வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்!

மொழியரசியல் பற்றிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகள்

 ந்தியாவையே உலுக்கிய போராட்டங்கள் எனும் வரிசையில் யாராலும் தவிர்க்க முடியாதது 1965-இல் தமிழர்கள் நடத்திய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்!

     நானூற்றுக்கும் மேற்பட்டோர் உயிர் விட்டு, இரண்டாயிரம் பேர் காயமடைந்து, தமிழ்நாடே பற்றியெரிந்து நடத்திய போராட்டம் அது. அதனால்தான் அதை ‘மொழிப்போர்’ என்றே வருணிக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

     ஆனால் இன்றோ மொழித் திணிப்புபற்றிப் பேசினாலே ஏதோ எதிரிகளைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள் இதே தமிழ்நாட்டு மக்கள். என்னதான் வலைத்தளங்களில் (social networking sites) ‘தமிழ்!’ ‘தமிழர்!’ ‘இனம்!’ ‘மானம்’ எனவெல்லாம் நம் மக்கள் மார்தட்டினாலும் தனிப்படப் பேசிப் பார்த்தால் அத்தனை பேரும் தங்கள் பிள்ளைகளை இந்திக் கல்வியில் சேர்த்து விட்டவர்களாகவே இருக்கிறார்கள்.

     இதற்கு நடைமுறை சார்ந்த சில காரணங்களை அவர்கள் காட்டினாலும் அடிப்படையில் அவர்கள் முன்வைக்கும் முதன்மையான கருத்து, “இந்தி படிப்பதாலெல்லாம் தமிழ் அழிந்து விடாது. அது திராவிட அரசியலாளர்கள் கட்டி விட்ட கதை” என்பதுதான்.

இது சரியா?

பிறமொழித் திணிப்பால் தமிழுக்கோ பிற இந்தியத் தேசிய மொழிகளுக்கோ எந்தப் பாதிப்பும் இல்லையா?

வெறுமே அரசியல்வாதிகள் சிலரின் சூழ்ச்சிகளால்தாம் இத்தனை காலமும் இந்தியை எதிர்த்து வருகிறோமா நாம்?

     இந்தியோடு சமற்கிருதமும் சேர்த்து முன் எப்பொழுதையும் விடத் தீவிரமாகத் திணிக்கப்படும் இன்றைய சூழலில் இப்படிப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் ஆதாரங்களுடன் விடை காண இதோ ஒரு முயற்சி!

அரசியல் சூழ்ச்சியா பொதுமக்கள் எழுச்சியா?

     இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் மனநிலைக்குக் காரணமே திராவிட அரசியலாளர்கள்தாம் என்பவர்கள் அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் என்னவெனில், உலகிலேயே மிகக் கொடூரமான இனப்படுகொலையில் முடித்து வைக்கப்பட்டதே ஈழ விடுதலைப் போராட்டம்? அதுவும் ஒரு மொழித் திணிப்புக்கு எதிராகத் தொடங்கியதே என்பதுதான்!

            “இனி இந்தி மட்டுமே இந்நாட்டின் அலுவல் மொழி என்ற சட்டம் 1965 முதல் நடைமுறைக்கு வரும்” என்ற நிலை இந்திய ஒன்றியத்தில் ஏற்பட்டபொழுது வெடித்ததுதான் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம். அதே போல “இனிச் சிங்களம் மட்டுமே இந்நாட்டின் அரசு மொழி” என்ற சட்டத்தை இலங்கை அரசு 1956-இல் கொண்டு வந்தபொழுதுதான் இலங்கையில் தமிழர் போராட்டம் முளை விட்டது. அறவழியில் தொடங்கிய அந்தப் போராட்டம்தான் பின்னர் அங்கே தமிழர் மீதான தொடர் இனவெறித் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் போராட்டமாக மாறியது என்பது வரலாறு.

      தமிழ்நாட்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வு திராவிட அரசியலாளர்களின் சூழ்ச்சி என்றால் ஈழத் தமிழர்களின் சிங்களத் திணிப்பு எதிர்ப்புணர்வு யாருடைய சூழ்ச்சி? பெரியார் என்ன அங்கேயுமா போய்ப் பேரணி நடத்தினார்?

     ஆகத், தங்கள் மொழிக்கு மாற்றாக இன்னொரு மொழியைத் திணித்தாலே பிடரி சிலிர்த்துக் கிளம்புவது உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் இயல்பான உணர்ச்சியாகவே இருக்கிறது என்பதுதான் இதிலிருந்து தெளிவாகிறது.

     மேலும் விடுதலைக்கு முன்பு நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள்தாம் பெரியார் தலைமையிலான தன்மான இயக்கத்தால் (self-respect movement) முன்னெடுக்கப்பட்டனவே தவிர விடுதலைக்குப் பின்பு நடந்ததும் மொழிப்போர் எனக் குறிப்பிடப்படும் வரலாற்றின் முதன்மைப் போராட்டமுமான 1965ஆம் ஆண்டுப் போராட்டம் மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டமாகத்தான் அறியப்படுகிறது.

     இது தி.மு.க-வினர் நடத்திய போராட்டம் எனப் பரவலாக ஒரு குற்றச்சாட்டு அன்றும் இன்றும் உண்டு. இந்தித் திணிப்பு எதிர்ப்பே அரசியல் சூழ்ச்சிதான் எனும் கருத்தும் மறைமுகமாகத் தி.மு.க-வைத் தாக்குவதே.

     ஆனால் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியதாக ‘இந்தி எதிர்ப்புச் சங்கம்’ என்ற மாணவர் அமைப்பின் பெயர்தான் காணப்படுகிறதே தவிர எந்தக் கட்சியின் பெயரோ தலைவரின் பெயரோ அங்கே இல்லை.

     அது மட்டுமில்லை, போராட்டம் நடந்து கொண்டிருந்தபொழுது இடையில் பிப்பிரவரி 6, 1965 அன்று பேரறிஞர் அண்ணா மாணவர் சங்கத்தினரை அழைத்து அமைதிப் பேச்சு நடத்தினார். போராட்டம் மிகவும் தீவிரமடைவதால் அதைக் கைவிடுமாறு கோரினார். ஆனால் அதையும் மீறி அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்கள்.

      தி.மு.க., நடத்திய போராட்டமாக இருந்தால் அதன் தலைவர் அண்ணாவே போராட்டத்தை நிறுத்தியிருக்கலாமே! எதற்காக மாணவர் சங்கத்தினரை அழைத்துப் பேச வேண்டும்? அவரே நிறுத்தச் சொன்ன பிறகும் மாணவர்கள் ஏன் தொடர்ந்து போராட வேண்டும்?

     ஆக, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டு மொழிப்போர் முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டு மாணவப் பேராற்றலால் நடைபெற்றதுதான் என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

     இவை அனைத்தையும் மறைத்து விட்டு ‘மொழியரசியல் செய்பவர்கள்’ என எண்பது ஆண்டுக் காலமாகத் தமிழர்கள் மீது முத்திரை குத்தி வைத்திருக்கிறார்கள். உண்மையில் இந்தி எனும் ஒற்றை மொழியை வளர்க்க எப்படிப்பட்ட தகிடுதத்தங்களிலெல்லாம் இந்நாடு ஈடுபட்டிருக்கிறது, ஈடுபட்டு வருகிறது என்பது வெளியில் வந்தால் மொழியரசியல் செய்வது யார் எனப் புரியும்.

