வெருளி நோய்கள் 1456 -1460: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1451 -1455: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1456 -1460
- நாற்பதாம் எண் வெருளி -Sarantaphobia
நாற்பதாம் எண் தொடர்பான அளவுகடந்த மிகுதியான பேரச்சம் நாற்பதாம் எண் வெருளி.
“நாற்பது வயதில் நாய்க்குணம்” என்ற பழமொழியாலும் எண் 40 மீது கவலைப்படுவோர் உள்ளனர்.
வெற்றி தோல்வியும் நலமின்மையும் யாவருக்கும் வரும். இருப்பினும் இராகுவின் தன்மை கொண்ட 40இற்கு நலக்குறைவும் தோல்வியும் பயனாக அமையும் என எண்ணி இந்த எண் மீது தேவையற்ற கவலையும் அச்சமும் கொள்வர்.
நான்காம் எண் வெருளி உள்ளவர்களுக்கு 40 ஆம் எண் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
Saranta என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் 40.
00
- நான்காம் எண் வெருளி-Quadraphobia / Tetraphobia
நான்கு அல்லது நான்கு தொடர்பானவற்றின்மீது ஏற்படும் தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் நான்காம் எண் வெருளி.
இதை முதலில் நாற்பால் வெருளி எனக் குறித்திருந்தேன். எண் 13 மீதான வெருளியைப் பதின்மூன்றாம் எண் வெருளி(Triskapidekaphobia/ Terdekaphobia) என்னும் முறையில் சொல் ஒப்புமை கருதி, இதையும் நான்காம் எண் வெருளி என இப்பொழுது குறித்துள்ளேன்.
சீனா, சப்பான், கொரியா, தைவான் முதலான கீழை ஆசிய நாடுகளில் 4 மீதான மூடநம்பிக்கை அச்சம் உள்ளது. சீன மொழியில் 4 என்பதற்கும் இறப்பு என்பதற்குமான பட எழுத்துகள் வெவ்வேறாக இருந்தாலும் சொற்கள் ஒரே ஒலியமைப்பை உடையன. எனவே, நான்கு என்பதை இறப்புடன் தொடர்புபடுத்தி அஞ்சுகின்றனர்.
முதன்மையான விடுமுறை நாள் அல்லது யாரும்நலக்குறைவுற்றால், 4 அல்லது 4 வரும்படியான 14, 24 போன்ற எண்களைப் பயன்படுத்தமாட்டார்கள். மேனாட்டார் 13 ஆம் எண்ணிற்கு அஞ்சுவதுபோல் இவர்கள் 4 ஆம் எண்ணிற்கும் 4 தொடர்பான எண்களுக்கும் அஞ்சுவர். இந்த எண்ணுள்ள அறையில் தங்க மாட்டார்கள். பல கட்டடங்களில் இந்த எண்களில் தளமோ, அறையோ, மேசையோ கிடையாமு. மாறாக 3அ, 13அ,24அ, என்பனபோன்றுதான் பயன்படுத்துவர்.
Quadra என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் நான்கு.
tetras என்னும் கிரேக்கச் சொல்லின் பொருளும் நான்கு. எனவே,
Tetraphobia என்றும் குறிப்பிடுவர்.
00
- நான்காம் நிலை வெருளி – Seiyuphobia
நான்காம் வகுப்பு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நான்காம் நிலை வெருளி.
நான்காம் எண் வெருளி உள்ளவர்களுக்கு நான்காம் நிலை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
தொடக்கப்பள்ளி எனப் பொருள் படும் seiyu என்னும் சப்பானிய சொல்லில் இருந்து உருவானது. இதற்குக் குரல் நடிகர்கள் மீது வெறுப்பு என்றும் பொருள் உண்டு.
00
- நிகழ் பதிவி வெருளி – Camcorderphobia
நிகழ் பதிவி பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நிகழ் பதிவி வெருளி.
காட்சிப்பொறி(video)யில் தொடர்ந்து முப்பது நிமையத்திற்கு மேல் பயன்படுத்தமுடியாது. வெப்பமாவதைத் தடுப்பதற்காகத் தானாகவே நின்று விடும். நிகழ் பதிவி என்பதில் நேரக் கட்டுப்பாடு இல்லை. அதன் மின்கலன் அல்லது நினைவகம் செயற்படும் வரை பதியலாம்.
kamயra என்னும் பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து camera வந்தது. காணுக என்னும் பொருளுடைய videō என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து video வந்தது. ஆனால், kamukōdā என்னும் சப்பானியச் சொல்லில் இருந்து இரவலாக camcorder வந்தது என்பர்.
camera, recorder என்பனவற்றின் இணைப்பே Camcorder.
00
- நிகழ்மை வெருளி – Pithanophobia
நிகழ் தகவு/நிகழ் வாய்ப்பு ஆகிய நிகழ்மை (probability) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நிகழ்மை வெருளி.
Pithano என்னும் புத்திய(நவீன)கிரேக்கச் சொல்லிற்குச் “சாத்தியமான”, “நிகழக்கூடிய” அல்லது “ஏற்படக்கூடிய” என்னும் பொருள்கள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply