை யல்ல. தமிழ்க்குடும்ப மொழிகளில் உள்ள சிதைந்த வடிவங்கள்  தமிழில் கலப்பது எளிதாகும். இதனால்பிற மொழிகளின் வாழ்வும்  தாழும்.

  அத்தகைய நிலைப்பாடு வரவேண்டுமென்றாலும், பொதுமை எழுத்து வடிவம் குறித்துத் தமிழறிஞர்கள் மட்டுமல்லாமல், பிற மொழியாளர்களும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். அவ்வாறிருக்க தமிழ் மொழியினர் மட்டும் இது குறித்துப் பேசி முடிவெடுக்கலாம் என எண்ணுவது  தவறாகும்.  ஆனால்,  பொது எழுத்து குறித்த எண்ண ஓட்டமே  அறமற்றது என்பதை உணர வேண்டும்.

 ஒரு நாடு – ஒரு மொழி என்பதும், ‘ஒருநாடு – ஒரே எழுத்து வடிவம் என்பதும் பல்வேறு தேசிய இனங்களின் அழிப்பிற்கும் நாட்டின் சிதைவிற்கும் வழி வகுக்கும். ‘தமிழ் வரிவடிவங்கள் இந்திய வரிவடிவங்களின் தாய்’ என்பது உண்மை. ஆனால்,  பிறமொழிகள் உருவான பின் மூல மொழியின் வரிவடிவங்களைப் புகுத்துவது அம்மொழிகளுக்கு அழிவே ஆகும். மாறாக, அம்மொழியினரிடம் மூல மொழியான தமிழ் மொழியின் வரலாற்றை உணர்த்தித் தமிழ் மொழியைப் படிக்கச் செய்விக்கலாம்.

 பொது எழுத்து குறித்துத் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் கூறியதை எண்ணிப்பார்க்க வேண்டு்ம். அவர், பின்வருமாறு தெரிவிக்கிறார்:-

பொது எழுத்து, பொருந்துமா?

இந்திய மொழிகள் அனைத்துக்கும் ஒரே வரிவடிவம்(எழுத்து) அமைதல் வேண்டும் என்ற கருத்தைக் கூட்டரசுக் கல்வியமைச்சர் அடிக்கடி ஆங்காங்கு கூறி வருகின்றார். எல்லா  மொழிகளுக்கும் ஒரே எழுத்து என்பது முற்றிலும் பொருந்தாது. இத்திட்டமும் இந்தி மொழி ஒன்றையே நிலைக்கச் செய்யவும் ஏனைய மொழிகளை அழிக்கச் செய்யவும் உதவுவதற்கே கொண்டு வரப்படுகின்றது போலும். தேவநாகரி எழுத்துத் தமிழுக்கும் ஏனைய திராவிட மொழிகட்கும் சற்றும் பொருந்தாது. எ, ஒ, ற, ன, ழ போன்றவற்றைத் தேவநாகரியில் எழுதுதல் இயலாது. எழுத முயன்றாலும் ஒரு மொழிக்குரிய ஒலிகளை இன்னொரு மொழிக்குரிய எழுத்தால் எழுத  முயல்வது கூடுவிட்டுக் கூடு பாய்வதை ஒக்கும். ‘மொழியின் உடல்போன்றது எழுத்து’.  எழுத்தாம் உடல் அழிந்த பின்னர், மொழியாம் உயிர்வாழ்வது எங்ஙனம்? ஆகவே, எல்லா மொழிகளுக்கும் ஒரே எழுத்து என்னும் கொள்கையை இன்றே இன்னே தடுத்தல் வேண்டும். ஒரு மொழியை அழித்து அதன் மக்களைப் பிறமொழியாளர்க்கு அடிமையாக்குவதற்கு இதனினும் கொடிய திட்டம் கிடையாது. ஆகவே ஒரே எழுத்து என்ற கொள்கையை உடனே மடியச் செய்ய வேண்டும். . . . .(குறள்நெறி ஆனி18,1995 / 01.07.1964)

  பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் ஏன், தேவநாகரி பொது எழுத்தாகக் கூடாது என்கின்றாரோ அதே காரணங்கள், தமிழ் வரிவடிங்கள் பொது எழுத்தாக அமையக் கூடாது என்பதற்கும் பொருந்தும்.

  மத்திய அரசு இப்பொழுது தேவநாகரியை மறைந்து வரும் மொழிகள் மீதும் சிறுபான்மை மொழிகள் மீதும் திணித்து வருகின்றது. அதனை எதிர்க்க வேண்டிய நாம் தமிழ் வரிவடிவப் பொதுமையைத் தெரிவித்தால்,  ஒரே எழுத்துவடிவம் தேவை என்பதை ஏற்பதாகக்கூறித் தேவநாகரியைப் புகுத்தி நம் மொழியை அழிக்கவே உதவும்.

  திரு அமைதி ஆனந்தம் தொல்காப்பியர் காலத்தில் தமிழ், புலவர்  மொழியாக இருந்தது. 1300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுத்து வடிவம் பெற்றது என்ற தவறான தகவலைத் தெரிவித்தார். இது குறித்து நானும் செங்கைப் பொதுவன் அடிகளும் மறுத்தபின்பும் மாலை, கலந்துரையாடலில் இதே கருத்தைத் தெரிவித்தார். தமிழறிஞர்களால் கூட்டப் பெறாத தமிழ் தொடர்பான  கூட்டம் திசைமாறிப்போய்த் தீங்கிழைக்கும் என்பதற்கு இதுவே சான்றாகும்.

  என் கருத்துரையைத் தொடர்ந்து  பொறி மணி மு. மணிவண்ணன், அதனை வரிக்கு வரி வழி மொழிவதாகத்  தெரிவித்து, இது தேவையற்ற ஒன்று என்றும் ஒரு வேளை தேவை என அனைத்து மொழி யறிஞர்களும் முடிவெடுத்தால் அதற்கேற்ப தொழில்நுட்பர்கள் ஆவன செய்ய இயலும் என்றும் அவையோர் உவகையுறும் வண்ணம் தெரிவித்தார். முனைவர் மு.பொன்னவைக்கோவும் இது குறித்து கலந்துரையாடலே தேவையில்லை என்றார். இருப்பினும் மாலை, கலந்துரையாடலில் இப்பொருண்மை மீண்டும் இடம்பெற்றது பலருக்கு மன நிறைவின்மையை அளித்தது.

   இணையக்கல்விக்கழகம், உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம், ஒருங்குகுறி கூட்டாயம் ஆகியவை  எழுத்து வடிவங்கள் குறித்து ஆராய்வதற்கு ஏற்ற அமைப்புகளல்ல! எனவே, இனி எப்பொழுது்ம் இதுபோன்ற தலைப்புகள் குறித்து ஆராய்வதையும் முடிவெடுப்பதையும் நிறுத்த வேண்டும்.

  இது தொடர்பில் நெறியுரை தேவையெனில், தக்க தமிழறிஞர்களின் கருத்துகளை அறிய வேண்டுமே யன்றித் தாமே முடிவெடுக்கும் முயற்சிகளில் இறங்கக்கூடாது.

   tkramachanthiranias01

ஐந்தாம் அமர்வு : புதிய கருவிகளில் தமிழ் – சிக்கல்களும் தீர்வும்

 இதன் ஒருங்கிணைப்பாளரான திரு பத்ரி , தமிழன்பர்கள் உள்ளம் குளிரும் வகையில் எழுத்தொலி தமிழ் மரபிற்கேற்பவே அமைய வேண்டும் என்றார்.

 இப்பொருண்மையில் சிக்கல்களுக்கான தீர்வுகளைக் காண்பதற்குக் கணிணி வல்லுநர்களே தகுதியானவர்கள். எனினும் தமிழின் தேவையை அறிந்து அதற்கேற்ப அவர்கள் செயலாற்ற வேண்டும். எனவே, எவ்வகைக்  கைப்பேசியாக இருந்தாலும் கணிணி வகையாக இருந்தாலும் தமிழ்நாட்டில் விற்கப்படுவதாயின் தமிழ்ப்பயன்பாடு இருக்கும்  வகையில் உரிய உற்பத்திக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நான் தெரிவித்து இருந்தேன்.

 

அனைவரின் கருத்தும் இதற்கு மாறுபட்டதில்லை. எனவே, தமிழ்நாட்டில் விற்கப்படும் கணிணி தொடர்பான அனைத்திலும்  தமிழ் இருக்கும் வகையில் அரசு ஆவன செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி அரசிற்குத் தொடர்நடவடிக்கை எடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது.