இந்தித் திணிப்பு மேலாதிக்கம் இந்திய மொழியரசியலின் இழிவான முகம்!

     இம்மண்ணிலுள்ள அத்தனை மொழியினரும் போராடியதால் கிடைத்ததுதான் இந்திய விடுதலை. ஆனால் இந்நாடு இம்மண்ணின் மொழிகளில் இந்திக்கு மட்டும் (ஆங்கிலத்துடன் சேர்த்து) ‘நடுவணரசின் அலுவல் மொழி’ எனும் மகுடம் சூட்டி அழகு பார்க்கிறது.

     இஃது இயல்பாகவே மற்ற மொழிகளை விட இந்தியை உயர்த்திக் காட்டுகிறது. அந்த மொழியை அறிந்தவர்களுக்கு அதிகாரம் எளிதில் கிடைக்க வகை செய்கிறது.

     எடுத்துக்காட்டாக, மத்திய அரசின் அலுவல் நடைமுறைகள் இந்தி – ஆங்கிலம் இரண்டில் மட்டுமே இருப்பதால் மற்ற மாநிலத்தவர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட இவ்விரண்டில் ஒரு மொழி கட்டாயம் தெரிந்தாக வேண்டும். இந்திக்காரர்களுக்கோ தங்கள் தாய்மொழி மட்டும் தெரிந்தாலே போதும். இப்படிப் பல வசதிகள், வாய்ப்புகள் இதில் உள்ளன.

     மக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய அரசு இப்படிக் குறிப்பிட்ட ஒரு மொழிக்கும், அதைப் பேசுவோருக்கும் மட்டும் உயர்வு தருவது முற்றிலும் வெளிப்படையான முறைமைப்பிழை (injustice)!

     சரியாகச் சொன்னால், இதற்குப் பெயர் மொழித் திணிப்பு இல்லை. மொழி மேலாதிக்கம் (Language Imperialism)!

            “ஆதிக்கத்தில் இருக்கிற/அடக்குமுறை செலுத்துகிற மொழிக்கும் அதைப் பேசுவோருக்கும் அதிகாரத்தை வழங்குவதும் அதிகாரத்தை ஏற்படுத்தித் தருவதுமே மொழி மேலாதிக்கம்; இது மொழிப் பாகுபாட்டின் (Linguistic Discrimination) ஒரு பகுதி – இதுதான் மொழி மேலாதிக்கம் என்பதற்கு உலகம் தந்துள்ள வரையறை. இந்திக்கு அலுவல் மொழித் தகுதி அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் இங்கு நடப்பது அதுதான்.

     சரி, உலக அறங்கள் கிடக்கட்டும். இந்தியச் சட்டங்களின்படியே பார்ப்போம்!

            மொழிப்போருக்குப் பின்பான சட்டத்திருத்தத்தின்படி நாடாளுமன்றம், மத்திய அரசு, அதன் அமைச்சகங்கள், துறைகள், மத்திய அரசால் நடத்தப்படும் கழகங்கள், நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவை தங்கள் தீர்மானங்கள், பொது உத்தரவுகள், நெறிமுறைகள், அறிவிக்கைகள், அறிக்கைகள், ஊடகத் தொடர்பாடல்களுக்கான வெளியீடுகள், அலுவல் சார்ந்த ஏடுகள் ஆகிய எல்லாவற்றையும் இந்தி – ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் வெளியிட வேண்டும் என்கிறது சட்டம். ஆனால் இங்கு அப்படித்தான் நடக்கிறதா என்பதை நாம் மனச்சான்றுடன் எண்ணிப் பார்க்க வேண்டும்!

     மத்திய அரசின் சுற்றறிக்கைகள், உத்தரவுகள், அலுவல் குறிப்புகள் போன்றவற்றில் தொடங்கி அரசு அதிகாரிகளின் வலைத்தளப் பயன்பாடு, ஊதியச்சீட்டு முதலான அன்றாட அலுவல் நடைமுறைகள் வரை அனைத்தும் ஆங்கிலம் தவிர்த்து இந்தியில்தான் இருக்கின்றன.

     நடுவணரசாலும் அதன் துறைகளாலும் நடத்தப்படும் மாநாடுகள், அலுவல் கூட்டங்கள், செய்தியாளர் சந்திப்புகள், கொண்டாட்டங்கள், விழாக்கள் போன்றவை பெரும்பாலும் இந்தியில்தான் நடக்கின்றன.

     இந்தி பேசாத மாநிலங்களுடனான மத்திய அரசின் தொடர்பாடல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் அதுவும் இப்பொழுது மதிக்கப்படுவதில்லை.

     இவையெல்லாம் முழுக்க முழுக்க வெளிப்படையான சட்டமீறல்கள்! தேசியக் கல்விக் கொள்கை எனும் பெயரில் தற்பொழுதைய இந்திய அரசு நடைமுறைப்படுத்தியிருக்கும் ‘மும்மொழிக் கொள்கை’ இதன் உச்சம்!

            “இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும்” என்று 1959-இல் தலைமையமைச்சர் நேரு வாக்குறுதி கொடுத்ததே ‘இந்தி பேசாத இந்தியக் குடிமக்கள் அம்மொழியைக் கற்றுக் கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்’ என்ற பொருளில்தான். மோதி அரசு மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதன் மூலம் நேருவின் வாக்குறுதியை மட்டுமில்லை அதே வாக்குறுதியை உறுதிப்படுத்தி 1965-இல் அன்றைய தலைமையமைச்சர் இலால் பகதூர் (சாத்திரி) அளித்த உறுதிமொழி, இந்த இரண்டு வாக்குறுதிகளையும் நிலைநிறுத்த 1967-இல் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம் என்று அத்தனையையும் கிழித்து வீசி விட்டது.

     அடுத்து வருவது இதை விடக் கீழ்த்தரமானது!

     இந்திதான் இம்மண்ணின் பெரும்பான்மை மக்களுடைய மொழி எனப் பல காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கைகள் அதற்கு ஆதாரமாகக் காட்டப்படுகின்றன. ஆனால் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் காட்டும் எண்ணிக்கைகளே ஒரு புதுவையான பொய் என்பதுதான் அதிர்ச்சியூட்டும் உண்மை!

     இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மொழிகளின் வலிமையைக் கணக்கிடும் முறையே கோளாறாக இருக்கிறது. இங்கு ஒவ்வொரு மொழிக்காரர்களின் எண்ணிக்கையையும் தனித்தனியே பிரித்து வைப்பதில்லை. மொழி – தாய்மொழி என இருவேறு அளவுகோல்களைக் கொண்டு கணக்கிட்டு வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்ட பல கோடிப் பேரை அதே பகுதியைச் சேர்ந்த பெரிய மொழியின் கீழ்ச் சேர்த்துக் கணக்கில் காட்டுகிறார்கள்.

