தனித்தமிழ் நூற்றாண்டில்

தமிழுக்குச் செய்யவேண்டுவன!

 

  உலகில் மொழிகள் பல பெருவாரியாக வழங்கி, ஆட்சி அதிகாரம் பெற்றுப், பேரரசுகளை அமைத்துப் பெருவரலாறு படைத்திருந்தாலும் இன்று அம்மொழிகள் மக்கள் வழக்கிழந்து, இருந்த இடம் தெரியாமல் போயுள்ளன.  அவற்றிடை நெடுங்காலத்திற்கு முன்பே தோன்றியிருந்தும் பல இயற்கைப் பேரிடர்கள் கடல்கோள்களால் இனப்பேரிழப்பை எதிர்கொண்டு தன் வளத்தையும் மக்கள் வழக்கையும் இழக்காது அறிவியல் வளர்ச்சிப் போக்கில் வளர்ந்தும் வாழ்ந்து கொண்டுமுள்ள மொழி தமிழ்மொழி.

  கழகம் அமைத்துத் தமிழ் வளர்த்தும், ஒரு மொழி வைத்து உலகாண்டும் இருந்த மன்னர்கள் ஆட்சிக்காலமெல்லாம்போய், அயலவர் பலரின் ஆட்சிகளையெல்லாம் கண்டு, இன அழிப்பு நேர்ந்து, ஆட்சி அதிகாரம் மொழித் தகுதியெல்லாம் இழந்த போதெல்லாம் ஒவ்வொரு முறையும் இந்த மொழியும் இனமும் தன்னைத்தானே மீட்டுருவாக்கம் செய்துகொண்டுவந்துள்ளன.  வேதங்கள் பரப்பப்பட்டு, இங்குள்ள மக்களின் இயற்கை நம்பிக்கைகளையும், மொழியையும் சிதைத்தபோது, தமிழுணர்வையும் இம்மண்ணுக்குள்ள இறையியல் உணர்வையும் பன்னிரு திருமுறைகள்போன்ற தமிழ்ச்சமய இலக்கியங்கள்வழிதான், அவற்றை மீட்டெடுத்து நிலைநாட்டினர்.

  இசுலாமியர், தெலுங்கர், மராட்டியர், களப்பிரர், கலிங்கர் என அயலவர் பலரின் படையெடுப்பிற்கும் ஆட்சிக்கும் உட்பட்டபோதும் தமிழகத்தில் அவ்வப்போது தோன்றி தமிழையும், தமிழின அடையாளத்தையும் தொடர்ந்து தக்கவைத்தது தமிழ் இலக்கியங்கள்தாம்.

தமிழ் மொழியைக் காத்த எழுத்துப் பதிவுகள்

  இஃது ஒரு புறமிருக்க, தமிழ்மொழியின் தொன்மையைப்போலவே தமிழ் எழுத்தின் தொன்மையும் நீண்ட வரலாறுடையது. தமிழ்நாட்டில் தொல்லியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டும் தொன்மைக்காலப் பதிவுகளில் பாறை ஓவியங்களோடும் பானையோட்டுக் கீறல்களோடும்  தமிழ் எழுத்துகள் உள்ளன.  மக்களின் பரவலான பயன்படுத்தத்தில் பானை ஓட்டில் தமிழ் எழுத்துகள் பதியப் பெற்றிருந்ததால் மக்களிடை எழுத்துப் பயன்பாடு பரவலாக இருந்திருக்கிறது.

  அதைத்தொடர்ந்து, கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகளைக் கற்றோரும் ஆவணப் பதிவோரும் பயன்படுத்தியுள்ளனர். மன்னராட்சிக் காலத்திலும் புலவர்கள் பயன்பாட்டிலும் மொழிப் பதிவிற்கும் இலக்கிய இலக்கணப் பதிவிற்கும் அரச ஆவணப் பதிவிற்கும் முகாமையான பயன்படுத்தமாக ஓலைச்சுவடிகளே திகழ்ந்துள்ளன. தமிழின் மரபு நூல்கள், கட்டடத் தொழில்நுட்ப நூல்களெல்லாம் ஓலைச்சுவடிகளாகவே இருந்துள்ளன. ஓலைச்சுவடிகள் வீடுதோறும் பரண்மீதும் காப்பறைகளிலும் பாதுகாக்கப்பட்டுள்ளன.  பழைய ஓலைகள் உளுத்து அழிவுறும்போது புதிய ஓலைகளில் படியெடுக்கும் வழக்கமும் நடைமுறையில் இருந்துள்ளது. அயலவர் ஆட்சியிலும் ஆரியர் சூழ்ச்சியிலும் ஓலைச்சுவடிகளை அழிப்பதன்வழி எத்தனையோ மொழிப் பதிவுகள் அழிந்துபோயுள்ளன.

  தமிழ் அக்காலத்திலிருந்தே ஓலைச்சுவடிகளிலும் பின் கல்வெட்டு, செப்பேடுகளிலும் பின்பு தாள் வந்த பிறகு கையெழுத்துப்படிகளிலும் அச்சு வந்த பிறகு அச்சிட்ட நூல்களிலும்  பயன்படுத்தங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.

  இக் காலத்தில் கணினியில் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டு அதன் பயன்பாட்டில் மின் அஞ்சல், இணையம், முகநூல், புலனம் (Whats-app), கீச்சகம் (twitter) கைப்பேசி, குறுஞ்செய்தி, பதிவுகோல் (Pen-drive), குறுவட்டு என அத்தனைப் பதிவுகளிலும் தமிழ் எழுத்துகள் இன்று பதிவாகிறது.

  எதையும் எழுத்துவழி பதிவு செய்யும் வழக்கம் தமிழரின் தொன்மை வழக்கமாக இருந்ததால், இந்த மொழிப் பதிவுகள் தமிழை மீட்டுக் காக்கும் ஒரு கூறாகவும் செயல்பட்டு வந்துள்ளது. இயற்கைப் பேரிடர்கள், அயலவர்களின் அழிம்பு ஆட்சிகள், சமற்கிருத வல்லாண்மை இவற்றின் திட்டமிட்ட மொழியழிப்புகளுக் கிடையில், அவற்றையெல்லாம் தாக்குப்பிடித்துக் கொண்டு, கல்வெட்டுக் காலத்திற்கு முன்பிருந்து கணினி காலம் கடந்தும், காலத்துக்குக் காலம் அவற்றிற்குத்தக தகவமைத்துக் கொண்டும் தன்னை வளப்படுத்திக் கொண்டும் பல கோடி மக்களின் மொழியாக  வாழ்ந்து கொண்டுள்ளது தமிழ்.

  இந்தத் தமிழை உலகக் கல்வி நிறுவனம் (UNESCO) அழியும் மொழிப்பட்டியலில் சேர்த்து அச்சுறுத்தியுள்ளது. இப்போது அதை மீள்பார்வை பார்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.  தமிழ்மொழியை அழிக்கும் கூறுகளின் செயற்பாடாகத் தமிழைக் கல்வி மொழியிலிருந்தும் ஆட்சி அதிகாரத்திலிருந்தும் வழிபாட்டு நிலையிலிருந்தும் வழக்குமன்ற மொழியினின்றும் விலக்கிய பின்னும்கூட, மக்களிடமிருந்து பிரிக்க முடியாத மொழியாகத் தமிழ், தமிழ் மக்களிடையே ஒட்டி உறவாடிக் கொண்டுள்ளது என்பதை நாம் நோக்க வேண்டும். எனினும்,  தமிழ்மொழிக்கு எந்த அழிவு ஏற்பட்டாலும் நினைத்த மாத்திரத்தில் உடனே மீட்டெடுத்துக் கொள்ளும் வகையில் ஊடகங்களிலும், கணினிப் பயன்பாட்டிலும் தமிழ்ப் பதிவுகள் நீக்கமற நிறைந்துள்ளன.