நிறைவுரையாகப் பின்வரும் கருத்துகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  தமிழை வளரும் மன்பதைக்கேற்றவகையில் புத்துணர்ச்சியுடன் கொண்டு செல்லக் கணிணி வல்லுநர்கள் உழைத்துவருவது பாராட்டிற்கும் போற்றுதலுக்கும் உரியது. ஆனால், அதற்காக அவர்கள், தம் தமிழ்ப்பற்றையும் தமிழ்த் தொண்டையும் தமிழ்ப்புலமைக்கு ஈடாக எண்ணித் தமிழறிஞர்களைப்   புறக்கணிப்பது தவறாகும். இரு தரப்பாரும் இணைந்தால்தான் தமிழை வாழ  வைக்க முடியும். ஒருவரை ஒருவர் புறக்கணிப்பின் வீழ்ச்சி இரு தரப்பாருக்கு மட்டுமல்ல! தமிழுக்கும்தான்!

  பொதுவாகச் சொல்வதானால், இக்கருத்தரங்கம் பயனுள்ள கருத்தாடலுக்கு வழி வகுத்தது. தொழில்நுட்பர்களைவிடத் தமிழறிஞர்கள் வருகை மிகுதியாக இருந்ததாக முகநூலில் குறிப்பு இருந்ததாக ஒருவர் கூறினார். அவ்வாறாயின் தமிழறிஞர்கள் தொழில்நுட்பம்  குறித்து ஆர்வம் காட்டுவது வளர்ச்சிக்கான போக்கு என மகிழ வேண்டும். அதே நேரம், இக்கருத்தரங்கத்தை உரையரங்கமாக   அமைத்துள்ளார்கள். ஆனால், தமிழறிஞர்களை அழைக்க வில்லை.  ஆட்சிக்  குழு உறுப்பினர் என்ற வகையில்தான் தமிழ்வளர்ச்சி இயக்குநரும் பதவி வழி  அழைக்கப்பட்டுள்ளார். அவரும் வரவில்லை. தமிழ்ப்பல்கலைக்கழகத்துடன் கலந்துபேசி, உரிய தமிழறிஞர்களை வரவழைத்து அவர்களின் கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்நிகழ்ச்சியை ஒளிவுமறைவின்றி நடத்தி யிருக்க வேண்டும்.  பொருண்மை தொடர்பாக உள்ள குறிப்புகளை முன்னரே வருகையாளருக்குத் தெரிவித்திருப்பின் அவர்கள் அதற்கேற்ற ஆயத்தத்துடன் வந்திருக்க இயலும். இல்லையேல் ‘ஆமாம் சாமி’ போடும் நிலைதான் ஏற்படுகிறது.

  நிகழ்ச்சி நேரத்தை இறுதி வரை  தெரிவிக்காமல், இறுதியில் நிகழ்ச்சி நிரலைத் தெரிவிப்பதே,  பிறர் வருகையை விரும்பாமையைக் காட்டுகின்றது. அடையாள அட்டை கேட்டுக் கட்டுப்படுத்துவதும் புதிராக உள்ளது.   இருப்பினும் அடையாள அட்டையை வலியுறுத்தவில்லை. எதற்கு இந்த மூடு மந்திரம்?

  ஆராயப்படும் பொருண்மைகள் குறித்துத் தெளிவாக அனைவருக்கும் தெரிவிப்பின் இணைய வழிக் கருத்துரைகள் பெறலாமே! தமிழ்,தமிழ்நாட்டு மொழி மட்டும் அல்லவே! பிற நாடுகளில்  வாழும் தமிழறிஞர்களின், தமிழார்வலர்களின் கருத்துகள் தேவையில்லையா?

  எனவே, இக்கூட்டத்தை முதல்நிலைக்  கூட்டமாகக் கருதி  தமிழறிஞர்கள் பங்கேற்கும்  மற்றொரு கூட்டத்தை நிகழ்த்த வேண்டும்.  எக்காரணம் கொண்டும் வரி வடிவம் அல்லது எழுத்தமைப்பு குறித்து ஆராய்வதற்கு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலே தெரிவித்தபடி, தமிழறிஞர்கள் கொண்ட தமிழ் எழுத்துகளுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்புக்  குழு ஒன்றை அமைக்க வேண்டும். தமிழறிஞர்களும் கணிணி வல்லுநர்களும் இணைந்து எடுக்கும் முடிவையே தமிழக அரசு வழி, ஒருங்குகுறி கூட்டாயத்திற்கு அனுப்ப வேண்டும்.

 

கணிணிநுட்பரும் தமிழ்அறிஞரும் ஒருமித்துச் செயல்படட்டும்!

தமிழ்த்தேவைக்கேற்ப கணிணிப்பயன்பாடு அமையட்டும்!

நற்றமிழ் எளிதில் பரவுவதற்கு கணிணிநுட்பம் துணைநிற்கட்டும்!

Ilakkuvanar Thiruvalluvan