     இவ்வகையில் இந்தியாவிலேயே மிக அதிகமான மொழிகளைக் கொண்ட பெரிய மொழித்தொகுதி இந்தி. இதன் கீழ் வரும் மேலை இந்தி (உருது சேர்க்காமல்) மொழிகள், கீழை இந்தி மொழிகள், மைதிலி மொழியல்லாத பீகாரி மொழிகள் (போசுபுரி உட்பட), பகாரி மொழிகள், இராசத்தானிய மொழிகள் என இந்தி உட்பட 49 மொழிக்காரர்களை இந்தி மொழிக்காரர்களாகவே மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சேர்த்துக் காட்டுகிறது அரசு.

     எடுத்துக்காட்டாக அண்மையில் வெளியான 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் பார்த்தால் அதில் இந்தி எனும் தலைப்பில் அம்மொழியைப் பேசுவோர் எண்ணிக்கை 52.83 கோடி என இருக்கும்; விக்கிப்பீடியா, பிரிட்டானிகா என உலகக் கலைக்களஞ்சியங்கள் அனைத்திலும் இந்த எண்ணிக்கைதான் காணப்படும்; கூகுள் கூட இதே எண்ணிக்கையை ஒரு காரணமாகச் சுட்டிக்காட்டித்தான் 2014ஆம் ஆண்டு இந்தியைத் தனது விளம்பரச் சேவை மொழிகளில் (google ad sense) ஒன்றாகச் சேர்த்துக் கொண்டது; ஆனால் அதே மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இந்தி எனும் தலைப்பின் உட்பிரிவைப் பார்த்தால் 49 மொழிகளில் இந்தி எனும் பெயருக்கு எதிரில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கை வெறும் 32.22 கோடி என்றுதான் இருக்கும்! ஆக மொத்தம் 20.61 கோடிப் பேரை இவர்கள் கூடுதலாகக் கணக்குக் காட்டுகிறார்கள்!

     இதை விடக் கீழ்த்தரமாக ஒரு நாடு மொழி வளர்க்க முடியுமா எனத் தெரியவில்லை. எல்லா மொழிகளும் இங்கே இப்படித்தான் கணக்கிடப்படுகின்றன என்றாலும் இதனால் முறைகேடாக ஆதாயமடைவது இந்திதான்.

     இவை மட்டுமல்ல, மற்ற மொழிகளை விட இந்திக்குப் பன்மடங்கு நிதி ஒதுக்குவது, தென்பாரத இந்திப் பரப்புரை அவை (Dakshin Bharath Hindi Prachar Sabha) எனும் பெயரில் இந்தியை வளர்க்க மட்டும் தனிக்கவனம் செலுத்துவது, வெளிநாடுகளிலும் ஐ.நா., போன்ற பன்னாட்டு அவைகளிலும் இந்தியை மட்டும் இந்தியாவின் முகமாக முன்னிறுத்துவது என இந்திக்கு இங்கு தரப்படும் அத்தனை சலுகைகளும் இந்தியச் சட்டப்படியும் உலக முறைமைகளின்படியும் மிகப் பெரிய தவறுகள்!

     சரி, இதனாலெல்லாம் நமக்கென்ன பாதிப்பு எனக் கேட்டால் இதோ அதைப் பற்றிப் பார்ப்போம் அடுத்து.

இந்திசமற்கிருதத் திணிப்பு பிற இந்திய மொழிகளைப் பாதிக்குமா?

            “பெரும்பாலும் மொழிகள் அழியக் காரணமாக இருப்பது அம்மொழிகளைப் பேசும் அடுத்தடுத்த தலைமுறையினர் இரண்டு மொழி பேசுபவர்களாக மாறி அதன் தொடர்ச்சியாகத் தங்கள் மொழியில் புலமை (proficiency) இழப்பதே என்கிறது உலகின் மாபெரும் அறிவுக்களஞ்சியமான பிரிட்டானிகா!

     எப்பொழுது ஒரு குமுகம் வீட்டில் ஒரு மொழி, வெளியில் ஒரு மொழி எனப் பேசத் தொடங்குகிறதோ அப்பொழுது அஃது இரண்டு மொழி பேசும் குமுகமாக மாறுகிறது என எடுத்துக் கொள்ளலாம்.

     இந்தியாவில் நடக்கும் இந்தித் திணிப்பு பல மாநிலங்களில் இப்படி ஒரு நிலைமையை ஏற்கெனவே ஏற்படுத்தி விட்டது என்பதுதான் திடுக்கிட வைக்கும் செய்தி!

     கோரா.காம் எனும் புகழ் பெற்ற வினா-விடைத் தளத்தில் தமிழர்களின் இந்திப் புறக்கணிப்புபற்றிய ஒரு கேள்விக்கு மன்னத்து சோகர் எனும் பஞ்சாபியர் அளித்த விடை இதற்கு நல்ல சான்று.

            “நான் பஞ்சாபியன்தான். ஆனால் எனக்குத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியின் மீது வைத்துள்ள பற்று பிடித்திருக்கிறது. பஞ்சாபியர்கள் இப்படி இல்லை. மாநகரங்களில் வாழும் பஞ்சாபியர்கள் தங்கள் குழந்தைகளிடம் இந்தியில்தான் பெரிதும் பேசுகிறார்கள். பஞ்சாபியர்களிடம் தங்கள் தாய்மொழி குறித்த பெருமித உணர்வு இல்லை. இதற்கு ஒரே காரணம் எங்கள் மாநிலத்தில் இந்தி நுழைவதை நாங்கள் தடுக்கத் தவறியதுதான். இதனால் இன்று பஞ்சாபி மொழி அழியும் நிலையில் இருக்கிறது” என்கிறார் அவர்.

     இது வெறும் எடுத்துக்காட்டுதான், இது போல் பதிவுகள் அண்மை நாட்களாக இணைய ஊடகங்களில் அடிக்கடி வருவதை நாம் பார்க்கிறோம். அவை அனைத்திலும் பொதுவாக இருக்கும் ஒரு கருத்து “இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை ஏற்கத் தொடங்கி விட்ட பிறகு அம்மக்களின் இயல்பான பேச்சு மொழியாகவே இந்தி மாறி விடுகிறது; தாய்மொழி அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது” என்பதுதான்.

     முதலில் உத்திரப் பிரதேசம், பீகார், இராசத்தானம் போன்ற இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்ட மாநிலங்களில்தாம் இந்தக் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. ஆனால் அண்மைக்காலமாகப் பஞ்சாப்பு, கருநாடகம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் மொழி இந்தியால் அழிகிறது எனக் குற்றம் சாட்டத் தொடங்கியிருப்பதைப் பார்க்கும்பொழுது மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்ட எல்லா மாநிலங்களிலும் அம்மாநில மொழிகளை இந்தி விழுங்கத் தொடங்கியிருப்பதை உணர முடிகிறது.

     எனவே “அஃது எப்படி இந்தி கற்றுக் கொண்டால் மற்ற மொழிகள் அழியும்?” எனக் கேட்பவர்கள் இன்று நாட்டில் நடப்பதே அதுதான் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

     இங்கு மட்டுமில்லை, உலகில் எங்கெல்லாம் ஒரு மொழியை (அல்லது ஒரு சில மொழிகளை) மொத்த நாடும் கற்றுக் கொள்ள அரசே கட்டாயப்படுத்துகிறதோ அங்கெல்லாம் ஏற்கெனவே இருந்த அம்மண்ணின் மொழிகள் அழியும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இப்படி,

     மாண்டரின் சீனமொழித் திணிப்பால் மண்டலச் சீன மொழி வகைகள், திபெத்திய மொழிகள் அழிந்தன.

     சப்பானிய மொழித் திணிப்பால் ஐனு, இரியூகியூவன் ஆகிய மொழிகள் அழிந்தன.

     எசுப்பானிய (Spanish) மொழி திணிக்கப்பட்டதால் கெச்சுவா மொழி, இடையமெரிக்க மொழிகள் அழிந்தன.

     மலாய் மொழித் திணிப்பினால் மலாயோ-பாலினேசிய மொழிகள் அழிந்தன.

     பிலிப்பினோ/தாகலாக்கு மொழித் திணிப்புக் காரணமாக பிலிப்பைன் மொழிகள் அழிந்தன. 

     இவை வெறும் எடுத்துக்காட்டுகள் மட்டுமே! முழுப் பட்டியல் மிகவும் நீளமானது.

     ஆங்கிலம் கற்பதால் மட்டும் இந்தப் பாதிப்பு ஏற்படாதா எனக் கேட்கலாம். ஆங்கிலத் திணிப்பால் அழிந்த மொழிகளின் பட்டியலும் மிகப் பெரியதே! ஆனால் இந்தியாவில் அப்படி ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

     தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், விடுதலைக்கு முன்பான நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தே இங்கு ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஏறக்குறைய இதே காலக்கட்டத்தில்தான் மற்ற மாநிலங்கள் இந்தி பயிலத் துவங்கின. ஆனால் இன்று அம்மாநிலங்களில் மக்கள் வீட்டிலும் வெளியிலும் இந்தி தங்கள் பேச்சு மொழியாகி விட்டதாகக் கவலைப்படும் இதே நேரத்தில் தமிழ்நாட்டில் அப்படி ஆங்கிலம் எந்த இடத்திலும் கோலோச்சுவதாகத் தெரியவில்லை.

     தமிழர்கள் நாம் எவ்வளவுதான் ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் வீட்டிலோ, பணியிடத்திலோ, கடைத்தெரு போன்ற வெளியிடங்களிலோ யாரிடமும் ஆங்கிலத்தில் பேசுவதில்லை.

      அதற்காக ஆங்கிலத்தால் இங்கு எந்தப் பாதிப்புமே இல்லை எனச் சொல்லி விட முடியாதுதான். தில்லி போன்ற ஓரிரு மாநகரங்களில் அலுவலகப் பேச்சு மொழியாக ஆங்கிலம் ஆகி விட்டது உண்மையே. ஆனால் பல்வேறு மொழிக்காரர்கள் கலந்து பழகும் பணிச்சூழல் காரணமாக, அலுவலகங்களில் மட்டும் அவர்கள் அப்படிப் பேசுவதாகத்தான் தகவல்கள் காணப்படுகின்றனவே தவிர மற்ற வெளியிடங்களிலும் வீட்டிலும் அவர்கள் வழக்கம் போல் இந்தியிலும் தாய்மொழியிலும்தாம் பேசுகிறார்கள்.

     அதே போல், ஆங்கிலத்தின் தாக்கம் எல்லா இந்திய மொழிகளிலும் அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அதைக் கண்டிக்கும் கல்வியாளர்களே கூட ஆங்கில வழிக் கல்வியைத்தான் அதற்குக் காரணமாகச் சுட்டுகிறார்களே தவிர ஆங்கிலம் கற்பதே தவறு எனச் சொல்லவில்லை.

     மொத்தத்தில், இந்தி நுழையும் எல்லா மாநிலங்களிலும் தாய்மொழியின் இடத்தை அது கைப்பற்றி வருவது போல் எந்த மொழியுடைய இடத்தையும் ஆங்கிலம் இங்கே கைப்பற்றியதாகத் தகவல்கள் இல்லை. எனவே இந்தியாவைப் பொறுத்த வரை ஆங்கிலத்தால் எந்தப் பாதிப்பும் பெரிதாக இல்லை என்பதுதான் கண்கூடான உண்மை.

     அஃது ஏன் ஆங்கிலத்தால் ஏற்படாத சீரழிவு இந்தியால் மட்டும் ஏற்படுகிறது?

     உலகம் முழுதும் எல்லோரும் எத்தனையோ மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்கள். அதனால் எந்த மொழியும் அழிவதில்லை. ஆனால் ஒரு குமுகம் தன் தாய்மொழி தவிர இன்னொரு மொழியைத் தன் கல்விமுறையில் சேர்த்து அனைவருக்கும் அதைக் கற்பிக்கத் துவங்கினால் அப்பொழுதே அந்தக் குமுகம் அந்த இன்னொரு மொழியைச் சேர்ந்தவர்களும் தங்கள் மண்ணில் வந்து வாழ அடித்தளம் அமைத்துக் கொடுத்து விடுகிறது. இதைத்தான் ஒரு மொழியின் நுழைவு என நாம் குறிப்பிடுகிறோம்.

     ஆங்கிலத்துக்கும் இது பொருந்தும் என்றாலும் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வதால் ஆங்கிலேயர்கள் யாரும் இங்கு வாழ வரப் போவதில்லை. அதுவே இந்தியைக் கல்விமுறையில் சேர்த்துக் கொண்டால் இந்திக்காரர்கள் இங்கு குடியேறுகிறார்கள். ஒருபுறம் நாம் இந்திக்காரர்களுக்கும் கதவு திறந்து விடுகிறோம்; மறுபுறம் நாமும் இந்தியைக் கற்றுக் கொள்கிறோம். இப்படி ஒரு குமுகத்தில் அனைவருமே வேறொரு மொழியைச் சார்ந்தவர்களாக இருந்தால் அதன் பின் அந்த மண்ணின் மொழி எத்தனை காலத்துக்குத் தன்னை அங்கே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை நாம் கொஞ்சமாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

     இதனால்தான் இந்தியாவைப் பொறுத்த வரை ஆங்கிலத்தை விட இந்தி மிகவும் தீங்கிழைக்கும் மொழியாக இருக்கிறது. இக்காரணத்தால்தான் நாடு முழுக்க இந்தி – ஆங்கிலம் இரண்டும் கற்பிக்கப்பட்டாலும் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளும் இதே நாட்டில் இந்திக்கு எதிராக மட்டும் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. ஆம்! வரலாறு நெடுகவும் தமிழ்நாட்டில் மட்டும் ஏற்றப்பட்டிருந்த இந்திக்கு எதிரான போர்க்கொடி இன்றைக்குப் பல மாநிலங்களிலும் பட்டொளி வீசிப் பறக்கிறது!

     கருநாடகம் இந்தித் திணிப்புக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடுகிறது. அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் “இந்தி நாள் கொண்டாடச்சொல்வது மொழியியல் அட்டூழியம்” என வலைத்தளத்தில் சாடுகிறார்.

     மத்திய அமைச்சர் தனக்கு இந்தியில் எழுதிய கடிதத்தைக் காணும் ஒடிசா நாடாளுமன்ற உறுப்பினர் “எதற்காக மத்திய அமைச்சர்கள் இந்தி பேசாத குடிமக்களின் மீது இந்தியைத் திணிக்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்புவதோடு ஒடியாவில் மறுமொழிக் கடிதம் எழுதித் தன் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்.