  தமிழ்மொழியின் நீண்ட கால வாழ்விற்குத் தமிழ்மொழியின் எழுத்துகளும் எழுத்துப்பதிவுகளின் பங்களிப்பும் ஒரு பெருங்காரணமாகத் திகழ்ந்து வருகிறது. எழுத்துகளைக் காலத்தேவைக்கேற்ப ஒவ்வொரு காலத்திலும் சீர்திருத்தப் புகுந்த வீரமாமுனிவர் முதல் பெரியார் வரையிலும் அத்தனைக்கும் தமிழ்மொழி இடங்கொடுத்திருந்தாலும், “எழுத்தெனப்படுவ அகரமுதல னகர இறுவாய் முப்பதென்ப” எனத் தொல்காப்பியரின் வரையறைக்குட்பட்டே இத்தனைக் காலமாற்றத்திற்கும் வளைந்துக் கொடுத்தும் வாழ்நாளை நிலைப்படுத்திக் கொண்டுள்ளது.

தமிழ்ச்சொற்கள்

  தமிழ் எழுத்துகளுக்கு இலக்கணத்திற்கு அப்பாற்பட்டு கல்வெட்டு முதல் கணினி வரையான ஒரு நெடிய வரலாறு இருப்பதுபோன்றே தமிழ்ச் சொற்களுக்கும் இலக்கணத்தைத் தாண்டி ஒரு நீள் தொல்லியல்சார் வரலாறு உண்டு.

  அதைப்போலவே ஒருமொழியில் உள்ள சொற்கள் அவை எந்தக் காலத்தில் எந்தச் சூழலில் தோன்றியிருக்கக்கூடும் என்று ஆய்ந்து அதன்வழியும் அந்தக்கால மாந்தனின் வாழ்முறை, வரலாறு, பண்பாடு இவற்றைக் கண்டுபிடிக்க முடியும் என்பது மொழிசார் தொல்லியல் (Linguistic Archeology) துறையினர் கூற்று. மொழியில் உள்ள சொற்களின் சொற்பிறப்பியலை ஆயும்போது இந்த ‘மொழிசார் தொல்லியல்’ எனும் புதிய ஆய்வுத்துறையும் தோன்றியது.

  21-ஆம் நூற்றாண்டின் தொடக்கமாக இருக்கும் இக்காலம்வரை நடைமுறையில் உருவான அனைத்துச் சொற்களையும் பதிவுசெய்து அகரமுதலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நடைமுறை வழக்குச் சொற்கள் புதிதாக உருவாக்கப்படும் சொற்கள், துறைதோறும் தோன்றும் கலைச்சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள், புதிதாகக் கண்டெடுக்கப்படும் தொல் இலக்கியங்கள், ஆவணங்கள் இவற்றின் சொற்கள் அனைத்தையும் பதிவு செய்து பல்வேறு அகரமுதலிகள் உருவாக்கப்படுகின்றன.

  அவ்வப்போது உலகில் தோன்றும் பொருளியல், அரசியல், அறிவியல் துறைச்சொற்கள், தரவல் தொழில் நுட்பச்சொற்கள், ஊடகங்களில் பயன்படுத்தப்படும் சொற்கள் இவற்றிற்கு  அப்போதைக்கப்போதே அவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தமிழில் உருவாக்கவும் பதிவு செய்யவும் இணையதளத்தில் இணைக்கவும் சொற்களை உருவாக்க அரசும் பொதுத் தமிழார்வ அமைப்புகளும் நடைமுறையில் செயற்படுகின்றன. இவற்றால் தமிழ்மொழி வளமும் வளர்ச்சியும் கூடிக் கொண்டுதான் வருகிறது.

இலக்கியம்

  தொன்மரபுள்ள தமிழைத் தொடர்ந்து காக்கவும் அதன் செழிப்பு மங்கும் காலத்திலெல்லாம் மீட்கவும் துணையிருந்ததும், இருப்பதும் இலக்கியங்களே ஆகும். கழக இலக்கியங்கள் மட்டுமல்லாமல் பெரும்பாவியங்கள், சிறுபாவியங்கள் சுவையான சிற்றிலக்கியங்கள், அறநெறி இலக்கியங்கள், சமய இலக்கியங்கள், புரட்சி இலக்கியங்கள், பகுத்தறிவு இலக்கியங்கள், உரைநடையிலுள்ள அனைத்துவகை இலக்கியங்களும் தமிழ் மொழியை மீட்கும் கூறுகளாகவே செயற்படுகின்றன.

இனிச் செய்ய வேண்டுவன

  இந்த மண்ணில் மாந்தனின் தொன்மையான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கின்றன. அந்த மாந்த இனம் தமிழினம் எனக் காணும் வரலாற்றுத் தொன்மைச் சான்றுகளும், எழுத்துப் பதிவுச் சான்றுகளும் உள்ளன. அதன் தொடர்ச்சியில் தமிழ் இலக்கியங்கள் கிடைக்கின்றன. வரலாறு முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. எனினும் வரலாற்றை மீட்டெடுக்க எழுத்து, சொல், மொழி, இலக்கியங்கள் ஒவ்வொன்றின் பதிவுகளும் துணைநிற்கின்றன.

  மொழியை மீட்பதன் வழிதான் இனத்தை மீட்க முடியும்;  இனம் முழு விடுதலையாகவும் அதிகாரம் பெற்று வாழ்ந்தால் மட்டுமே மொழி வளமாக வளர்ந்து தன் இனத்திற்குக் கடமையாற்றும். மொழியும் இனமும் ஒன்றையொன்று சார்ந்தது.

 தமிழினத்தை மீட்டுருவாக்கம் செய்துகொள்ள மொழியை விடவும் வலுவான கருவி உலகில் எதுவுமிருக்கமுடியாது. தமிழைக் கல்வி மொழியினின்றும், ஒரு மொழிப்பாடமாகக்கூட இல்லாத நிலையில், தமிழை அழிவின் விளிம்புநிலையில் நிறுத்தி யிருக்கிறோம். தமிழ் அழிவின் விளிம்புநிலையில் நிற்பதைக்கூட தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளவில்லை.

  ஒரு மொழி கருத்துப் பரிமாற்றக் கருவி என்ற அளவில் மட்டும் இருந்துவிடமுடியாது. அதன் முதன்மையான கடமை ஒன்று உண்டு. அறிவியல் தொழில் நுட்பம் அதிவிரைவாக வளர்ச்சிபெற்றுவரும் இக்காலத்தில் உலகச் செய்திகளை, தாய்மொழியாகக் கொண்ட தம் மக்களுக்கும், தம் மக்களின் கண்டுபிடிப்பு அறிவுச்செய்திகளை உலகிற்கும் அப்போதைக்கப்போதே உடனடியாகப் பரிமாற்றம் செய்யும் கடமை  அவர்களின் தாய்மொழிக்கே உண்டு. அண்மையில் தோன்றிய வளர்ச்சிபெறாத வளங்குறைந்த மொழிகளும் தத்தம் தகுதியை உயர்த்திக் கொண்டு கணினித் தொழில் நுட்பத்தில் நுழைகின்றன. தமிழ் ஏற்கெனவே கணினி மொழியாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. ஒருங்குகுறி(Unicode)யில் இணையத்தள, மின்னஞ்சல் பரிமாற்றங்கள், தமிழ் மென்பொருள் ஆக்கங்களைப் பெற்றுள்ளது.

  உலகெங்கும் பத்துக்கோடி மக்களாகப் பரவி வாழும் தமிழர்களின் தாய்மொழியை  அழியவிட்டு விடாமல் கல்விமொழி முதல் அனைத்துப் பயன்பாட்டுக்கும் தமிழைத் தகுதிமொழியாக ஆக்குவதே அனைத்துத் தமிழர்களின் முதற்கடமையாகும்.

 

முனைவர் மா. பூங்குன்றன்

பதிப்பாசிரியர்,

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககம்.

காலந்தோறும் தமிழ்
பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவை

பக்கங்கள்  720-724