(நான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ. 1 /2 தொடர்ச்சி)

நான் கண்ட வ. உ. சி. 

  வெள்ளையர் கப்பல்கள் துரத்துக்குடியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் கட்டணத்தை உயர்த்தித் தமிழ் நாட்டு வணிகத்திற்கே கேடு விளைவித்தன. இதனை யறிந்த பிள்ளை அவர்கள், அவர்களோடு போராடியும் நியாயத்திற்கு இணங்க மறுத்ததனால், அவர்களோடு போட்டியிட்டுத் தானே ஒரு கப்பலை ஓட்டித் தமிழ் நாட்டு வணிகத்திற்குத் தொண்டு செய்தார்கள். அவர் ஒரு தொழிலாளர் தலைவர். தொழிலாளர் போக்கைத் தொடர்ந்து போகும் தலைவராயில்லாமல் தொழிலாளரைத் தன் போக்கில் நடத்திச் செல்லும் தலைவராயிருந்தவர். அவர் ஒருமுறை சிறை சென்றபோது,  தூத்துக்குடி தொடர்வண்டி நிலையமும், அரசு கட்டடங்களும் தூள் தூளாக்கப்பட்டன. நெருப்புப் பொறிகளும் பறந்தன. அரசாங்கமே நடுங்கி அஞ்சுகின்ற அளவுக்கு அவர் ஒர் வீரமனிதராகக் கருதப்பட்டார்.

  அவருடைய தமிழ்ப் பற்றுத் தமிழ்நாட்டிலே நன்கு மதிக்கப் பெற்றிருக்கிறது. அதுதான் ‘திருக்குறள் வ.உ.சிதம்பரம் பிள்ளை பதிப்பு’ என்பதாகும். இது இன்னும் நம்மிடையே இருந்து கொண்டு அவர்களையும் அவர்களது தமிழ்ப்பற்றையும் நினைப்பூட்டி வருகிறது. திரு.பிள்ளை சிறையிலிருப்பார். வீட்டிலிருந்து செய்தி வரும். வருகின்ற செய்தி ‘குழந்தைக்குத் துணி யில்லை; உணவுக்கு வழியில்லை’ என்றிருக்கும். கண்கள் கலங்கும்; மனம் கலங்காது. இத்தகைய செய்திகள் பலவற்றை அரசாங்க அதிகாரிகள் அவரிடம் அனுப்பி வைப்பார்கள். காரணம் எந்த வகையிலானும் மன்னிப்பைப் பெற்று, விடுதலை பெற்று அவர் வெளியேற வேண்டும் என்பதுதான். இருமுறை ஆயுட்காலத் தண்டனை; அந்தமான் தீவுக்கு நாடு கடத்தும் தண்டனைகளைப் பெற்று, செக்கிழுத்து வாடி வதங்கி அடைத்துப்போன காதுகளுக்கு, இச்செய்திகள் எட்டும். மடிவதில் மனம் கொண்டாரேயன்றி மன்னிப்பில் மனம் கொள்ளவில்லை. ஒரு நாட்டுத் தலைவன் மனைவியையும் மக்களையும் காப்பாற்றத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாமை யினால், அவர்கள் முன்வந்து உதவி செய்யவில்லை. அவர் வாழ வகையின்றி வருந்தினார். ”இப்படிப்பட்ட மக்களுக்காகச் சிறை புகுந்து, செக்கிழுத்து மடிவதும், தன்னை நம்பியுள்ள மனைவி மக்களை இப்படிப்பட்டவர்களிடம் உயிரோடு ஒப்புவித்து, அவர்களையும் மடியச் செய்வதும் நியாயமாகுமா?” என்று சிறையில் பல ஆண்டுகள் எண்ணி எண்ணி வருந்தி நொந்தார்.