            “மொத்த இந்தியாவுக்குமான மொழியாக இந்தி விளங்க வேண்டும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்துசா வலைத்தளத்தில் வெளியிடும் கருத்தைக் கண்டித்து “இஃது இந்தி பேசாத மக்களுக்கு விடுக்கப்படும் போருக்கான அறைகூவல்” எனக் கொந்தளிக்கிறார் கேரள முதல்வர் பினராயி விசயன்.

     இந்தியாவின் அழிந்து வரும் மொழிகள்பற்றிய புகழ் பெற்ற ஆய்வாளர் திரு.கணேசு தேவி அவர்கள் “தற்பொழுதைய பாரதிய சனதா அரசு மேற்கொண்டு வரும் இந்தித் திணிப்பு இந்தியாவின் பன்முகத்தன்மை மீதான தாக்குதல்” என்கிறார்.

     இந்தியாவின் முன்னணி ஆங்கில ஏடுகள் முதல் இணைய இதழ்கள் வரை அனைத்திலும் இந்தித் திணிப்புக்கு எதிரான கட்டுரைகள், ஆய்வுப் படைப்புகள், கருத்துப்படங்கள் போன்றவை எண்ணற்ற அளவில் வெளியாகின்றன.

            “இந்தித் திணிப்பை நிறுத்து” என வலைத்தளங்களில் சிட்டை (hash tag)யை உருவாக்கி இந்திய அளவிலும் உலக அளவிலும் அலைவீசும்படி (trend) பல்லாயிரக்கணக்கில் கருத்துக்களைக் கொட்டிக் குவிக்கிறார்கள் நாடெங்கும் உள்ள இந்தியக் குடிமக்கள்.

     இந்தக் குரலை முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே ஒலித்த முன்னோடிகள் என்பதற்காகத் தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்! ஆனால் நம் மக்கள் இந்தி பயிலாததால் தாங்கள் ஏதோ பெரிதாக இழந்து விட்டதாகப் புலம்புகிறார்கள். இது சரியா?

இந்தி தெரியாததால் நாம் பெற்றவை என்ன?

     இந்தியை ஏற்றுக் கொண்ட மாநிலங்களில் மக்கள் தங்கள் தாய்மொழி இழப்புக்கு அடுத்தபடியாக முன்வைப்பது தாய்மண்ணை இழப்பது குறித்த பெருங்கவலை.

     குறிப்பாக பெங்களூரு போன்ற மாநகரங்களில் முக்கிய பகுதிகளையெல்லாம் இன்றைக்கு இந்திக்காரர்கள் கைப்பற்றி விட்டதாகவும் மண்ணின் மைந்தர்களான தாங்கள் மாநிலத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கு விரட்டப்படுவதாகவும் மக்கள் குமுறுகிறார்கள். நாட்டின் முன்னேறிய பகுதிகளான தென்மாநிலங்களில் இஃது ஒரு முதன்மையான சிக்கலாக இந்நாட்களில் உருவெடுத்து வருகிறது.

     இந்தியாவுக்கு இஃது ஒன்றும் புதிதில்லை. மராட்டியத்தில் இந்தியும் இந்தித் திரையுலகமும் காலடி வைத்தவுடன் அந்த மண்ணின் சொந்தக்காரர்களான மராத்தியர்களும் பல காலமாக அங்கு வாழ்ந்து வந்த எண்ணற்ற தமிழர்களும் சேரிப் பகுதிகளுக்குத் துரத்தப்பட்டதைப் பார்த்த நாடுதான் இது. அதிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ளாமல் மற்ற மாநிலங்களும் இந்தியை உள்ளே விட்டன. விளைவு? இன்று மண்ணின் மைந்தர்களுடைய கண்ணீரால் அம்மாநிலங்களின் மண் நனைகிறது.

     தமிழ்நாட்டிலும் வட இந்தியர்களின் வரவு அதிகம்தான் என்றாலும் இவர்கள் அனைவரும் பிழைக்க வந்த தொழிலாளர்கள் மட்டுமே. மற்ற மாநிலங்களில் உள்ள வட இந்தியர்களைப் போல் இங்கேயே வாழும் எண்ணத்துடன் குடும்பம் குடும்பமாக வந்து குடியேறுபவர்கள் இல்லை. அப்படி வந்தவர்கள் சிலரும் சௌகார்பேட்டை போன்ற ஓரிரு சிறு பகுதிகளைத் தாண்டித் தங்கள் வட்டத்தை விரிவுபடுத்திக் கொள்ள இயலவில்லை. நாம் இந்தியை உள்ளே விடாதது, அதாவது தமிழ்நாட்டுக் கல்விமுறையில் இந்தியை ஒரு பாடமொழியாகச் சேர்க்காததே இதற்குக் காரணம்.

     தமிழ்நாட்டிலும் இந்தியை வர விட வேண்டும் என்பவர்கள் அதற்குச் சொல்லும் முதன்மையான காரணமே இந்தி தெரிந்தால் நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லலாம், தொழில் தொடங்கலாம், பணியாற்றலாம் என்பதுதான். ஆனால் நடந்திருப்பது என்ன? இந்திக்காரர்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்லவும் அங்குள்ள வளங்களைக் கொள்ளையடிக்கவும்தான் மற்ற மாநிலங்களில் அரங்கேறியுள்ள இந்தித் திணிப்பு உதவியிருக்கிறது.

            அதே நேரம் நாம் இந்தியை வர விடாமல் தடுத்து நம் மண்ணை, அதன் மீதான நம் ஆளுமையை, நம் தொழில்களை, சொத்துக்களை எல்லாம் பெரிதும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் கண்கூடான உண்மை.

      இந்தித் திணிப்பு எதிர்ப்பால் இப்படி நாம் மட்டும் பலனடையவில்லை. நாம் நடத்திய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால் மற்ற மாநிலங்களும் பற்பல பெரிய பலன்களை அடைந்துள்ளன. குறிப்பாக மொழி வளர்ச்சி!

     இன்றைக்கு இந்தியைப் போலவே மற்ற மாநில மொழிகளிலும் மிகப் பெரும் அளவில் ஊடகத்துறை செழித்தோங்கி நிற்கிறது. இதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் என இந்தத் துறையின் மதிப்புப் பல்லாயிரம் கோடி. நேரிடையாகவும் மறைமுகமாகவும் இதில் வேலைவாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கை ஏராளம் ஏராளம். இதே போல் இணையத்திலும் இன்று இந்தியாவின் பல மொழிகள் பெருவளர்ச்சி கண்டுள்ளன.

     எனினும் இவை அனைத்தும் இந்தியை அலுவல் மொழியாக ஏற்காத மாநிலங்களில் மட்டுமே. இந்தி அலுவல் மொழியாக உள்ள எந்த மாநிலத்திலும் இந்தி தவிர்த்த மற்ற மொழிகளில் வளர்ச்சியைக் காண முடியவில்லை. இத்தனைக்கும் அம்மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை அங்கே பேராயிரங்களில் (million)! அதுவும் மாநில அளவில் பார்த்தால் பீகார், சார்கண்டு (Jharkhand) போன்ற மாநிலங்களில் இந்தியை விட மற்ற மொழிகளே பெரும்பான்மை மக்களின் மொழிகளான உள்ளன! இருப்பினும் இம்மொழிகளில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த வளர்ச்சியும் இல்லை.

     வெறும் ஒன்பது மாநிலங்களில் இந்தி அலுவல் மொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டதற்கே அம்மாநிலங்களின் மொழிகள் இந்த நிலையை அடைந்திருக்கின்றன. எனில் எல்லா மாநிலங்களுக்கும் அலுவல் மொழியாக இந்தி ஆக இருந்ததை நாம் மொழிப்போரால் தடுக்காமல் விட்டிருந்தால் இந்திய மொழிகள் என்ன நிலைமைக்கு ஆளாகியிருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! அப்படிச் சிந்தித்துப் பார்த்தால் தமிழ் மட்டுமின்றி இன்று வளர்ச்சியடைந்துள்ள ஒவ்வோர் இந்திய மொழியின் அடிவேரிலும் தமிழ் மாணவர்கள் சிந்திய உதிரத்தின் தடயத்தைக் காணலாம்.

     அடுத்தது குமுக முன்னேற்றம்!

            ஒரு குமுகத்தின் முன்னேற்றத்துக்கு இன்றியமையாக் காரணியாகச் சுட்டப்படுவது தரமான கல்வி. தரமான கல்விக்கான இலக்கணக்கூறுகள் பல இருந்தாலும் அவற்றுள் உலக அறிஞர்கள் அனைவரும் ஒருமனமாக ஏற்றுக் கொள்வது தாய்மொழி வழிக் கல்வி! அப்பேர்ப்பட்ட தாய்மொழி வழிக் கல்வி இன்றும் இந்திய மண்ணில் உயிர்ப்போடு இருக்கிறது என்றால் அதற்குக் காரணமும் நாம் நடத்திய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டமே!

     தமிழ்நாட்டின் மொழிப்போர் வரலாற்றை எழுதுபவர்கள் இந்தி ஒரே அலுவல் மொழியாக ஆக்கப்பட்டால் பள்ளிகளில் பயிற்று மொழியாக இந்தியே அமரும் என்பது போன்ற அச்சங்களே அதற்கு எதிராக மாணவர்கள் போராடக் காரணமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். இன்று இந்தியை அலுவல் மொழியாகக் கொண்டுள்ள மாநிலங்களில் அதே நிலைமைதான் நிலவுகிறது. 21% பேர் மட்டுமே இந்தி பேசும் சார்க்கண்டு மாநிலத்தில் கூட – கவனிக்க! இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளவர்கள் எனச் சொல்லவில்லை, பேசுபவர்கள் எண்ணிக்கையே இவ்வளவுதான் – அம்மாநிலத்தின் அலுவல் மொழி என்பதால் இந்திதான் பயிற்றுமொழியாக இருக்கிறது.

            எனில் முழு ஒன்றியத்துக்கும் இந்தி அலுவல் மொழியாகியிருந்தால் தாய்மொழி வழிக் கல்வி என்பதை நாம் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது! இது புரிந்தால் நாடு முழுதும் பற்றிப் படர இருந்த எப்பேர்ப்பட்ட ஒரு கல்விச் சீரழிப்பைத் தமிழர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துத் தடுத்து நிறுத்தி அனைவருடைய தாய்மொழி வழிக் கல்வியையும் நாட்டின் முன்னேற்றத்தையும் உறுதி செய்திருக்கிறார்கள் என்பதை உணர முடியும்.

     ஆதலால் இந்தித் திணிப்பு எதிர்ப்பால் எதிர்கொள்ளும் சில சிக்கல்களைப் பெரிதாகப் பேசுபவர்கள் உண்மையில் பல பெரிய இழப்புகளிலிருந்து அதுதான் நம்மைத் தடுத்து ஆட்கொண்டிருக்கிறது என்பதை உணர்வதோடு மற்ற மாநிலங்களின் மொழி வளர்ச்சியிலும் மொத்த ஒன்றியத்தின் முன்னேற்றத்திலும் கூட அதன் பங்கு இன்றியமையாதது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

     ஆனால் இவையெல்லாம் இப்பொழுது பழங்கதைகள். எப்பொழுது தமிழ்நாட்டில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் (CBSE) பள்ளிகள் பெருகத் தொடங்கினவோ அப்பொழுதே இங்கும் இந்தி நுழைந்து விட்டது. இன்றைக்கு நடுத்தட்டுத் தமிழ்க் குடும்பங்களின் பிள்ளைகளும் மாநகரப் பிள்ளைகளும் அந்தப் பாடத்திட்டத்தில்தாம் படிக்கிறார்கள். போதாததற்குத் தேசியக் கல்விக் கொள்கை எனும் பெயரில் தற்பொழுது அரசுப் பள்ளிகள் முதற்கொண்டு அனைத்துத் தமிழ்நாட்டுப் பள்ளிகளையும் இந்தி வளைத்துக் கொண்டு விட்டது.

     எனவே தமிழ்நாட்டின் அரணும் தகர்ந்து விட்டது! தமிழ் மண்ணும் மற்ற மாநிலங்கள் போல் இந்திக்காரர்களின் வேட்டைக்காடாக மாறும் நாள் நெருங்கி விட்டது! தமிழும் இப்பொழுது மற்ற மொழிகளைப் போல் இந்தியோடு போராட வேண்டிய கட்டம் வந்து விட்டது! இதனால்தான் இந்தித் திணிப்பு குறித்து இப்பொழுது நாம் அதிகம் எச்சரிக்க வேண்டியிருக்கிறது.

     அடுத்தது சமற்கிருதத் திணிப்பு.

சமற்கிருதத் திணிப்பு என்ன செய்யும்?

     காங்கிரசாவது இத்தனை காலமும் இந்தியை மட்டும்தான் தீவிரமாகத் திணித்து வந்தது. ஆனால் இன்றைய பா.ச.க., அரசு சமற்கிருதத்தையும் அதே வேகத்தில் திணிக்கிறது.

     ஆட்சியாளர்கள் சமற்கிருதத்தைப் படிக்குமாறு மக்களை ஊக்குவிக்கிறார்கள்.

     வேறு எந்த மொழியையும் விடப் பன்மடங்கு நிதி சமற்கிருதத்துக்கு ஒதுக்கப்படுகிறது.

     மாநாட்டு மலர்கள் போன்ற அரசு வெளியீடுகளில் சமற்கிருத முழக்கங்கள் பளிச்சிடுகின்றன.

            “சமற்கிருதமே இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாய்” எனப் பச்சைப் பொய்யை நாடாளுமன்றத்திலேயே கூசாமல் முன்மொழிகிறார் ஆளுங்கட்சி அமைச்சர்.

     எல்லாவற்றையும் விடக் கொடுமையாக, கேட்க ஆளே இல்லாத சமற்கிருதத்தில் அரசுத் தொலைக்காட்சியின் அனைத்து மாநில அலைவரிசைகளிலும் செய்தி அறிக்கை ஒளிபரப்ப உத்தரவிடுகிறது அரசு.

     இவ்வளவும் எதற்காக? சமற்கிருதத்தை வளர்க்கவா? இல்லை. சமற்கிருதத்தின் மூலம் மொத்த நாட்டையும் காவிமயமாக்க!