  கடைசியாக ஒரு நாள் நீதிமன்றம் அவருக்கு விடுதலை அளித்தது. மீண்டும் வழக்கறிஞர் தொழிலை நடத்தி னார்கள். திரு.பிள்ளை அவர்களோடு சேர்ந்து நான்கு கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நான் பேசும் சில ஊர்களுக்கும் அவர்கள் வந்திருக்கிறார்கள். தமிழுக்காக அவர்மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அதற்காகவே என்மீது அவருக்குப் பற்றுதல் உண்டு. தமிழ் ஒன்றே எங்களைப் பிணைத்தது. அரசியலிலே நாங்கள் இருவரும் மாறுபட்ட கொள்கை யுடையவர்கள்; மாறுபட்ட இயக்கங்களைச் சார்ந்தவர்கள். ஒருநாள் தட்டப்பாறையில் சந்தித்து “உங்களைப்போன்றவர்கள்  நீதிக் கட்சியை விட்டுக் காங்கிரசு கட்சிக்கு வந்து சேரவேண்டும்” எனக் கூறினார்கள். எனது இளமை முறுக்கினாலும், இரத்தத் திமிரினாலும் அவர்களைக் கடுமையாகத் தாக்கிக் கடுஞ் சொற்களைக் கூறிவிட்டேன். இன்றைக்கு நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆயின என்றாலும், இன்றைக்கும் அது என் உள்ளத்தைச் சுடுகின்றது. அச் சுடுசொல் :-.

 ”தங்கள் அறிவும், திறமையும், உழைப்பும், தமிழர் நலனுக்குப் பயன்படாமல், அறியாமையின் காரணமாகப் பிறர் நலனுக்குப் பயன்படுகிறது. அத் தவற்றை நானும் செய்யவேண்டுமா?” என்பதுதான். இதற்காக அவர்கள் எனக்களித்த தண்டனை, அவர்களின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று, பலமணி நேரம் நிலைமையை விளக்கி, எனது கருத்தை மாற்றி, அவர் தவறு செய்யவில்லை என மெய்ப்பித்ததுதான். பொதுவாக அவர் உள்ளத்தைத் திறந்து காட்டி, தம்முள்ளத்தே மறைத்து வைத்திருந்த பல செய்திகளையும் கூறிக் கண் கலங்கினார்கள். வருந்தினேன்; எனது வலக்கையால் அவரது கண்ணீரைத் துடைத்ததுதான் இன்றைக்கு ஆறுதலாக இருக்கிறது. அவர் கூறிய செய்திகளை வெளியிடும் காலம் இன்னும் வரவில்லை. அவரது மனைவியார் என் வயிற்றிற்கு ஒருவேளை உணவளித்தார்கள். அவரோ என் அறிவுக்குப் பல நாள் உணவை யளித்து மறைந்தார்கள். அவர் அளித்த உணவு ”எவரையும் வையாதே; வைவது தமிழனின் பண்பல்ல-பிறரை வைவதுதான் முன்னேறும் வழி என்று எண்ணாதே. எவன் முன்னேறினாலும் வைபவன் முன்னேற முடியாது என்பதை நம்பு, தவறு என்று கண்டால் தீமை யற்றச் சொற்களால் அச்சமற்றுக் கூறு” என்பதுதான். திரு. பிள்ளை அவர்களின் அறிவுரையும் அறவுரையுமாகிய இது எனக்குப் பயன்பட்டது. உங்களுக்கும் பயன்படுமா? முயலுங்கள். நான் சிலருடைய திருவடிகளை நினைத்து அடிக்கடி வணங்குவேன். திரு.பிள்ளை அவர்கள் திருவடிகளும் அதில் சேர்ந்ததுதான். காரணம் பொய் பேசுவதில்லை என்பதை வாழ்நாள் முழுவதும் ஒரு கொள்கையாகக் கொண்டு உண்மையையே பேசி வந்தார்கள். அதுமட்டு மல்ல, உயிர் போகும்வரை ஒழுக்கத்தைக் கையாண்டு வந்த ஒரே தலைவர் அவர் என்பதினாலுமேயாம்.

வாழ்க வ. உ. சி. புகழ்!

வாழ்க அவர் பிறந்த நாடு!

முத்தமிழ்க்காவலர் கி..பெ.விசுவநாதம்

எனது நண்பர்கள்