     அரசு அதிகாரத்தின் மொழி இந்தி என்றால் மத அதிகாரத்தின் மொழி சமற்கிருதம். இந்தியை எல்லாரும் கற்றுக் கொண்டால் எப்படி இந்திக்காரர்களின் கை ஓங்குகிறதோ அதே போல சமற்கிருதத்தை எல்லாரும் கற்றுக் கொண்டால் இந்து மதத்தின் கை ஓங்கும்.

     ஏற்கெனவே நாடெங்கும் அந்த மதத்தின் கைதான் ஓங்கியிருக்கிறது. 2014ஆம் ஆண்டு பா.ச.க., அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இம்மண்ணில் இந்து மதம் சார்ந்த குற்றங்களும் வன்முறைகளும் எந்தளவுக்குப் பல்கிப் பெருகியிருக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே.

     அதை விட முதன்மையாக, ‘மதச்சார்பற்ற நாடு’ என அரசியலமைப்புச் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ள இந்நாட்டில் அண்மைக்காலமாக நாடாளுமன்றம், மேலாண்மை, நீதித்துறை, ஊடகம் என்று குடியரசின் நான்கு தூண்களிலும் இந்து மதச் சார்புத்தன்மை குறித்த குற்றச்சாட்டுகள் அறையப்பட்டுள்ளன. பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் இனி இங்கு வாழவே முடியாதோ என அம்மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் அனைவருமே அஞ்சும் அளவுக்கு நாடு முழுவதும் இந்து மயமாகி வருகிறது.

     இப்படி ஒரு சூழலில் அதே இந்து மதத்தின் மொழியை அனைவரும் கற்றுக் கொண்டு அந்த மதத்தை இன்னும் வளர்த்து விடுவது எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

     கேட்டால், சமற்கிருதம் பண்பாட்டு மொழி என்கிறார்கள். உண்மைதான். ஆனால் எந்தப் பண்பாட்டின் மொழி? இந்து மதத்தின் தோற்றுவாயான ஆரியப் பண்பாட்டின் மொழிதானே ஒழிய இந்தியாவிலுள்ள எல்லாப் பண்பாடுகளுக்குமான மொழி இல்லை சமற்கிருதம்.

     இந்தியாவில் மொத்தம் நூறல்ல, ஆயிரமல்ல 19,569 தாய்மொழிகள் இருப்பதாகச் சொல்கிறது இந்திய மக்கள் மொழியியல் கணக்கெடுப்பு (PLSI) எனும் அமைப்பு. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பண்பாடு இருப்பதாக மொழியியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது, குட்டிக் குட்டியாக ஏறக்குறைய இருபதாயிரம் பண்பாடுகள் கொண்ட பண்பாட்டுப் பேரண்டம் இந்த நாடு!

     உயிர்ப்புடன் விளங்கும் இத்தனை ஆயிரம் பண்பாடுகளுக்கும் சமற்கிருதம் எனும் இறந்து போன ஒரு மொழிதான் பண்பாட்டு மொழி எனச் சொல்வது எப்பேர்ப்பட்ட வல்லாதிக்கப் போக்கு! எவ்வளவு பெரிய பண்பாட்டு வன்முறை!

     சரி, அப்படியே ஏதோ ஒரு காரணத்துக்காக சமற்கிருதத்தை ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும் அது முன்மொழியும் ஆரியப் பண்பாடென்ன நல்ல பண்பாடா?

     நால்வருணக் கோட்பாடு கடவுள் படைத்தது எனக் கூறும் பகவத்கீதை, சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் பெண்ணடிமைத்தனத்தையும் கொடூரமாக ஊக்குவிக்கும் மனுநூல், இது போன்ற பல பிற்போக்குத்தனங்களையும் மூடநம்பிக்கைகளையும் காலங்காலமாக இம்மண்ணில் வளர்த்து    வரும் இன்ன பிற தொன்மக் கதைகள், மதவெறி நூல்கள் அனைத்தும் ஆரியப் பண்பாட்டின் அடிப்படையிலானவையே; சமற்கிருதத்தில் எழுதப்பட்டவையே! எனில் இந்த மொழியை வளர்ப்பதன் மூலம் எத்தகைய பண்பாட்டை, எப்படிப்பட்ட நாகரிகத்தை மக்களிடம் அரசு வளர்க்க விரும்புகிறது என்பது எல்லாவற்றையும் விட முதன்மையான கேள்வி!

     மொத்தத்தில், இந்தித் திணிப்பு இந்த மண்ணை முழுவதும் இந்தி நாடாக்கியது போல அடுத்து இதை முழுவதும் இந்து நாடாக்கும் முயற்சியாகவே தென்படுகிறது பாரதிய சனதாவின் சமற்கிருதத் திணிப்பு.

     ஆனால் இன்னும் நம் மக்களுக்கு இதன் தீவிரம் உறைக்கவில்லை. “செத்த மொழியால் என்ன செய்து விட முடியும்?” என நினைக்கிறார்கள். சமற்கிருதத்துக்கு உயிர் வந்து பல ஆண்டுகள் ஆகின்றன என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்! வரலாற்றின் எந்தக் காலக்கட்டத்திலுமே மக்களின் பேச்சுப் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த மொழி அது. ஆனால் இந்திய அரசுகள் மாறி மாறி ஊட்டி வளர்த்ததால் இன்றைக்கு அதைப் பேசுவோர் எண்ணிக்கை 24,709!

     இந்தியும் இப்படித்தான் ஒரு காலத்தில் வட இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் மொழியாக இருந்தது. ஆனால் இந்திய அதிகார மையம் மற்ற மொழிகளையே அதற்கு இரையாகப் போட்டு வளர்த்துத் தற்பொழுது உலகின் 3ஆவது பெரிய மொழியாக அதைப் பூதகர வளர்ச்சி பெற வைத்திருக்கிறது. அதிகார மட்டத்தினர் மனம் வைத்தால் எதுவும் முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

     அப்படியானால் இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?

இந்திக்காரர்கள் உட்பட அனைவரும், அனைத்து மொழிகளும் வாழ ஒரே வழி

     மொழிகள், மக்கள், நாடு என அனைத்துக்கும் கேடு விளைவிக்கும் இந்த மொழியரசியலுக்கு முடிவு கட்ட வேண்டுமானால் நடைபெறும் இந்த எல்லா முறைகேடுகளுக்கும் மூலக் காரணம் எது என்பதைப் பார்க்க வேண்டும்.

     சமற்கிருதத் திணிப்பைப் பொறுத்த வரையில் பா.ச.க., ஆட்சி மாறினாலே அஃது அடங்கி விடும். ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் தலைவிரித்தாடும் இந்தித் திணிப்புக்கு ஊற்றுக்கண்ணாக இருப்பது அம்மொழிக்கு வழங்கப்பட்டுள்ள நடுவணரசின் அலுவல் மொழி எனும் தகுதியே! இந்திக்காக இங்கே அரங்கேற்றப்படும் எல்லா அரசியல் முறைகேடுகளுக்கும் சட்டப் பாதுகாப்பு வழங்குவது அதுதான்.

     அப்படி நடக்கும் இந்தி மேலாதிக்கத்தால்தான் மற்ற மொழியினரும் இந்தி கற்க உந்தப்படுகிறார்கள். விளைவு? எல்லா மொழிகளும் அழிகின்றன. நாடு முழுதும் ஒரே இனத்தின் ஆளுகைக் கீழ் செல்கிறது. இன்ன பிற எல்லாக் குளறுபடிகளும் சீரழிவுகளும் நடக்கின்றன.

     இதனால் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள 22 மொழிகளையும் நடுவண் அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என நீண்ட காலமாகத் தமிழ்நாடு வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதுவும் முறையான தீர்வாகாது!

     ஏற்கெனவே பார்த்தது போல 19,569 தாய்மொழிகள் உயிர்த்துக் கிடக்கும் பெருநிலம் இது. இவற்றுள் வெறும் 22 மொழிகளை மட்டும் அலுவல் மொழியாக்குவது இதர மொழிகளுக்கு இழைக்கும் பெரும் இரண்டகம் (betrayal)!

     இந்தி எனும் ஒரு மொழியை மட்டும் அலுவல் மொழியாக்கியதால் மற்ற மாநில மொழிகளும் அதன் மக்களும் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்களோ அதே விளைவைத்தான் இதுவும் தரும். சொல்லப் போனால் பிற அட்டவணை மொழிகளுக்காவது மாநில அளவிலான அலுவல் மொழித்தகுதி இருப்பதால் இத்தனை கால இந்தி மேலாதிக்கத்துக்குப் பிறகும் அவை பிழைத்துக் கிடக்கின்றன. ஆனால் அப்படி எந்தப் பாதுகாப்பும் இல்லாதவை சிறிய மொழிகள். ஆகையால் அட்டவணை மொழிகள் அனைத்தும் அலுவல் மொழியானால் இந்தச் சிறிய மொழிகள் வெகு விரைவில் அழிந்து போகும். அதற்காக இத்தனை மொழிகளையும் அலுவல் மொழியாக ஆக்கவும் முடியாது. அப்படியே ஆக்கினாலும் அதனால் எந்தப் பலனும் இருக்காது.

     எனவே எந்தக் காலத்திலோ இந்திக்கு வழங்கப்பட்டு விட்ட ஒரு தவறான உயர்விடத்துக்காக இத்தனை மொழிகளையும் அந்த இடத்துக்கு உயர்த்துவதை விட இந்தி எனும் ஒரு மொழியை அந்த இடத்திலிருந்து இறக்குவதே எளிதான, பொருத்தமான செயலாக இருக்க முடியும்.

     ஆம்! இந்தியை அலுவல் மொழிப் பட்டியலிலிருந்து நீக்கி ஆங்கிலம் மட்டுமே இந்திய ஒன்றியத்தின் ஒரே அலுவல் மொழி என அறிவிப்பதே இந்த எல்லாக் குழப்பங்களுக்கும் ஒரே தீர்வு! இப்படிச் செய்தால்,

            * இந்தி உட்பட அனைத்து மொழிகளும் ஒரே தரவரிசையில் இடம்பெறும்.

            * மத்திய அரசின் அலுவல் நடைமுறைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என்பதால் இந்தித் திணிப்பு நடைபெறாது.

            * எல்லாரும் அவரவர் தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் மட்டும் பயில்வதால் வெளிமாநிலத்தவர் குடியேற்றம் குறையும். பிற மாநிலத்தவரிடம் நம் மண்ணைப் பறிகொடுக்கும் கொடுமைகள் ஒழியும்.

            * தாய்மொழிக் கல்வி, ஆங்கிலக் கல்வி இரண்டு மட்டும் கிடைப்பதால் பாடச்சுமை குறைந்து தாய்மொழியறிவும் உலகமொழிப் புலமையும் மேம்படும்.

     ஆம்! கடைசியில் இந்தி மொழியினருக்கும் இது நலம் பயப்பதாகவே முடியும். பொதுவாக, இந்திக்காரர்களுக்குப் போதுமான ஆங்கிலப் புலமை இல்லை. அரசு – தனியார் நிறுவனங்களில் உயரிய பொறுப்பில் இருக்கும் இந்திக்காரர்களுக்குக் கூட ஆங்கிலம் சரளமாக வருவதில்லை. மாநிலம் – தேசியம் என எல்லா இடங்களிலும் அவர்கள் தாய்மொழியே அலுவல் மொழியாக இருப்பதால் ஆங்கிலம் கற்றுக் கொள்ளப் போதுமான உந்துதல் அவர்களுக்கு இல்லை.

     எனவே இந்தியின் மத்திய அரசு அலுவல் மொழித் தகுதியை நீக்குவது அவர்களுக்கும் ஆங்கிலத்தின் தேவையை உணர்த்தும். நம் வட இந்திய உடன்பிறப்புகளுக்கு உலகின் கதவுகளைத் திறந்து விடுவதாகவே அஃது அமையும்.

     ஆதலால் “இந்தித் திணிப்பை நிறுத்து”, “சமற்கிருதத் திணிப்பை நிறுத்து” என இனியும் ஒவ்வொன்றுக்குமாகக் கெஞ்சிக் கொண்டிராமல் “இந்தியின் நடுவணரசு அலுவல் மொழித் தகுதியை நீக்கு!” என மொத்த ஒன்றியமும் ஒற்றைக் குரலில் முழங்குவோம்!

     அதுதான் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள அத்தனை ஆயிரம் மொழிகளுக்கும் அவற்றைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளவர்களுக்கும் சம அதிகாரத்தை வழங்கும் தீர்வாக இருக்கும்!

     அப்படிச் சமமாக அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது மட்டுமே இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் தேசிய ஒருங்கிணைப்பு நடவடிக்கையாகவும் இருக்கும்!

தாய்மொழிகள் காப்போம்!

இந்திய ஒற்றுமை காப்போம்!


உசாத்துணை:
1. தமிழ் – ஆங்கில விக்கிப்பீடியா
2. பெரியோர்களே… தாய்மார்களே! – 72, ப.திருமாவேலன்
3. How a Bihari lost his mother tongue to Hindi, ரோசன் கிசோர்
4. Hindi imposition and the impending death of regional languages, புருசோத்தமா பிலிமேல்
5. காணாமல் போன 780 மொழிகளைக் கண்டறிந்த மொழி ஆர்வலர், சௌதிக்கு பிசுவாசு
6. The slow death of Bhojpuri and Awadhi, கர்கா சாட்டர்ச்சி
7. முடியவில்லை மொழிப்போர்! முடித்து வைக்க வேண்டாவா மொழித்திணிப்புகளை!, இலக்குவனார்  திருவள்ளுவன்
8. இந்தித்திணிப்பு : தலைவர்களே அறியாமையில் உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்?, இலக்குவனார் திருவள்ளுவன்

 சான்றுகள்:

  1. மொழிகள், தாய்மொழிகள் பேசுவோர் எண்ணிக்கை காட்டும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சாரம் – 2011
  2. தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்: இராமதாசு வலியுறுத்தல்
  3. AdSense now speaks Hindi

என்றும் அன்புடன்:

~~.பு.ஞானப்பிரகாசன்
(E.Bhu.Gnaanapragaasan)


http://agasivapputhamizh.blogspot.com